பெரியார் திடலுக்கு நான் வந்திருப்பது புதிதல்ல, என் தாய் வீட்டுக்கு வந்திருக்கிறேன். அதிலும் நம்முடைய பாசமிகு ஆசிரியர் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன். பாராட்டுவது என்பது ஓர் இயக்கத்தின் தலைவரை. ஒரு கருத்தியலின் தலைவரைப் பாராட்டுவதாகும்! திராவிடக் கொள்கையினுடைய வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக நான் அவரைப் பார்க்கிறேன். திராவிடக் கருத்தியலின் உயிர் வடிவமாகத்தான் நான் அவரைப் பார்க்கிறேன்.
- • •
திராவிடச் சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்குக் கசப்பாக இருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்று சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. பெரியார் பெயரை அடிக்கடி சொல்வதைப் பார்த்து அவர்களுக்குக் கோபம் வருகிறது. வெறுப்பைச் சுமந்து வாழ்பவர்களுக்கு, திராவிடர் கழகமும் – திராவிட முன்னேற்றக் கழகமும் ஒட்டி இருப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது. கருப்பையும், சிவப்பையும் யாராலும் -எந்தக் கொம்பனாலும் பிரிக்க முடியாது! திராவிடர் கழகக் கொடியிலும், திராவிட முன்னேற்றக் கழகக் கொடியிலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் கொடியிலும் இருப்பது கருப்பும் சிவப்பும்தான். எங்களை ஒன்றாக இருக்கிறார்கள் என்று சொல்லக்கூடாது; ஒன்று கலந்துவிட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரையும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள் நாம். தனித்தனி இயக்கமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே இயக்கத்தை, ஒரே கொள்கையைச் சேர்ந்திருக்கக் கூடியவர்கள். அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.
- • •
வருகிற டிசம்பர் 2ஆம் தேதி ஆசிரியருக்குப் பிறந்தநாள். அவர் 90 வயதைத் தொடுகிறார். இங்கே குறிப்பிட்டுச் சொன்னார்கள். அவர் ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்புக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. திராவிடர் கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்து 45 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இவை எல்லாம் யாருக்கும் கிடைக்காத வாய்ப்புகள். தந்தை பெரியார், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வரிசையில் ஆசிரியர் அவர்கள் இப்படி நெடிய பயணத்தை இந்த இனத்துக்காக நம்மோடு முன்னின்று நடத்திக்கொண்டிருக்கிறார். அத்தகைய சிறப்புக்குரிய ஆசிரியர் அவர்களை உங்களோடு சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் என்ற முறையில் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அதையும் தாண்டி இவரை நான் வணங்குகிறேன்.
( 25.4.2022 சென்னை பெரியார் திடலில் ‘நீட்’ எதிர்ப்பு பெரும்பயண நிறைவு விழாவில் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை)
