22.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘ஸ்டாலின் மகளிர் படை’ மூலம் அரசின் சாதனைகளை வீடு வீடாக கொண்டு செல்ல சொல்லியிருக்கிறேன். குறிப்பாக தேர்தலை காரணமாக வைத்து மகளிர் உரிமைத் தொகையை முடக்க நினைத்த சதியை முறியடித்து ரூ.5 ஆயிரம் வழங்கியதையும், அடுத்து வரும் ஆட்சியில் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க இருப்பதையும் வீடு வீடாகச் சென்று சொல்லுமாறு கூறியிருக்கிறேன் என்று மதுரையில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் தென் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* அனைத்து சமூகப் பிரிவினரையும் உள்ளடக்கியதாக நீதித்துறை இருத்தல் வேண்டும், உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் பூயன் பேச்சு.
* அனைத்து உலக நாடுகள் மீதும் புதிதாக 10 சதவீத தற்காலிக இறக்குமதி வரியை நேற்று (21.2.2026)காலை அறிவித்த டிரம்ப், மாலையில் அதை 15 சதவீதமாக அதிகரித்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் அதற்கான பிரகடனத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி ஆட்சியில் இந்திய ரயில்வே தனியார் மயமாகி வருகிறது: நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ், புது டில்லி மற்றும் லக்னோ இடையிலான மிகவும் பரபரப்பான வழித்தடங்களில் ஒன்றில் இயங்குகிறது. இந்த சேவை வெற்றிகரமாக இயக்கப்பட்டதை தொடர்ந்து, 2020 இல் அகமதாபாத் மற்றும் மும்பையை இணைக்கும் இரண்டாவது பிரீமியம் தேஜஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சர்ச்சைக்குரிய தமிழ்நாடு தனியார் பல்கலைக் கழகங்கள் (திருத்தம்) மசோதா, 2025அய் (உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங் களாக மாற்றும் மசோதா) மாநில அரசு திரும்பப் பெற்றது. இதற்கான அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
* கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை இன்று (22.2.2026) தொடங்கும் திமுக; இடப் பங்கீட்டுக் குழு பிப்ரவரி 26 அல்லது 27 அன்று காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி இந்து:
* “ஒன்றிய அரசின் மய்யமாக்கல் தோல்வியடைந்ததால் ஒன்றிய – மாநில அதிகாரங்களை மீண்டும் மறுசீரமைக்க வேண்டிய அவசியம்: அத்தகைய மறுசீரமைத்தல் தேசிய ஒற்றுமையைக் குறைக்காது; அதிகாரத்தை பொறுப்புடன் இணைப்பதன் மூலம் அதை ஆழப்படுத்தும்,” என்று நாடு முழுவதும் உள்ள முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், அரசியலமைப்பு வல்லுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
* உ.பி. ஜோதீஷ்பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் மீது போக்சோ வழக்கு பதிய உத்தரவு: உ.பி. நீதிமன்றம் அதிரடி.
– குடந்தை கருணா
