‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’’ என்று அறிவு நாணயத்தோடு செயல்பட்டு
சாதனை படைத்த ‘திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி’ மீண்டும் மலர
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கறையோடு பாடுபடுவோம்!
கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற, வாக்காளப் பெருமக்களே ஆதரவு தாரீர்!
சாதனை படைத்த ‘திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி’ மீண்டும் மலர
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கறையோடு பாடுபடுவோம்!
கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற, வாக்காளப் பெருமக்களே ஆதரவு தாரீர்!
பல்லாயிரக்கணக்கான மக்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஆதரவு!
தஞ்சாவூர், பிப்.22 நல்லாட்சி என்பதற்கு அடையாளமாக மக்கள் வளர்ச்சிப் பணிகளில் சாதனை சரித்திரம் படைத்த – ‘திராவிட மாடல்’ அரசான தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்திட, பாடுபடுவது என்றும், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கும் மக்கள் பெருவாரியான வாக்களித்து வெற்றி பெற பாடுபடவேண்டும் என்றும், தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று (21.2.2026) மாலை நடைபெற்ற திராவிட மாணவர் கழகம், இளைஞரணி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:
- ‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’’ என்று அறிவு நாணயத்தோடு செயல்பட்டு சாதனை படைத்த ‘திராவிட மாடல் தி.மு.க. ஆட்சி’ மீண்டும் மலர 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கறையோடு பாடுபடுவோம்! கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற, வாக்காளப் பெருமக்களே ஆதரவு தாரீர்!
- பல்லாயிரக்கணக்கான மக்களும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஆதரவு!
(மற்ற தீர்மானங்கள் 4 ஆம் பக்கத்தில் காண்க).
‘‘சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்லுவோம்’’ என்ற அறிவு நாணயத்தோடு செயல்பட்டு வருவது – ‘திராவிட மாடல்’ அரசான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ஆட்சியேயாகும்.
பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, பெண்களின் மறுமலர்ச்சிக்கான பல்வேறு அடுக்கடுக்கான திட்டங்கள் – குறிப்பாக, சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணத் திட்டம் என்ற பெயரில், பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம், பள்ளிகளில் காலைச் சிற்றுண்டித் திட்டம், மாணவர்களுக்குத் தவப்புதல்வன் திட்டம், ‘தோழி’ மகளிர் விடுதி என்ற அடுக்கடுக்கான திட்டங்கள்மூலம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்’ அரசு வீரியத்துடன் செயல்பட்டுவருகிறது.
மருத்துவத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழ்கிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள், மக்களைத் தேடி மருத்துவம், உலக முதலீட்டாளர் மாநாடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில் உதவி, வேளாண் துறையில் பாசனத் திட்டங்கள், சாலை மற்றும் போக்குவரத்து, சென்னை மெட்ரோ ‘‘சிங்கார சென்னை 2.0’’ திட்டம், குடிநீர் மற்றும் கழிவு நீர்த் திட்டங்கள், சமூகநீதி, மதச்சார்பின்மைக் கொள்கையில் பெரும்பாய்ச்சல், ‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
உள்நாட்டுத் தொழில் வளர்ச்சி (GDP), முதலீடு ஈர்ப்பு, மனித வள மேம்பாடு இவற்றில் முன்னிலை வகிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு ஓளிவீசுகிறது.
வளர்ந்த நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே விவசாயிகள் வளர்ச்சி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 25 விழுக்காடு வேளாண்மையில் ஈடுபட்டு வருவதாக 2025–2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.9 விழுக்காடு என்பது – இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தில் இரு மடங்கு என்பது பெரும் வியக்கத்தக்க சாதனையாகும்.
தமிழ்நாட்டின் உற்பத்தித் தொழில்துறை 14.74 விழுக்காடு என்பது இந்திய சராசரியைவிட மும்மடங்கு அதிகம் என்பது அசாதாரண சாதனையாகும்.
‘திராவிட மாடல்’ ஆட்சியில் தொழிலாளர் பங்கேற்பு 72.1 விழுக்காடாக உயர்ந்துள்ளதால், வேலையின்மை 3.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களின் சராசரி 33.7 விழுக்காடாகும்; தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியிலோ 44 விழுக்காடாகும்.
தமிழ்நாட்டில் வணிகப் பொருள் ஏற்றுமதி இரட்டிப்பாகி உள்ளது. மின்னணுவியல், ஜவுளி மற்றும் தோல் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சி இந்திய அளவில் முதன்மை இடத்தில் பல்துறைகளிலும் ஒளிர்கிறது என்ற தகவலை ஒன்றிய அரசே புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளது என்றால், தி.மு.க. தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை எவரும் எட்ட முடியாத முகட்டில் நிலை பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கான சட்டம் இயற்ற நீதிபதி தலைமையில் ஆணையம், வீதிகளுக்கும், சாலைகளுக்கும் சூட்டப்பட்டுள்ள ஜாதிப் பெயர் நீக்கம், காலனிப் பெயர் நீக்கம் போன்றவை தி.மு.க. அரசின் முற்போக்குச் சிந்தனைகளுக்கான அடையாளங்களாகும்.
சித்தாந்த ரீதியாக ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்கள், பி.ஜே.பி.யை நேரிடையாக எதிர்க்கக் கூடிய கொள்கையைக் கொண்டதும், ‘திராவிட மாடல்’ ஆட்சியே! ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்கு சித்தாந்த ரீதியாகவும் எதிர் நிலை எடுக்கக் கூடியது ‘திராவிட மாடல்’ ஆட்சியே!
பண்பாட்டு மீட்சியின் அடிப்படையில், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற ஆளுமைகளின் பிறந்த நாளை அரசு ரீதியாக முன்னுரிமை அளித்தும், தந்தை பெரியார் படைப்புகளை உலக மொழிகளில் கொண்டுவரும் முற்போக்கு முயற்சியிலும் ‘திராவிட மாடல்’ அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒன்றிய அரசு பல வகைகளிலும் தமிழ்நாட்டை புறக்கணித்தாலும், முறைப்படி தரவேண்டிய நிதியைத் தர மறுத்தாலும், முட்டுக்கட்டைப் போட்டாலும் அதையும் கடந்து இந்தியாவில் முதல் வளர்ச்சி மாநிலமாக ஒளிவீசுவது தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் மகத்தான சாதனை சரித்திரமாகும்.
ஹிந்தித் திணிப்பு உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய தேசிய கல்வித் திட்டத்தை எதிர்ப்பதால், கல்விக்கான மானியத்தை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. ஆனாலும், கொள்கையே பெரிது என்ற நிலையில், அதனைப் புறந்தள்ளி, தமிழ் மண்ணுக்கான தனித்தன்மையான கொள்கைகளில் பலமாகக் காலூன்றி, வீறுநடை போட்டுவருகிறது. பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடுக்கு வழிவகுக்கும் 103 ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பி.ஜே.பி. அரசு நிறைவேற்றினாலும், சமூகநீதிக் கொள்கைக்கு அது எதிரானது. ஆகையால், அதனைத் தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசு செயல்படுத்த மறுத்துவிட்டது.
மக்கள் நல ஆட்சி (Welfare State) என்பதற்கு முழு முதல் இலக்கணமாக செயல்பட்டுவரும் தி.மு.க.தலைமையிலான இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சியே 2026 இல் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில், இதுவரை எந்தக் கட்சி ஆட்சியும் பெற்றிராத பெரும்பான்மையை எட்டும் வகையில், தி.மு.க.வுக்கும், அதன் தோழமைக் கூட்டணிக் கட்சிகளுக்கும் மகத்தான வெற்றியைத் தேடித் தருமாறு தமிழ்நாட்டு வாக்காளர்ப் பெருமக்களை திராவிடர் கழக மாநாடு கேட்டுக்கொள்கிறது – வலியுறுத்துகிறது. கூட்டணிக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் என்றும் கேட்டுக் கொளகிறது.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற, கடுமையாக எல்லா வகையிலும் திராவிடர் கழகம் பாடுபடுவது என்று இம்மாநாடு தீர்மானித்துப் பிரகடனப்படுத்துகிறது.
