புதுடில்லி, பிப். 28– டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணை வேந்தர் சாந்திசிறி துலிபுடி பண்டிட், ஜாதிய ரீதியான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜாதி இறுமாப்பு
அண்மையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய துணை வேந்தர், “தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக்கத்தைச் சார்ந்தவர்கள் இன்றுவரை பழங்கதைகளைப் பேசி புலம்பிக்கொண்டே இருக்கிறார்கள்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அது மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே இத்தகைய பாகுபாடான கருத்துகளைப் பேசுவது கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் முழக்கமிட்டனர்.
போராட்டம்!
துணை வேந்தர் தனது ஜாதிய ரீதியான பேச்சுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உயர்ந்த கல்வி நிறுவனத்தில் சமத்துவத்தைப் பேணத் தவறிய அவர் பதவி விலக வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து ஒன்றிய கல்வி அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக முன்வைத்தனர்.
துணை வேந்தரின் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
“ஜே.என்.யு என்பது சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான களம். இங்கே ஜாதிய பாகுபாட்டை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று போராட்டத்தின் போது மாணவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
