கேள்வி: அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எஃப்.எஸ் பதவிகளில் பார்ப்பனர் – உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் தலைவர்களும், ஏராளமான இளைஞர்களும் – மாணவர்களும் கலந்துகொண்டு எழுச்சி முழக்கமிட்டு ஆர்ப்பரித்த பாங்கு ஒன்றிய அரசை திரும்பிப்பார்க்க வைக்குமா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: மண்டல் பரிந்துரைகளை 10 ஆண்டுகள் கிடப்பில் போட வைத்த பின் – அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட மக்களின் விழிப்புணர்வை உருவாக்கிய பின், எப்படி ஒரு வி.பி.சிங், முதல் கட்டப் பரிந்துரையில் வேலைவாய்ப்பிலும், பிறகு தி.மு.க. உள்பட முற்போக்குக் கட்சிகள் இணைந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) அரசு – ஒன்றியத்தில் அமைந்தபோது, இரண்டாவது கட்டமாக கல்வியிலும், 27 சதவிகித இடஒதுக்கீடு ஆணை. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பல்வேறு எதிர்நீச்சல்களுக்கிடையே செயல்படுத்திய வரலாற்றின் பாடம் போல, இடையறாத போராட்டமும், விழிப்புணர்வும்தானே அசையாத அம்மிக் கற்களையும் அசைய வைத்தது.
கேள்வி: செங்கை மறைமலை நகரில் நடைபெற்ற (04.10.2025) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவைத் தொடர்ந்து மும்பை (ஜனவரி 03,04, 2026), பெங்களூரு (28.02.2026) மற்றும் தஞ்சையில் (21.02.2026) நடைபெற்ற திராவிடர் கழக மகளிர் அணி – மகளிர் பாசறை, இளைஞர் அணி, திராவிட மாணவர் கழகம் இணைந்து நடத்திய மாநாடுகள் ஒன்றை ஒன்று விஞ்சும் வகையில் அமைந்ததோடு மட்டுமன்றி வரலாற்றுச் சாதனை படைத்த மாநாடாக அமைந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?
– ஆர். சகுந்தலா, தாம்பரம்.
பதில்: இயக்கத்தின் சிறப்பான வளர்ச்சி புதிய இளைஞர்கள், மகளிர்களின் ஈர்ப்புக்கும் நல்ல அடையாளம். பெரியார் உலகமயமும் ஆகிறார் – உள்ளூரிலும் வேகமாகப் பரவுகிறார் என்பதற்கான சான்று!
கேள்வி: கருநாடக மாநிலம் கடக் மாவட்டம் சிங்கத்தலூர் கிராமத்தில் அரசு சார்பில் முடித் திருத்தகம் திறந்து வைத்துள்ளதைப் போன்று தமிழ்நாட்டிலும் ‘திராவிட மாடல்’ அரசு நடைமுறைப்படுத்த ஆவன செய்யுமா?
– எஸ்.பத்ரா, படப்பை.
பதில்: 2026 மே மாதம் நடைபெறும் தேர்தலில் வெற்றிக்கனி பறித்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், இவை போன்ற புரட்சிகளைப் பிறகு எளிதாகச் செய்து மேலும் பல பொன்னேடுகளை வரலாற்றில் இணைப்போம்.

கேள்வி: மேனாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் சரியான நேரத்தில் – சரியான இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பது அவருக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாமா?
– ம.முனியாண்டி, பெரியகுளம்.
பதில்: நிச்சயமாக! பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.க்கு சரியான அதிர்ச்சி! உண்மை கொள்கையாளர்களுக்கு மகிழ்ச்சி!!
கேள்வி: சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் முதியோர், கைம்பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த திருநங்கையர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.38 லட்சம் சிறப்பு நிதியாக தலா ரூ.2,000 என வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருப்பது தேர்தல் ஆதாயத்துக்காக என்று குறை கூறுகின்றனரே – அதுபற்றி?
– ஜெ.கோவிந்தம்மாள், திருவண்ணாமலை.
பதில்: அரசியல் எதிரிகள் – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத் தொகையை தேர்தல் மாதங்களில் தடுக்க திட்டமிட்டதை உடைத்து, புதிய வியூகத்தினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அதன் அரசியல் கொத்தடிமைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டார் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கேள்வி: ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து போர் தொடுத்து வரும் அவலநிலை முடிவுக்கு வந்து, எப்போது மக்கள் நிம்மதி அடைவார்கள்?
– ரேவதி சுதாகர், புதுவை.
பதில்: அதைத்தான் உலகமும், நாநிலம் முழுவதும் உள்ள நல்ல உள்ளங்கள் எதிர்பார்க்கின்றன! அய்க்கிய நாடுகள் அவை என்பது ‘திருஷ்டி கழிக்க வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மையா?’ மகாமகா வெட்கக் கேடு! ‘புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்’ என்பது நம் புரட்சிக்கவிஞர் கூற்று! நாம் என்றும் எதிர்பார்ப்பவர்களே!!
கேள்வி: இந்தியாவில் அதிக பொறியாளர்களை (17 சதவீதம்) உருவாக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக ஒரு பிரபல நாளேடு புள்ளிவிவரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளதே?
– ந.சுமதி, கோவை.
பதில்: அதில் மட்டுமா? “சிங்கிள் என்ஜின்” ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சரித்திர சாதனை – உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி எல்லாவற்றிலும் சிகரம் தொட்ட சாதனை வரலாற்றின் விளைச்சலே இப்படியொரு கல்வி வளர்ச்சி!
கேள்வி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் தரிசனத்திற்கு இளம் பெண்களுக்கு அனுமதியில்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பது ஏற்புடையதா?
– செல்வி பாபு, மதுரை.
பதில்: ஏற்புடையதல்ல; அதுவும் முற்போக்குக் கொள்கை படைத்த அரசில் – அரசியலில் சில நேரங்களில் மெல்லப் போகவேண்டிய நெருக்கடியும் உண்டு என்பதற்கு அடையாளமோ! புரியவில்லை!!
கேள்வி: மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முயற்சிக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து, மற்ற மற்ற மாநில முதலமைச்சர்களும் விரைவில் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கலாமா?
– பொன். முனுசாமி, பெங்களூரு.
பதில்: தெளிவான அரசியல் – உரிமையும், உறவும் எப்படி அமைந்தால் நாட்டு நலம் சிறப்பாக அமையும் என்பதை உணர்ந்த அனைவரும் கருநாடக முதலமைச்சர் சித்தராமையாவின் நிலைப்பாட்டினையே எடுப்பார்கள் என்பதே காலத்தின் கட்டாயம்! “பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” என்பது குறள். ஒன்றிய அரசின் ‘எல்லா அதிகாரமும் எமக்கே’ என்ற போக்கினை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
கேள்வி: “தமிழ்நாட்டில் உள்ள சிவகாசியில் சிறப்பான வகையில் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு அதிகாரிகள் குழு சென்று ஆய்வு செய்து ஆந்திர அரசுக்கு அறிக்கைத் தாக்கல் செய்யுங்கள்” என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டிருப்பது ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதலாமா?
– அ. அப்துல் அகத், அய்தராபாத்.
பதில்: ‘திராவிட மாடல்’ ஆட்சி மணிமகுடத்தில் மற்றுமோர் ஒளி வீச்சு என்பதன் அடையாளம் ஆகும்!
