தமிழர் தலைவர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்
சென்னை, மார்ச் 1– சமூகநீதிக்கான சரித்திர நாயகர் சாதனைகளின் சரித்திரமாம் நமது மானமிகு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 73ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று (1.3.2026) கொண்டாடப்படுகிறது.
இன்று (1.3.2026) காலை 8.45 மணியளவில் சென்னை வேப்பேரி பெரியார் திடலுக்கு மக்கள் கடலுக்கு நடுவே வருகை தந்த தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று நேராக தந்தை பெரியார் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களிலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து தந்தை பெரியார் நினைவிட முகப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கி, திராவிட இயக்க நூல்களை வழங்கி சிறப்பித்தார்.
முதலமைச்சருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் இனிப்பு ஊட்டியதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர் தலைவருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தார்.
‘விடுதலை’ முதலமைச்சர் பிறந்த நாள் சிறப்பிதழை (28.2.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வழங்கினார். இதையடுத்து முதல மைச்சர் விடைபெற்றுச் சென்றார்.
இந்நிகழ்வில் பொதுச் செயலா ளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் உடனிருந்தனர்.
தி.மு.க.

இந்நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, முத்துசாமி, கோவி.செழியன், வெள்ளக்கோயில் சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, மேனாள் அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் புரசை ரங்கநாதன், இரவிச்சந்திரன், சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.வெற்றிச்செல்வன், இ.பரந் தாமன், மனோஜ் பாண்டியன், மற்றும் எழுத்தாளர் இமயம், வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா, தி.மு.க. பகுதிச் செயலாளர் சுதாகர் மற்றும் பெருந்திரளான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். முதல மைச்சரின் பிறந்த நாளையொட்டி அனைவருக்கும் இனிப்பு மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப் பட்டது.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் தனது பிறந்த நாளையொட்டி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
