தஞ்சாவூரில் கடந்த 21.2.2026 சனியன்று மாலை திலகர் திடலில் மாபெரும் எழுச்சிப் பேரணியின் நிறைவில் திராவிட மாணவர் கழக மற்றும் திராவிடர் கழக இளைஞரணியின் மாநில மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.
நவமணிகள் என்று கூறப்படுவது போல ஒன்பது முத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் அரசான தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்பதற்கான காரண காரியங்களை விளக்கி முத்தாய்ப்பான அந்தத் தீர்மானத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்களே முன்மொழிந்து விளக்கவுரையாற்றினார்.
ஆயிரக்கணக்கானோரும் எழுந்து நின்று ஆரவாரித்து அந்தத் தீர்மானத்தை வழிமொழிந்தனர். மாநாட்டில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மொத்த வாக்காளர்களுக்கான கடமையை வலியுறுத்தும் தன்னல விளக்க தீர்மானமாகும் அது! நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க. முன்னணியினரும் வெகுவாகப் பாராட்டினார்.
சொன்னதைச் செய்வதும், செய்வதைச் சொல்வதுமானது – தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியாகும்.
இந்தியாவிலேயே பல துறைகளிலும் முதனிலை முகத்தைக் காட்டும் மாநிலம் தமிழ்நாடு என்பது – ஏதோ நாம் சொல்வதாகக் கருதக் கூடாது; ஒன்றிய அரசின் அதிகாரப் பூர்வமான அறிவிப்புகளிலிருந்தும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர்கள் வெளியிட்ட புள்ளி விவரங்களிலிருந்தும் இந்த உண்மை உரத்த முறையில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
தஞ்சை மாநாட்டில் மற்றொரு முக்கியமான அறிவிப்பினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வெளியிட்டார்.
வரும் மார்ச்சு 3ஆம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஒன்றிய அரசு அலுவலகம்முன் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஏனிந்த ஆர்ப்பாட்டம்? சட்டப்படி இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இருந்தும் உயர் பதவிகளில் அவர்களுக்குச் சட்ட ரீதியாக உள்ள இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. அந்த உயர் பதவிகளை எல்லாம் முழுச் சுனையாக உயர்ஜாதிப் பார்ப்பனர்கள் விழுங்கி ஏப்பமிடுகிறார்கள்.
இந்த சட்ட விரோத நடவடிக்கையை நிர்மூலப்படுத்ததான் திராவிட மாணவர் கழகம் இளைஞரணி மாநாட்டில் இந்தப் போராட்டத்தைத் தமிழர் தலைவர் பொருத்தமாக அறிவித்தார்.
சமூகநீதிக்கான உரிமைப் போர் வாளை இளைஞர்கள் கையில் எடுத்தால்தான் இதற்கான நியாயத்தை எட்ட முடியும்.
பிஜேபி ஒன்றிய அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல் அதன் முக்கிய குறி சமூக நீதியை சவக் குழிக்கு அனுப்புவதும், மதச் சார்பின்மையை மரணப்பாடையில் ஏற்றுவதுமேயாகும்.
போதும் போதாதற்கு –இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு என்பது சமூகநீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தள்ளப்பட்ட மக்களுக்கு என்ற அளவுகோல்தான் இடம் பெற்றிருக்கிறது. பொருளாதார அளவுகோலையும் இதில் திணிக்க வேண்டும் என்றுமுதல் சட்டத் திருத்தத்தின்போது முயன்றபோது நாடாளுமன்றம் அதனை ஏற்கவில்லை.
ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த அந்த முதல் தேசிய அமைச்சரவையில் இந்து மகா சபையைச் சேர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜியும் இடம் பெற்றிருந்தார். அவர்தான் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்ற திருத்தத்தைக் கொண்டு வந்தார். அது வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பொருளாதார அளவுகோல் என்பதற்கு எதிராக 243 வாக்குகளும், ஆதரவாக 5 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.
வரலாறும் சட்டமும் இவ்வாறு இருக்க, இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு (EWS) 10 விழுக்காடுக்குவழி வகுக்கும் சட்டத் திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. (சட்டத் திருத்தம் 103 நாள் 8.1.2019) சட்டம் நிறைவேறிய மூன்றாவது நாளிலேயே அதாவது ஜனவரி 12ஆம் தேதியே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது – அதனையடுத்து 2ஆவது நாளிலேயே அதாவது ஜனவரி 14ஆம் தேதியே செயல்பாட்டுக்கு வந்தது என்றால் – இதுபோல் மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாக வேறு சட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்ததுண்டா?
இதன் விளைவு என்ன? அரசுப் பணித் தேர்வுகளில் பழங்குடியின மக்களின் கட் ஆஃப் மதிப்பெண்ணைவிட இந்த EWS பட்டியலில் உள்ள உயர் ஜாதியினர் குறைந்த மதிப்பெண் பெற்றால் போதும். எடுத்துக்காட்டாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட மறு ஆண்டு (2020) நடைபெற்ற ஸ்டேட் வங்கி எழுத்தர் தேர்வில் பெற்றவர்களின் மதிப்பெண்கள் விவரம்: தாழ்த்தப்பட்டோரின் கட்ஆஃப் மதிப்பெண் 61.25,பழங்குடியினரின் கட்ஆஃப் மதிப்பெண் 53.75, பிற்படுத்தப்பட்டோருக்கான கட்ஆஃப் மதிப்பெண் 61.25 பொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கான (EWS) கட்ஆஃப் மதிப்பெண் 28.5.
இந்த ஒன்றிய பிஜேபி அரசு யாருக்கான அரசு என்பதற்கு – கண்ணுக்குத் தெரிந்த நேரிடையான – பச்சையான உண்மை என்னவென்று புரிகிறதா?
நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் அய்.ஏ.எஸ். பதவிகளில் – எஸ்.ஸி 2.4%, எஸ்.டி.1.2%, ஓபிசி 4.4%, அய்.அய்.பி.எஸ். பதவிகளில் எஸ்.ஸி 3%, எஸ்டி 1.5% ஓபிசி 5.5%
அய்.எஃப்எஸ் பதவிகளில் எஸ்ஸி 4.4.%, எஸ்டி 2.2%, ஓபிசி 10.6% இந்தத் தகவல்களை அறிவித்தவர் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திரசிங், அறிவித்த நாள் 2026 பிப்ரவரி 12. மாநிலங்களவையில் அதிகாரப் பூர்வமாக அளிக்கப்பட்ட துல்லியமான புள்ளி விவரங்கள் இவை.
இந்த முக்கியமான அதிகாரம் படைத்த அகில இந்திய பதவிகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் அபகரித்துள்ளவர்கள் உயர் ஜாதியினர் – குறிப்பாகப் பார்ப்பனர்களே!
இந்த விவரம் மாநிலங்கள் அவையில் அறிவிக்கப்பட்டு ஊடகங்களில் வெளிவந்த அன்றே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சமூக அநீதி எப்படியெல்லாம் வெறித்தன்மையோடு கொடி கட்டிப் பறக்கிறது என்பதை அறிக்கையின் வாயிலாக வெளிப்படுத்தினார்.
தஞ்சை மாநாட்டில் (21.2.2026) வரும் மார்ச்சு 3ஆம் தேதியன்று இந்த சமூக அநீதியை எதிர்த்து மாவட்டத் தலை நகரங்களில் ஒன்றிய அரசு அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
இது ஏதோ திராவிடர் கழகத்திற்கு மட்டும் உள்ள பிரச்சினையல்ல; சமூகநீதியில் ஆர்வமும், அக்கறையும் உள்ளவர்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், ஒத்த கருத்துள்ளவர்களை அணுகி, ஒன்றிணைத்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திடக் கேட்டுக் கொள்கிறோம்.
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! கழகப் பொறுப்பாளர்களே ஆயத்த பணிகளைத்தொடங்கி விட்டீர்களா?
