பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு!
மூன்று மொழிகளிலும் பலதரப்பட்ட அறிஞர்கள் – பெருமக்கள் பங்கேற்பு!
கடந்த ஜனவரியில் மும்பையில் இரு நாள் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு;
மூன்று மொழிகளிலும் பலதரப்பட்ட அறிஞர்கள் – பெருமக்கள் பங்கேற்பு!
கடந்த ஜனவரியில் மும்பையில் இரு நாள் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு;
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு அண்டை மாநிலங்களான மகாராட்டிர மாநிலம் மும்பையிலும், கருநாடக மாநிலம் பெங்களூருவிலும் வெகுசிறப்புடன் பல்துறை அறிஞர் பெருமக்களும் பங்கேற்க, சிறப்புடன் நடை பெற்றது. கருநாடகத்தில் நடைபெற்ற இம்மாநாடு புதுத் திருப்பத்தை உண்டாக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
- பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு! மூன்று மொழிகளிலும் பலதரப்பட்ட அறிஞர்கள் – பெருமக்கள் பங்கேற்பு! கடந்த ஜனவரியில் மும்பையில் இரு நாள் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு;
- சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்!
- கருநாடகத்தில் 75 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இயக்கம்!
- மும்பையில் கடந்த ஜனவரியில் சிறப்பாக நடைபெற்ற இரு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
- தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் பெங்களூருவில் மாநாட்டில் பங்கேற்பு
- கருநாடக மாநிலத்திற்குப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
நமது அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் 1925 இல் தொடங்கப்பட்ட ‘குடிஅரசு’ வார ஏட்டினைக் கருத்துப் புரட்சி ஆயுதமாக்கிக் கொண்டு, சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement) என்றதொரு சமூகப் புரட்சி இயக்கத்திற்குக் கால்கோள் நாட்டி, தொடங்கிய சில ஆண்டுகளிலயே வெளிநாட்டுத் தமிழர்கள் மத்தியிலும் அறிவு விடுதலைக்கு வித்திட்ட விடியல் இயக்கமாகி, எங்கெங்கெணும் சுயமரியாதைச் சுடரொளி சுழன்றடித்து வருகிறது!
சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்!
தந்தை பெரியார் அவர்கள தொடக்கத்திலேயே ஒன்றைத் தெளிவுபடுத்தத் தவறவில்லை.
‘‘இன்று அது ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள, குறிப்பிட்ட மக்களின் சமத்துவத்திற்கும், சுதந்தி ரத்திற்கும் இடந்தராதவர்களை எதிர்த்துப் பரப்புரை, உரிமைக்கான கிளர்ச்சி செய்யப் புறப்பட்டுள்ள எதிர்நீச்சல் இயக்கமாகத் தொடக்கத்தில் காணப்பட்டாலும், அடுத்த காலகட்டத்தில் உலகளாவிய இயக்கமாக, எங்கெங்கெல்லாம் மனிதச் சமூகத்தில் பேதமும், பிளவும் – மானுட நேயத்தை அழித்து, மக்களிடம் அறிவு விடுதலைக்கு முட்டுக்கட்டை போடும் நிலையும் உள்ளதோ, அங்கெல்லாம் இந்தச் சுயமரியாதை இயக்கப் பணி நிச்சயம் பரவுதல் இன்றியமையாததாகி விடும்.
சிக்கலான அத்தகைய சமூக, பொருளாதார, கலாச்சார அடிமைத்தனம் வேரோடும், வேரடி மண்ணோடும் பெயர்த்து எறியப்படும் நிலைக்கு அது பல்கிப் பெருகி உயரும்” என்றே பிரகடனப்படுத்தினார்கள்!
ஆனால், எந்த மண்ணில் சமூகப் பிறவி பேதமும், அதன் காரணமாக ஏற்பட்ட இழிவும் இருந்ததோ, அதன் விளைவாக அம் மக்கள் இழந்த மானம், அறிவு, கல்வி, உத்தியோகம், உரிமை எல்லாம் மீட்டெடுக்கப்பட வேண்டுமோ, அதற்கே அந்த மண்ணுக்கு முக்கியத்து வமும் முன்னுரிமையும் கொடுத்தே தந்தை பெரியார் தனி மனிதராகத் தொடங்கி, ஒரு நூற்றாண்டுக்குள் தத்துவ ஆலமரமாய் பரந்து விரிந்து கிளைக்கச் செய்த சாதனையை நிகழ்த்தினார். அதுவும் இருட்டடிப்பு, திரிபுவாதம், அவதூறு இந்தச் சேற்றையும் மற்றும் எழுத முடியாத அளவு அருவெறுப்பான முறையில் கடும் எதிர்ப்பையெல்லாம் செய்த மக்களைக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல், புகழ்போதைக்கு ஆளாகாமல் தொடர்ந்து எதிர்நீச்சலடித்து, வியப்புக்குரிய முறையில், அவருடைய காலத்திற்குப் பிறகு, அது வானுயர் வியனுலகம் முழுதும் பரவிப் படர்ந்து வருகிறது!
கருநாடகத்தில் 75 ஆண்டுகளுக்குமுன் தொடங்கப்பட்ட இயக்கம்!
அண்டை மாநிலமான கருநாடகத்தில், கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இயக்கமாகவும் உருவாகியது!
1944 இல் ‘‘திராவிடர் கழகமாக’’ இயக்கம் உருவான போது, பெங்களூருவில் இருந்த தோழர் நாராயணசாமி, அதன் நிர்வாகக் குழு உறுப்பினராக – கருநாடகப் பிரதிநிதியாக இருந்தார் என்ற தகவலே அதற்குச் சரியான தரவாகும்.
ஆனால், அங்கு மொழிப் பிரச்சினை இருந்ததாலும், உணர்வு பெற்றவர்கள் பெரிதும் தொழிலாளர்கள், பணித் தோழர்கள் என்பதாலும், அதன் தொண்டும், வீச்சும் அங்கே ஆழங்கால் பதிக்கவில்லை என்றாலும், அமைப்பு நன்கு பிரச்சார இயக்கமாக தொடர்ந்தது. தந்தை பெரியாரும், கழகப் பிரச்சாரகர்களும் சென்று, ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமை, சமூக அநீதி, மூடநம்பிக்கை, பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மக்களை மீட்க, பாதுகாக்கப் பிரச்சாரம் முதலியவற்றைத் தொடர்ந்து செய்துவரும் நிலையில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா ஒரு மாநாடுபோலவே, நமது இயக்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள், கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் ஜானகிராமன், செயலாளர் முல்லைக்கோ, துணைத் தலைவர் வழக்குரைஞர் எஸ்.குணவேந்தன், சமூகநீதிக்கான இதழியலாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன், பொருளாளர் ஜெய கிருட்டிணன், கோலார் தங்கவயல் கரிகாலன், கணேசன், வழக்குரைஞர் தி.நரசிம்மமூர்த்தி, பெங்களூரு தமிழ்ச்சங்க மேனாள் தலைவர் தி.கோ.தாமோதரன் மற்றும் இயக்கப் பொறுப்பாளர்கள், அரும் முயற்சியால் இயக்க வரலாற்றில் சிறந்த பொன்னேடு போன்று பதிய வேண்டிய நாளாக 28.2.2026 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இளைஞர்களின் ‘பறை இசை’ முழக்கத்தோடு தொடங்கி, இரவு 8.30 மணியளவில் முடிந்தது.
மும்பையில் கடந்த ஜனவரியில் சிறப்பாக நடைபெற்ற இரு நாள் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
சமூகநீதிக் காவலர் தேவராஜ் அர்ஸ் அவர்கள் பெயரில் அமைந்த மண்டபத்தில், மகளிர், பல்தரப்பு அறிஞர் பெருமக்கள், கழகத்தின் கொள்கை உறவுகள் – கன்னட மாநிலத்தில் உயர் பொறுப்பில் உள்ள பேராசிரியர்கள், பொறுப்பாளர்கள் எல்லாம் கலந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் வாழ்த்துகளோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது!
கடந்த ஜனவரி 3, 4 ஆகிய நாள்களில், மராத்திய மண்டலமான ஜோதிபாபூலே, சாவித்திரிபாய் பூலே, சத்திரபதி சாகு மகராஜ், டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மண்ணில் மும்பையில் மூன்று மொழிகளில் (மராத்தி, ஆங்கிலம், தமிழ்) சுயமரியாதை இயக்க மாநாடு வெகுசிறப்பாக மும்பை திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், மராத்திய, ஆங்கில, தமிழ் அறிஞர்கள், கருத்தாளர்கள், மகளிர் பங்கு பெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்!
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி, கருநாடக மாநிலத் தலைநகர், பெங்களூருவில் வெற்றிகரமாக மாநாடு நடைபெற்றது. சீரிய பகுத்தறி வாளர் பேராசிரியர் நரேந்திர நாயக், மேனாள் கருநாடக உயர்நீதிமன்ற (ஓய்வு பெற்ற) நீதிபதி எச்.என்.நாக மோகன்தாஸ், மேனாள் கருநாடக அரசின் அட்வகேட் ஜெனரல் – சட்டப் பேராசிரியர், மூத்த வழக்குரைஞர் ரவிவர்மகுமார், சட்டமன்ற உறுப்பினர் ரிஸ்வான் அர்ஷத், கன்னட வளர்ச்சிப் பேரவை ஆணைய மேனாள் தலைவர் எஸ்.ஜி.சித்தராமையா, பகுத்தறிவுப் பேராசிரியரும் – சிறந்த சிந்தனையாளருமான முனைவர் கே.எஸ்.பகவான், பெண் போராளி லலிதா நாயக், பிரபல திரைப்பட நடிகரும், முற்போக்குச் சிந்தனையாளருமான சேத்தன் அகிம்சா, கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணைய மேனாள் தலைவரும், சட்ட வல்லுநருமான காந்தராஜ், மாநில தி.மு.க.வின் பொறுப்பாளர் ந.ராமசாமி, கருநாடக மாநில தி.மு.க. பொறுப்புக் குழுத் தலைவர் மொ.பெரியசாமி, மும்பை லெமூரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் முதலிய பலரும் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர்.
பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், கன்னட கருத்து மழைகளைத் தமிழாக்கித் தந்து பதிய வைக்கும் வகையில் அரும்பணியாற்றினார். அனைத்து விருந்தினர்களுக்கும் சிறப்புச் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து தோழர்கள் பெங்களூருவில் மாநாட்டில் பங்கேற்பு
ஏராளமான இருபால் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். ஊ.ஜெயராமன், அவரது வாழ்விணையர் தமிழ்ச்செல்வி, தாம்பரம் ப.முத்தையன், ஆர்.டி.வீரபத்திரன், குடியாத்தம் சடகோபன், ஈஸ்வரி, ஓசூர் வனவேந்தன் மற்றும் கருஞ்சட்டை உறவுகள் பலரும் மகிழ்ச்சியோடு நிறைவு விழாவில் கலந்துகொண்டது, மேலும் மகிழ்ச்சியூட்டியது (சில பெயர்கள் விடுபட்டிருந்தால், பொறுத்தருளுக).
காலையில் ஆங்கிலத்திலும், மாலையில் தமிழிலும் உரையாற்றி மன நிறைவடைந்தோம்!
கருநாடக மாநிலத்திற்குப்
புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்து, கருநாடக மாநிலத்தில் கழகத்தைக் கட்டிக் காப்பாற்றி வரும் சிறந்த கொள்கைப் போராளி தோழர் ஜானகிராமன் அவர்களின் உடல்நிலை காரணமாக, முன்புபோல் பணியாற்ற முடியவில்லை என்பதால், அவரைக் கழகக் காப்பாளராக்கி, கீழ்க்காண்போரை
மு.ஜானகிராமன் – கழகக் காப்பாளர்
சே.குணவேந்தன் – தலைவர்
ஜே.அருண் – துணைத் தலைவர்
இரா.முல்லைக்கோ – செயலாளர்
மு.ஆனந்தன் – துணைச் செயலாளர்
கருநாடக மாநில திராவிடர் கழகப் பொறுப்பாளர்களாக நிறைவு விழாவில் நான் அறிவித்ததை, ஜானகிராமன் உள்பட பலரும் வரவேற்றனர்.
இந்த நேர நெருக்கடியில், உடல்நிலை காரணமாகவும், வயது முதுமை காரணமாகவும் மாநாட்டிற்கு நேரில் வர இயலாது, 106 வயது கொள்கை மாவீரர் வீ.மு.வேலு அவர்களை, அவரது இல்லம் சென்று, நலம் விசாரித்து, சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்து திரும்பினேன்.
மாநாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க செய்தி
தனது வாழ்நாள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்.சில் பணி செய்து, இறுதியில், தனது கசப்பான அனுபவம் காரணமாக தெளிவு பெற்று, அது எப்படிப்பட்ட கபட வேடதாரிகளின் கட்டமைப்பு என்பதை உணர்ந்து, தனது அனுபவங்களைத் தொகுத்து, ‘‘The evil face of RSS’’ என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நூல் எழுதிய ‘ஹனுேம கவுடா’ அவர்கள் நிறைவு விழாவிற்கு வருகை தந்து, அந்த நூலினைத் தந்தார். அவரைப் பாராட்டி வரவேற்றோம்! – இது ஒரு கொள்கை வெற்றி!
கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா ஒரு திருப்பத்தை உருவாக்கும். மாநாட்டிற்கு ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நமது பாராட்டுகள் – வாழ்த்துகள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.3.2026
