மதுரை, பிப். 23- மதுரையில் 21.2.2026 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் மக்கள் கோரிக்கைகள் குறித்துப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தி.மு.க. கூட்டணி யில் தே.மு.தி.க. இணைந் திருப்பதை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்: “தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ‘மூழ்கும் கப்பல்’ என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இது ஒரு ‘நீர்மூழ்கிக் கப்பல்’ கூட்டணி. இதன் பலத்தை தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜக உள்ளிட்ட கட்சிகள் உணர்ந்து கொள்வார்கள்.” மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், அது தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று உறுதியாகத் தெரிவித்தார்.
பன்னாட்டு வர்த்தகம் மற்றும் உள்ளூர் வளர்ச்சி குறித்து அவர் முன்வைத்த முக்கியக் கோரிக்கைகள்:
எண்ணெய் இறக்குமதி: வெனிசுலாவில் இருந்து அமெரிக்கா விற்கும் எண்ணெயை இந்தியா வாங்கக் கூடாது. ரஷ்யா, ஈரான், அரபு நாடுகளிடம் இருந்து எண்ணெய் பெறுவதே சிறந்தது.
திருப்பூர் வளர்ச்சி: ஒன்றிய அரசின் ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டத்தில் திருப்பூரை இணைக்க வேண்டும். அரசுப்பள்ளிகள்: 500-க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தற்காலிக மற்றும் அடிமட்டப் பணியாளர்களின் உரிமைகள் குறித்து முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்: தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மதக் கலவரத்தை விரும்பாதவர்கள் என்பதைத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
