
மருத்துவர்
ந.பத்மபிரியா
ஆர்.கே தோல், பல் மருத்துவமனை, கடலூர்
முகவாதம் என்பது உங்கள் முகத்து தசைகளை பாதிக்கும் ஒரு நரம்பு பிரச்சினை. இது முகத்தில் ஒரு பக்கத்தில் உள்ள தசைகளில் பலவீனம் அல்லது பகுதி வாதத்தை உண்டாக்கும். இவ்வாதம் ஏழாவது முக நரம்பில் உள்ள பிரச்சினையால் ஏற்படுகிறது. இது மூளையை முக பாவனையை கட்டுப்படுத்தும் தசைகளுடன் இணைக்கிறது. ஏழாவது முக நரம்பு -சுவை, காது உணர்வையும் பாதிக்கிறது. முகவாதம் (Bell’s palsy) இருக்கும்போது இமை சரியாக மூட முடியாமல் போகலாம். புன்னகை செய்தால் இருபக்கமும் சமமற்றதாக ஏற்றத்தாழ்வுகளுடன் தோன்றும். எந்த வயதிலும் ஏற்படலாம் என்றாலும் 15-45 வயதில் அதிகமாக இருபாலருக்கும் காணப்படுகிறது. முகத்தின் ஒரு பக்கத்தில் உள்ள தசைகளை கட்டுப்படுத்தும் நரம்பின் வீக்கம், எரிச்சலால் இது ஏற்படுகிறது. வேறு தசைகளை அசைக்க முயற்சிக்கும் போது சில தசைகள் தன்னிச்சையாக சுருங்கும். (எ.கா) புன்னகைக்கும் போது பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கண் மூடிக் கொள்ளலாம்.
அறிகுறிகள்
முகவாத அறிகுறிகள் திடீரென தோன்றும் பொதுவாக சிலவாரங்களில் மேம்பட ஆரம்பித்து சுமார் ஆறுமாதங்களில் முழுமையாக குணமடையும். அரிதாக முகவாதம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏற்படலாம். முகத்தின் ஒரு பக்கத்தில் கண்னை மூடவில்லை என்பதை கவனிக்க முடியும். தெளிவாக பேசுவதில் சிரமம் இருக்கலாம். முகத்தில் உணர்வை இழக்கலாம். சிறிது முகவலி தோன்றலாம். ஒரு கண்ணை மூடச் சிரமப்படுவதால் கண் வறட்சியை ஏற்படுத்தும் பெரும்பாலும் இந்த அறிகுறிகள் முகத்தில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தும். கண்கள் உலர்ந்து போகலாம். மங்கலான பார்வை இருக்கலாம் ஒரு கண் முழுமையாக மூட முடியாமல் போகும்போது எரிச்சலாக உணரலாம். முன்பு போல உணவின் சுவையை உணர முடியாமல் போகலாம். மேலும் காது கேட்பதில் ஒலிக்கு அதிகரித்த உணர்திறன் ஏற்படலாம் வாயில் எச்சில் வடியும். இது தவிர தாடையைச் சுற்றிவலி அல்லது பாதிக்கப்பட்ட பக்கத்தின் காதுக்குள் அல்லது பின்னால் வலி தோன்றும். அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கம் வேறுபடும். லேசான முதல் கடுமையான வரை வலி இருக்கலாம். முகவாதம் உள்ளவர்கள் பொதுவாக சில வாரங்கள் முதல் ஆறுமாதங்களுக்குள் முக அமைப்பு ஓரளவு அல்லது முழுவதுமாக மீண்டும் பெறுகின்றனர். சில நேரங்களில் முக பலவீனம் நீண்ட காலத்திற்கு நீடிக்கலாம் அல்லது நிரந்தரமாக இருக்கலாம்.
காரணங்கள்
இது பொதுவாக வைரசால் ஏற்படும் எதிர்வினையால் ஏற்படலாம். மேலும் எதிர்ப்பு தன்மை பிரச்சினைகள், முகத்திற்கு செல்லும் 7ஆவது நரம்புக்கான இரத்த ஓட்ட குறைபாடும் ஆகும். முகவாதத்திற்கான சாத்தியமான தூண்டுதல், ஏற்கெனவே உள்ள வைரஸ் தொற்று எ.கா. சின்னம்மை, ஹெர்பிஸ் சிம்லஸ் மற்றும் மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் காயம், சிறிய உடல் நலக்குறைவு, முக நரம்பியல் தொற்று, அதனால் ஏற்படும் சுழற்சி, நரம்பு இழைகளை பாதுகாக்கும் உறை சேதம் முதலியன ஆகும்.
முகவாதம் கருவுற்றபின் கடைசி மூன்று மாதத்தில் அல்லது குழந்தை பிறந்த முதல் வாரத்தில் இருப்பவர்கள் மற்றும் நீர் கோர்வை, புளூ காய்ச்சல், நீரிழிவு, மிகை இரத்த அழுத்தம்,உடல் பருமன், மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது மிகையாக தோன்றுகிறது.
சிக்கல்கள்
பொதுவாக முகவாத அறிகுறிகள் மறைந்துவிடும் என்றாலும் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. கண் மூடமுடியாததால் ஏற்படும் பகுதி அல்லது முழு பார்வை இழப்பு உண்டாகிறது. இது கார்னியா என்று அழைக்கப்படும் கண்ணின் நிறமிழி உறையில் அதிகப்படியான உலர்வு கீறல்களால் ஏற்படுகிறது. சில சமயம் முக நரம்புக்கு திரும்ப சரிசெய்ய முடியாத சேதம், நரம்பு நார்கள் சீரற்ற முறையில் வளர்வது. இதனால் புன்னகைக்கும் போது பாதிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள கண் மூடிக் கொள்ளலாம்.
முகவாதத்தில் உளவியல் தாக்கம்
பல மருத்துவப் பயனாளிகளுக்கு குறிப்பாக வாலிபர்களுக்கு விடலை பருவத்தினருக்கு தெரியக்கூடிய மாற்றங்கள்: சமூக மற்றும் உணர்ச்சி மாற்றங்களை உருவாக்கலாம். சிரிப்பது, பொது வெளியில் சாப்பிடுவது அல்லது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில் பங்கேற்பது போன்ற அன்றாட பணிகள் அச்சுறுத்தலாகத் தோன்றலாம்.
இவர்களுக்கு முகத்தோற்றம் மற்றும் பேசுவதில் தடங்கள் போன்ற மாற்றங்களால் பதற்றம் மன சோர்வு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
பெரும்பாலான முகவாத மருத்துவப் பயனாளிகள் 72 மணி நேரத்திற்குள் உச்சகட்ட அறிகுறிகளை அனுபவிக்கிறார் இந்த வேகமான முன்னேற்றம் தான் வாரங்கள் அல்லது மாதங்களாக படிப்படியாக முகபலவீனத்தை ஏற்படுத்தும். இது மற்ற நோய்களில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்டுகிறது (எ.கா) பக்கவாதம் (Stroke). இதை முகவாதத்திலிருந்து வேறுபடுத்தி அறிவது முக்கியமாகும்.
முகவாதம் 7ஆவது நரம்பை மட்டுமே பாதிக்கிறது. ஆனால், பக்கவாதம் மூளைத்திசுவைப் பாதிக்கிறது. ஆகவே, கைகால் பலவீனம் தோன்றும் முகமேல்பகுதி பாதிக்கப்பட்டிருப்பின் நெற்றியை சுருக்க முடியாது, பேச்சு குழறும் திடீரென தலைவலி தோன்றும், ஆனால் முகவாதத்தில் நெற்றியை சுருக்க முடியும், பேச்சில் குழறுபடி இராது.
சோதனை
முகவாதத்தை உறுதிசெய்ய எந்த இரத்த சோதனையும் உதவாது. அதற்கு பதிலாக மருத்துவர் ஒரு மருத்துவப் பயனாளியை சோதித்து மேல் மற்றும் கீழ் முக பலவீனத்தின் அறிகுறிகளை மதிப்பிடுகிறார். மூளை வரைபடம்,நரம்பு கடத்தல் ஆய்வு சில சமயங்களில் நோயை உறுதிப்படுத்த அல்லது நிலைமைகளை முகவாதத்திலிருந்து வேறுபடுத்தி அறிய உதவும். முக பலவீனம் படிப்படியாக அதிகரித்தால் அல்லது முக உணர்ச்சி. சுவை, கேட்கும் திறன் ஆகியவைகளில் பாதிப்பு இருந்தால் எம்.ஆர்.அய்.சிடி ஸ்கேன் பயனுள்ளதாக இருக்கும்.
மருத்துவம்
முகவாதத்திற்கு நேரடியாக எந்த மருத்துவமும் இல்லை எனினும் முகவாதம் என்று கண்டறியப்பட்டவுடன் மருத்துவர் அதிக அளவு பிரினிசோலோன் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளையும் பொதுவாக மருத்துவப் பயனாளிகளுக்கு அளிப்பார்கள்.
இயன் மருத்துவம்
முகவாதம் சிகிச்சையில் இயன் மருத்துவம் (பிசியோதெரபி) மிக முக்கியமானது. இது தசை வலிமையை மீட்டெடுக்கவும், முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும் உதவுகிறது. முக தசைகளைத் தூண்டும் பயிற்சிகள், மசாஜ் மற்றும் வெப்ப சிகிச்சை (Heat Therapy) மூலம் உதடு கோணல், கண்மூடாமை போன்ற பிரச்சினைகளை சரி செய்யலாம். ஆரம்பக் கட்ட சிகிச்சையுடன் இயன் மருத்துவம் செய்வது விரைவாக குணமாக வழி வகிக்கும்.
பயிற்சிகள்
- தசைகளை தூண்டுதல்: முகதசைகளை லேசாக மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தசை பலவீனத்தைக் குறைக்கிறது.
- கண்னை இறுக்கமாக மூடுதல், புருவங்களை உயர்த்துதல், சிரித்தல் உதடுகளைக் குவித்து ஊதுதல் மற்றும் கன்னங்களை உப்பச் செய்தல் போன்ற பயிற்சிகள் செய்யப்பட வேண்டும்.
- வெட்ப சிகிச்சை: தசை இறுக்கத்தைக் குறைக்க பாதிக்கப்பட்ட பகுதிகள் லேசான வெப்பம் அல்லது ஈரமான வெப்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- மின்தூண்டுதல் (Electrical Stimulation) தசை செயல்பாட்டைத் தூண்ட மின் தூண்டுதல் சிகிச்சையைப் பயன்படுத்தலாம்.
முக்கிய குறிப்பு
- அறிகுறிகள் தோன்றிய உடனே இயன் மருத்துவ சிகிச்சையைத் தொடங்குவது சிறந்தது. பயிற்சியை தொடர்ந்து செய்வதன் மூலம் முக தசைகளின் தொனி பராமரிக்கப்படுகிறது.
- இக்குளிர்காலத்தில் முகவாதம் அதிக விழுக்காட்டில் தோன்றுவதாக தின இதழ்களில் செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
