தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

8 Min Read

* இந்தியாவின் அதிகார வர்க்கம் முழுவதும் பார்ப்பன மயமா?
* ஜாதி மறுப்பாளர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவை!
* ‘‘வந்தே மாதரம்’’ மதவெறிப் பாடலைத் திணிக்காதீர்!
தகுதி – திறமைக்காகத்தான் ‘நீட்’ தேர்வு என்றால், முதுகலை மருத்துவக் கல்வித் தேர்வில் பூஜ்யம் பெற்றவர்களுக்கு இடமளிப்பது எப்படி?

தஞ்சாவூர், பிப்.22 தகுதி, திறமைக்காகத்தான் ‘நீட்’ தேர்வு என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, முதுகலை மருத்துவக் கல்விக்கு வெறும் பூஜ்யம் மதிப்பெண் பெற்றால் போதும் என்று வைத்திருப்பது அசல் மோசடி என்றும், ‘நீட்டை’ அறவே நீக்கவேண்டும் என்றும் வலியறுத்தும் தீர்மானம் உள்பட, ஒன்பது தீர்மானங்களை தஞ்சையில் நேற்று (21.2.2026) மாலை நடைபெற்ற திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Contents

அத்தீர்மானங்கள் வருமாறு:

முன்மொழிதல்: வழக்குரைஞர் க.வெற்றிவேல்

மாநில தி.க. இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 1:

நாட்டில் வேலையின்மை 5 சதவீதமாக அதிகரிப்பு – ஒன்றிய அரசின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புக!

ஆண்டுக்கு 2 கோடிபேருக்கு வேலை தருவோம் என ஜூம்லா செய்த மோடி ஆட்சியில் நாட்டில் வேலையின்மை 5 சதவீதமாக அதிகரித்துள்ளது என மோடி அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ரயில்வே துறையில் மட்டுமே 2.5 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஒட்டு மொத்தமாக 9.50 லட்சத்துக்கும் அதிகமான பணியிடங்கள் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ளன. நாட்டின் பட்டதாரிகள்  வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக கூட்டணி அரசு உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிதல்: வழக்குரைஞர் தா.தம்பி.பிரபாகரன்

மாணவர் கழக இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 2:

இந்திய நாட்டின் அதிகார வர்க்கம் முழுவதும் பார்ப்பனமயமே!

ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தந்த தரவுகளின் அடிப்படையில் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ், அய்.எப்.எஸ். பதவிகளில் உயர்வகுப்பை சேர்ந்தவர்கள் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படவில்லை என்பதையே இப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் பதவிகளிலும் இதே நிலையே. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி, மைனாரிட்டி பிரிவைச் சேர்ந்தவர்கள் 4 அல்லது 5 பேர் மட்டுமே. சுதந்திர இந்தியா, “ஜனநாயகமாக இல்லாமல், அசல் பார்ப்பன நாயகமாகவே இருக்கும்” என அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 1925 இல் கூறிய கூற்று இன்றும் நிஜமாக நம் கண் முன்னே நிற்கிறது. சமூக நீதிக்கான போராட்டம் இந்தியா முழுமைக்கும் எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு திராவிட மாணவர்களின் கைகளில் உள்ளது என்பதை நெஞ்சில் ஏந்தி நாம் போராட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிதல்: அ.ஜெ.உமாநாத்

மாநில தி.க. இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 3:

ஜாதி மறுப்பாளர்களுக்கு
தனி இட ஒதுக்கீடு

அ) ஜாதிய ஆதிக்கத்துக்கு எதிராக தமிழ் நாட்டில் திராவிட மாடல் அரசு நிறைவேற்றிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், பெரியார் நினைவு சமத்துவபுரம் போன்ற புரட்சிகரத் திட்டங்களின் அடிப்படையில், ஜாதியைத்  தவிர்த்து ஜாதி மறுப்பு மணம் புரியும் இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தனி இட ஒதுக்கீடு அளித்திடும் திட்டத்தையும் திராவிட மாடல் அரசு நிறைவேற்ற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். (தற்போது, இருவரில் ஒருவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் என்றால் முன்னுரிமை மட்டும் வழங்கப்படுகிறது.) ஜாதியற்ற சமுதாயத்தைப் படைத்திட நமது அரசு சட்டம் இயற்றி இந்தியாவுக்கு வழிகாட்டியாக திகழ வேண்டும் என இம் மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

ஆ) மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி மறுப்பா ளர்கள், நாத்திகர்கள் குறித்த கணக்கெடுப்பும் நடத்திட தமிழ்நாடு வலியுறுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

முன்மொழிதல்: வழக்குரைஞர் த.சிவபாரதி

மாநில திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 4:

கிக் (GIG) பணியாளர்களின்
சமூக பாதுகாப்பை உறுதி செய்க!

நாட்டின் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் படித்த பட்டதாரிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினர், செயலிகளின் துணை கொண்டு உணவு, பொருட்கள்  விநியோகம் உள்ளிட்ட தற்காலிகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  அத்தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமத்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உரிமைகள் சார்ந்த சட்டங்களை உருவாக்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. முதல்கட்டமாக இத் தொழிலாளர்களைக் கணக்கில் கொண்டு சில முன்னெடுப்புகளையும், ஓய்விடங்கள் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்கும் தமிழ்நாடு அரசுக்கு இம் மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

முன்மொழிதல்: சீ.தேவராஜபாண்டியன்

மாநில திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 5:

நீட் – தகுதி திறமை எனும் மோசடி!

நீட் என்னும் தகுதித் தேர்வுதான் மருத்துவக் கல்லூ ரிக்குத் தகுதி வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் என்று இன்றும் விடாப்பிடியாக ஒன்றிய அரசு அடம்பிடிக்கிறது. ஆனால், பூஜ்ஜியம் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்குக் கூட மருத்துவ முதுகலை சேர்க்கை கிடைக்கிறது என்ற உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அண்மையில் வெளிவந்த நீட் முதுநிலை (NEET PG) 2026 கட்-ஆப் நாட்டையே திகைக்க வைக்கிறது. மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கில், மாநில தேர்வுக் குழு பிப்ரவரி 16, 2026 அன்று NEET PG 2026 இல் 800 மதிப்பெண்களுக்கு 9 மதிப்பெண்கள் பெற்ற மருத்துவருக்கு கடைசி முதுகலை மருத்துவ இடத்தை ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு ஒதுக்கியுள்ளது. தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய NBEMS, NEET PG 2026 கட்-ஆஃப் குறைப்பதில் தனக்கு ‘எந்தப் பங்கும் இல்லை’ என்று மேலும் கூறியது. ஏனெனில் இந்த முடிவு சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் உள்ளதாக விளக்கம்.  நீட் தேர்வு அடிப்படையிலேயே மோசடி என்பதைத் திராவிடர் கழகம் தொடக்கம் முதலே சொல்லி வந்தது இன்று மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. ஒன்றிய அரசு இப்போதாவது தனது அகந்தையை அகற்றி, நீட் தேர்வுக்கும் விலக்குக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திட இம் மாநாடு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.

முன்மொழிதல்: வழக்குரைஞர் ச.மணிமொழி

சட்டக் கல்லூரி மாணவர் கழகத் துணை அமைப்பாளர்

தீர்மானம் எண் 6:

வந்தே மாதரம் மதவெறிப்
பாடலைத் திணிக்காதீர்!

வந்தே மாதரம் என்னும் பாடல் குறித்த சர்ச்சை 90 ஆண்டுகள் பழமையானது. அதில் மதத் திணிப்பு வரிகள் இருப்பதால், அதன் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது 1937 முதலே முடிவுசெய்யப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலும் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்ட ஒன்று.

இந்நிலையில் மீண்டும் இச் சர்ச்சையைக் கிளறி, வந்தே மாதரம் பாடலின் 6 பத்திகளையும் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது ஒன்றிய அரசின் மதவாதப் போக்கையே வெளிப்படுத்துகிறது. இந்து மதக் கடவுளரைப் போற்றும்வகையில் எழுதப்பட்டுள்ள முழுப் பாடலையும், பிற மதத்தவரும், பகுத்தறிவாளர்களும் ஒருபோதும் பயன்படுத்த முடியாது. ஏற்கெனவே “ஜனகனமண” பாடல் தேசிய கீதமாக இருக்கும்போது, இதையும் கட்டாயப்படுத்தி பாடவைப்பது அவசியமற்றது. அதிலும் முழுப் பாடலையும் திணிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தியுள்ள மதச்சார்பின்மைக்கு முற்றிலும் எதிரானது. இதனைத் தடுத்து, மதவெறியை ஒழித்து, மதச்சார்பின்மையைக் காக்க அனைத்துக் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், நீதிமன்றமும் முன்வர வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிதல்: சு.ச.திராவிடச்செல்வன்

சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர்

தீர்மானம் எண் 7:

கல்வி நிறுவனப் பாகுபாடுகளுக்கு எதிரான யூ.ஜி.சி. விதிமுறைகளை செயல்படுத்துக!

கல்வி நிறுவனங்களில் ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுப்படுவது தொடர்கதையாகி வருகிறது. ரோகித் வேமுலா, முத்துக்கிருஷ்ணன், பாயல் தத்வி, சரவணன், பாத்திமா லத்தீப் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறுவனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தியுள்ளனர். இவற்றைத் தடுக்க, பெரும் போராட்டத்துக்குப் பிறகு, யூ.ஜி.சி.யால் கொண்டு வரப்பட்ட விதிமுறைகளுக்கு, உயர்ஜாதி மாணவர்கள் என்ற போர்வையில் ஏ.பி.வி.பி என்ற பாஜக ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு நடத்திய போராட்டங்களைக் காரணம் காட்டி, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதியாகும். ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் நீதி மன்றத்தைக் காட்டி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. பாகுபாடுகளுக்கெதிரான யூ.ஜி.சி விதிமுறைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அவை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று இம் மாநாடு கோருகிறது. தவறும்பட்சத்தில் இந்திய அளவில் மாணவர்களின் பெரும் அறப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இம் மாநாடு ஒன்றிய அரசை எச்சரிக்கிறது.

முன்மொழிதல்: கோ.பிளாட்டோ

மாநில தி.க. இளைஞரணி துணைச் செயலாளர்

தீர்மானம் எண் 8:

அறிவியல் மனப்பான்மை வளர்ப்புக்குத்
தனி அமைச்சகம் உருவாக்குக!

நாளும் அறிவியலின் வியத்தகு சாதனைகள் வளர்ந்துவந்தாலும், இன்றும் மூடநம்பிக்கைகள் பெருகிக் கொண்டும், விளம்பர வெளிச்சம் பெற்றுக் கொண்டும் இருக்கின்றன. புத்தகக் கண்காட்சிகள், பண்பாட்டு நிகழ்ச்சிகள் போன்று அறிவியல் திரு விழாக்கள் பெருக வேண்டும். அறிவியல் ஆய்வும், அறிவியல் பரப்புரைகளும் விரிவாக்கப்பட வேண்டும்; ஊக்குவிக்கப்பட வேண்டும். தற்போது அறிவியல் தொழில்நுட்பத் துறையும், அவை சார்ந்த முன்னெடுப்புகளும் பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சகத்தின் ஒரு பகுதியாகவே உள்ளன. அறி வியல் வளர்ச்சி, ஆய்வுகள் ஊக்குவிப்பு, அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு, அறிவியல் விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆகியவற்றுக்குத் தனி அமைச்சகத்தை உருவாக்கி, அமைச்சரை நியமித்து முழு வீச்சில் இப் பணி நடைபெற தமிழ்நாடு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.

வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று, தி.மு.க. தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கும் திராவிட மாடல் அரசு 2.0 இதனை நிறைவேற்றி, நாட்டுக்கும் உலகுக்கும் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்றும் இம் மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *