இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக் கோரி தந்தை பெரியார் மாபெரும் போராட்டத்தை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக ஜாதியைப் பாதுகாக்கும் (26.11.1957) சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். (3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்க அவசரமாக சட்டம் கொண்டு வரப்பட்டது).
திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த பட்டுக்கோட்டை ராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமியும் சிறையிலேயே உயிர் நீத்தனர். சிறைக்குள்ளேயே புதைத்து விட்டனர்!
அன்னை மணியம்மையார் இந்தச் செய்தியறிந்து கொதித்தெழுந்தார்.
அன்னை மணியம்மையார் அவர்கள் நேரடியாக அப்போதைய முதலமைச்சர் காமராசர் அவர்களை சந்தித்ததன் விளைவாக சிறைக்குள் புதைக்கப்பட்ட மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகியாரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
உடல்கள் பெறப்பட்ட பிறகு, திருச்சியில் அன்னை மணியம்மையார் தலைமையில் எழுச்சிமிக்க இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கான தொண்டர் களும், பொதுமக்களும் திரண்டு வந்து “வீர வணக்கம்” செலுத்தினர்.
அன்னை மணியம்மையாரின் தலைமைப் பண்பையும் உறுதிப் படுத்தியது.
ஜாதி ஒழிப்புக்காக உயிர்நீத்த அந்த வீரர்களின் தியாகம் இன்றும் திராவிட இயக்க மேடைகளில் நினைவு கூரப்படுகிறது.
