திருவெறும்பூர், மார்ச் 20- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் ஏற்பாட்டில் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் தமிழ், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் சமத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை மாநாடு மும்பையில் நடைபெற்றது. பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினர்.
இந்நிகழ்விற்குத் தமிழ்நாட்டில் இருந்து அய்ம்பதிற்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கு பெற்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலில், ஆலோசனையில் மும்பைத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இவ்விரண்டு நாள் மாநாடு, அதன் அனுபவங்கள், சிறப்புகள், பயணங்கள் ஆகியவைக் குறித்து திருவெறும்பூர் பெரியார் பேசுகிறார் 16 ஆவது நிகழ்ச்சியில் பெருவளப்பூர் வெ.சித்தார்த்தன் பேசினார்.
“மராத்திய மண்ணில் திராவிடர் கழகம் எப்படி செயல்படுகிறது, பல்வேறு அமைப்புகள் மற்றும் மக்களின் ஆதரவு நிலை குறித்து எடுத்துக் கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாநாட்டை அறிவித்தவுடன், மும்பைத் தோழர்களின் சுறுசுறுப்பு, அவர்களின் ஒருங்கிணைப்புப் பணிகள், மாநாட்டின் சாதனைகள் ஆகியவைக் குறித்தும் வெ.சித்தார்த்தன் விளக்கமாக எடுத்துக் கூறினார்.
15.03.2026 ஞாயிறன்று மாலை நடைபெற்ற இந்நிகழ்விற்கு மு.சேகர், பு.வி.கியூபா, ப.கவு.யாழினி, மு.ஆண்டிராஜ், ம.ஆறுமுகம், ம.சங்கிலிமுத்து, இரா.தமிழ்ச்சுடர், சி.பஞ்சலிங்கம், ஆர்.விஜயராகவன், சி.கனகராசு, அ.சிவானந்தம், ஆ.பாண்டிக்குமார், ஆ.இராஜாராமன், க.புனிதா, வி.சி.வில்வம் உள்ளிட்ட தோழர்கள் பங்குபெற்றனர்.
