மின்சாரம்
‘சுயம்பு சாமியாராக’ விளம்பரப்படுத்தப்பட்ட ஆசாராம் பாபு (இயற்பெயர்: அசுமல் துமல் ஹர்பலானி) மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பல வழக்குகளில் அவர் ‘குற்றவாளி’ எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை (ஜோத்பூர் வழக்கு – 2013)
குற்றச்சாட்டு: 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகிலுள்ள தனது ஆசிரமத்தில், 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
தீர்ப்பு: இந்த வழக்கில் 2018ஆம் ஆண்டு ஜோத்பூர் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
- பெண் சீடர் மீதான பாலியல் வன்கொடுமை (குஜராத் வழக்கு – 2013)
குற்றச்சாட்டு: 2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்த சூரத்தைச் சேர்ந்த ஒரு பெண் சீடரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
தீர்ப்பு: காந்திநகர் நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கில் இவரைக் குற்றவளி என அறிவித்து, மீண்டும் ஓர் ஆயுள் தண்டனையை விதித்தது.
- நில அபகரிப்பு மற்றும் மோசடி: குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆசிரமங்கள் அமைக்க அரசு நிலங்களையும், பொது நிலங்களையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததாக இவர் மீது பல புகார்கள் உள்ளன.
ஆவணங்களை போலியாகத் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்டதாகவும் விசாரணைகள் நடைபெற்றன.
- சாட்சிகள் மீதான தாக்குதல்: வழக்கு விசாரணையின் போது, இவருக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சுமார் 9 சாட்சிகள் தாக்கப்பட்டனர், அதில் 3 பேர் (அமிருத் பிரஜாபதி, அகில் குப்தா உள்ளிட்டோர்) கொல்லப்பட்டனர். ஒரு சாட்சி திடீரென கண்டறிய முடியா வண்ணம் காணாமல் போனார்.
தற்போதைய நிலை:
தற்போது அவர் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அண்மையில் (நவம்பர் 2025 மற்றும் மார்ச் 2026 தகவல்களின்படி) அவரது 80-க்கும் மேற்பட்ட வயது மற்றும் உடல்நலக் குறைபாடுகளை (இதயநோய், ரத்தசோகை போன்றவை) கருத்தில் கொண்டு, சிகிச்சை பெறுவதற்காக நீதிமன்றம் அவருக்கு இடைக்காலப் பிணை வழங்கியுள்ளது. பிணை காலத்தில் அவர் மதச் சொற்பொழிவுகள் ஆற்றவோ, ஆதரவாளர்களைச் சந்திக்கவோ கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவரைப் போலவே இவரது மகன் நாராயண் சாய் மீதும், பாலியல் வன்கொடுமை புகார்கள் நிரூபிக்கப்பட்டு, அவரும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற இந்தக் குற்றவாளிக்குச் சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது. ‘இந்தப் பிணைக் காலத்தில் மதச் சொற்பொழிவுகள் ஆற்றவோ, ஆதரவாளர்களை சந்திக்கவோ கூடாது’ என்பதுதான் அந்த முக்கிய நிபந்தனை!
நீதிமன்றத்தின் அத்தகைய நிபந்தனைகளை அவர் கடைப்பிடிக்கிறாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி! நீதிமன்ற நிபந்தனையைக் குப்பைக் காகிதமாகக் கசக்கி எரிந்து, தனது வழமையான காரியத்தில் தான் ஈடுபட்டுள்ளார்.
ஒன்றியத்தில் இருப்பதோ மோடி தலைமையிலான ஆட்சி! அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட அடிப்படைக் கட்டுமானமான மதச் சார்பின்மையைக் காலில் போட்டு மிதிக்கும் ஆட்சி!!
சிறுபான்மையின மக்களின் வழிபாட்டுத் தலத்தை இடிப்பது, ராமன் கோவில் கட்டுவது, அடுத்த இலக்கு காசி, வாரணாசி தான் என்று குறி வைப்பது, குடிஉரிமை (திருத்தம்) சட்டம் (Citizenship Amendment Act – 2019) என்ற பெயரால் முஸ்லீம்களை நாட்டை விட்டு விரட்டுவது – திருப்பரங்குன்றம் தீபத் தூண் வரை மதப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு கொம்பு சுழற்றுவதுதான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் தொங்கு சதையான அதிகார பீடத்தில் இருக்கும் பிஜேபி வகையறாக்களின் அன்றாடப் பெரும் பணியாகும்.
இத்தகைய சூழலில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஆசாராம் போன்ற சாமியார்கள் பிணையில் இருக்கிறோம் என்பதைப் பற்றிச் சற்றும் சட்டை செய்யாமல், நீதிமன்ற நிபந்தனைகளைப் பாதக் குறட்டுக்கும் கீழ் போட்டு வழக்கமான காரியங்களில் ராஜ நடை போட்டுக் கம்பீரமாக – உலா வருவதில் ஆச்சரியம் இல்லைதான்.
பிரதமர் நரேந்திர மோடி கூட சொல்லியிருக்கிறார். “எனக்கு மன உளைச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் நான் தேடிச் செல்லும் இடம் சாமியார் ஆசாராமின் மோட்சக் குடில்தான்” என்று கூறியுள்ளார் என்றால், இத்தகைய சாமியார்கள் எந்த எல்லைக்குத் தான் செல்லமாட்டார்கள்!
2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி நிர்வாண சாமியார் ஒருவர் அரியானா மாநில சட்டமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து 40 நிமிடங்கள் ‘உபதேசம்’ செய்ததுண்டே!
அது இருக்கட்டும். இரட்டை ஆயுள் தண்டனை பெற்று பிணையில் இப்பொழுது இன்பச் சுற்றுலாப் பயணம் செய்து கொண்டிருக்கும் ஆசாராம் நீதிமன்றத்தில் குற்றக் கூண்டில் ஏறி என்ன கூறினார்?
படியுங்கள் பதற்றப்படாமல்,
“எங்கள் கடவுள் கிருஷ்ணன் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார். அதே போலத்தான் – பிரம்ம சொரூபமான சாதுக்களாகிய நாங்களும் பெண்களுடன் கூடுவது தெய்வச் செயலுக்கு ஒப்பானதாகும். மக்கள் என்னைத் தெய்வமாகப் பார்க்கின்றனர். என்மீது பாலியல் கொடுமை. குற்றச்சாட்டு என்பது உண்மையோ அல்லது புனையப்பட்டதோ என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நாங்கள் தெய்வீக சக்தி பெற்றவர்கள். மதநூல்களின்படி என்னைப் போன்ற சாதுக்களை விசாரணை நடத்துவதும், சிறையில் வைப்பதும் இந்து மதத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலே ஆகும். இதை மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்” என்று நீதிமன்றத்திலே ஒருவரால் சொல்ல முடிகிறது என்றால் – அதன் பின்னணி என்ன?
இந்து மதத்தின் – அதன் முக்கிய கடவுளான கிருஷ்ணனின் ‘காமக் குரோதக் குலாவல்’ என்ன விதமான ஒழுக்கம் என்பதைச் சிந்திப்பீர்!
கடவுள் கிருஷ்ணனின் காம வெறியாட்டங்களைப் பற்றிப் பகுத்தறிவுவாதிகள் கூறினால், எகிறிக் குதிக்கும் ஆசாமிகள், சாமியார் ஒருவரே சுண்டக் காய்ச்சிக் கொடுத்திருக்கிறாரே – பதில் என்ன?
சாமியார்களின் கால்களில் தண்டமிடும் மக்களின் மதியை என்னவென்று கூறுவது?
தேவை பகுத்தறிவு – சிந்திப்பீர்.
