கடந்த ஆகஸ்ட் முதலே மேலை நாட்டு ஊடகத்தில் கொதிநிலையில் இருந்தது சிறுமிகளைக் கடத்தி பெரும் பிரமுகர்களுக்குப் பாலியல் பண்டமாக்கும் மோசமான தொழிலைச் செய்த ஜெப்ரி எப்ஸ்டீன் செய்தி. இந்த ஆண்டு, குறிப்பாக மோடி அரசின் பெட்ரோலிய அமைச்சர் ஹர்நீதிப் சிங் பூரி பெயர் வந்த பிறகு இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நார்வே, பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மன், ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சி அடைந்த மேலைநாடுகளின் மிகப் பெரிய பதவிகளில் உள்ளவர்கள், பெரும் தொழிலதிபர்கள் போன்றோர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்த சான்றுகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு உள்ளது.
இதில் தொடர்புடையதாக இங்கிலாந்து மன்னரின் தம்பி ஆன்ட்ரூ வரை கைதுகள் அரங்கேறியுள்ளன.
ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் தேவதாசி
எப்ஸ்டீனும் அவரது உதவியாளர்களும் (முக்கியமாக கிஸ்லேன் மேக்ஸ்வெல்) மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் சிறுமிகளைத் தங்கள் வலைக்குள் கொண்டு வந்தனர்.
குறிப்பாகச் சிறுமிகளிடம் பழகி, அவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாகக் கொடுத்து அவர்களை விருந்து மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். அங்கிருந்துதான் இந்த மனிதக் கடத்தல் துவங்குகிறது.

அதாவது கேளிக்கை விடுதிகளில் போதைப்பொருள் பழக்கம் ஏற்படுத்தி அவர்களை போதைக்கு அடிமையாக்குவது, வீடுகளில் வேலைக்குச் செல்வது போல் சென்று, அங்கு உள்ள சிறுமிகளை வலையில் வீழ்த்தி கடத்துவது, வெளிநாடுகளில் பெற்றோர்களிடம் சிறுமிக்கு நல்ல வேலையும், வசிப்பிடமும் தருகிறோம் என்று கூறி கடத்தி வருவது என தொடர்ந்து பல ஆண்டுகள் இக்கடத்தல் நடந்துள்ளது. அப்படிக் கடத்தி வருபவர்களுக்கு 200 முதல் 300 அமெரிக்க டாலர் வரை பணம் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமே, அவர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்ற சிறுமிகளை அழைத்து வந்தால் கூடுதல் பணம் தருவதாக எப்ஸ்டீன் ஆசை காட்டினார். இதன் மூலம் ஒரு பெரிய வலைப்பின்னலை அவர் உருவாக்கினார்.
தான் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்பதையும், அரசியல் தலைவர்களுடனும், பிரபலங்களுடனும் தனக்கிருக்கும் நட்பைக் காட்டி, சிறுமிகளின் எதிர்காலத்திற்கு (மாடலிங் அல்லது கல்வி) உதவுவதாகக் கூறி அவர்களை நம்ப வைத்தார்.

தனியார் விமானங்கள்:
தனது சொந்த விமானங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கும், தனது தனித் தீவிற்கும் சிறுமிகளைக் கொண்டு சென்றார் எப்ஸ்டீன்.
அண்மையில் வெளியான 30 லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்களின் மூலம் சில குறிப்பிட்ட நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க், புளோரிடா மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய பகுதிகளில் இருந்த ஏழை, நடுத்தர குடும்பத்துச் சிறுமிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
லாட்வியா, லிதுவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் இருந்து சிறுமிகளும், இளம் பெண்களும் விமானம் மூலம் கடத்தி வரப்பட்டதாகப் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

லண்டனின் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் வழியாகப் பல பெண்கள் கடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் காவல்துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது. அய்க்கிய நாடுகள் சபையின் (UN) வல்லுநர்கள், இது ஒரு “பன்னாட்டுக் குற்றவியல் அமைப்பு” என்றும், உலகெங்கிலும் உள்ள ஏழ்மையான, பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள சிறுமிகளே எப்ஸ்டீனின் முதன்மை இலக்காக இருந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஜெப்ரி எப்ஸ்டீன் செய்த சகிக்கவே முடியாத அதே கொடூர செயலை அன்று பெற்றோரின் அனுமதியோடு கடவுள் பெயரால் நடத்தினார்கள். அதுதான் தேவதாசி முறை!
தேவதாசி என்ற பெயரில் இறைப்பணி?
எப்ஸ்டீன் செய்ததைத்தான் ஸநாதனமும் செய்தது. தேவதாசி என்ற பெயரில் ‘இறைப்பணி’ செய்ய பெண்கள் நேர்ந்து விடப்பட்டனர்.
அது பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் ஒரு கொடிய நடைமுறையாக மாறியது.
இந்த முறையில் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால், பருவமடையாத சிறுமிகள் கூட இந்த நடைமுறைக்கு உள்ளாக்கப்பட்டதுதான். “பொட்டுக் கட்டுதல்” என்ற சடங்கின் மூலம் சிறுமிகள் கடவுளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். இதன் பிறகு அவர்கள் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற விதி திணிக்கப்பட்டது.

கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டதாகச் சொல்லப் பட்டாலும், நடைமுறையில் அவர்கள் அந்த ஊரின் முக்கிய நபர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தனர்.
கோயிலின் நிர்வாகத்தைக் கவனிப்பவர்கள், பார்ப்பன அர்ச்சகர்கள். தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தப் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினர்.
ஊர் பெரிய மனிதர்கள் மற்றும் ஜமீன்தார்கள்
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள், தேவதாசிகளைத் தங்களின் அந்தரங்கச் சொத்தாகவே கருதினர். வெளியூரில் இருந்து வரும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கு “விருந்தோம்பல்” என்ற பெயரில் இந்த இளம்பெண்கள் கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்டனர்.
தேவதாசிகளாக மாற்றப்பட்ட பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி, புண்ணியம் கிடைக்கும் என்ற ஆசையைத் தூண்டி பெற்றோர்களே தங்களின் பெண் குழந்தைகளை இதில் தள்ளிவிடும் அவலமும் நடந்தது. ஒருமுறை இந்தப் பிடிக்குள் சிக்கிய பெண், அதிலிருந்து மீள முடியாமல் வாழ்நாள் முழுவதும் ஒரு ‘பொதுச் சொத்தாக’ வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்.

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி: தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரான இவர், தேவதாசி முறையை ஒழிக்கத் தந்தை பெரியாரின் ஆலோசனையின் கீழ் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்: இத்துறையில் இருந்து மீண்டு வந்த இவர், தனது எழுத்துகள் மற்றும் பேச்சுகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சுயமரியாதை இயக்கத்தின் வீரமிகு பரப்புரையாளர்.
பல போராட்டங்களுக்குப் பிறகு, 1947இல் மெட்ராஸ் தேவதாசி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பெண்களைக் கோயிலுக்கு நேர்ந்து விடுவது குற்றமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தென் இந்தியாவின் ஆந்திரா, கருநாடகா, மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேசம், வடக்கு மகாராட்டிரா, உத்தராகண்ட், அரியானா, குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இன்றும் இந்த தேவதாசி என்ற கொடூர நடைமுறை உள்ளது.
மடங்கள் – நவீன தேவதாசி உருவாக்கம்!
இந்தியாவில் மடங்கள், சாமியார்கள் ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா போன்றவர்கள் தொடர்பான விவகாரங்கள் சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
இந்திய சமூகத்தில் ஆன்மிகம் என்ற பெயரில் செயல்படும் மடங்கள் அத்துமீறல்களுக்கு வழி வகுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கின்றன.
பிரபல பெண் எழுத்தாளர் ஒருவர், “ஜெயேந்திர சங்கராச்சாரியார் எனது கையைப் பிடித்து இழுத்தபோது அதிர்ச்சி அடைந்தேன். ‘லோக குரு’ என்று அழைக்கப்படும் நீங்கள் இப்படிச் செய்யலாமா? என்று கேட்க, லோகத்தில் ‘யார்தான் இதைச் செய்யவில்லை?’” என்று கூறியதாக பிரபல வார இதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது அனைவரும் அறிந்ததே!
‘கடவுளின் தூதர்களாக’ அறிவித்துக் கொண்டவர்களின் மடங்களில் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றா? இரண்டா?
நித்தியானந்தாவின் அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்த ஜனார்த்தன சர்மா என்பவரின் மகள்களை அவர் கடத்தி வைத்திருப்பதாகப் புகார் எழுந்தது. தனது மகள்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் நீதிமன்றத்தை நாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கவிப்பேரரசு வைரமுத்து ஆண்டாள் குறித்து ஏற்கெனவே எழுதியிருந்த ஒரு பதிவைச் சுட்டிக்காட்ட, உடனே பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதில் அதிகம் பேசப்பட்டது – நித்தியானந்தா மடத்தைச் சேர்ந்த சிறுமிகளும் இளம் பெண்களும்!
அதீத ஒப்பனையோடு 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் காவி உடை. கழுத்தில் ருத்திராட்சக் கொட்டை, மாலைகளை அணிந்துகொண்டு பொதுவெளியில் பேசவே கூசும் சொற்களைக் கூறி வைரமுத்துவை வசைபாடினர்.
அந்த காட்சிப் பதிவுகளில் சிறுமிகள் பயன்படுத்திய வார்த்தைகளும், அவர்கள் பேசிய விதமும் ஆபாசமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மய்யத்தின் மீதும் இதே போன்ற புகார்கள் எழுந்துள்ளன. ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், தனது இரு மகள்களும் மூளைச்சலவை செய்யப்பட்டு அங்கு துறவிகளாக மாற்றப்பட்டிருப்பதாகக் கூறி, அவர்களை மீட்டுத் தரக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
“வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டிய பெண்களைத் தலைமுடியைச் மழித்துக் கொண்டு காவி உடுத்த வைத்திருப்பது ஏன்?” என்பது இவர்களது கேள்வி.
ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தாக்கல் செய்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு மிக முக்கியமான கேள்வியை எழுப்பியது.
“ஈஷா மய்யத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்து வாழ்க்கையில் நிலைநிறுத்தியுள்ள நிலையில், பிறரது மகள்களை மட்டும் ஏன் தலைமுடியை மழித்துக்கொண்டு துறவறம் பூணச் சொல்கிறார்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
காவல்துறை விசாரணை
இதைத் தொடர்ந்து, ஈஷா மய்யத்தில் உள்ளவர்கள் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு அரசு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஈஷா மய்யம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றம் பெண்களின் விருப்பத்தை உறுதி செய்ய மாவட்ட நீதிபதி ஒருவரை அனுப்பி விசாரணை நடத்த அறிவுறுத்தியது.
நித்தியானந்தா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் மீதான வழக்குகள் வேறு பரிமாணத்தை எட்டியுள்ளன. இவரைக் கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் மூலம் ‘புளூ கார்னர்’ அறிவிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எங்கு இருக்கிறார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
குழந்தைகள் கடத்தல் வழக்கு
அகமதாபாத் ஆசிரமத்தில் குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தது மற்றும் சித்திரவதை செய்தது தொடர்பான வழக்குகளில் குஜராத் காவல்துறை விசாரித்து வருக்கிறது.
சாமியார்கள் மற்றும் மடங்கள் மீதான புகார்களைக் கையாளும் சட்டப் பிரிவுகளாக 340/342 பி.என்.எஸ். தவறான முறையில் ஒருவரை அடைத்து வைத்தல் (Wrongful Confinement), POCSO சட்டம்18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் ஆசிரமங்களில் பாலியல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால் இது பாயும். பி.என்.எஸ். பிரிவு 363 கடத்தல் (Kidnapping) – பெற்றோரின் அனுமதி இன்றி மைனர் பெண்களை வைத்திருத்தல்.
IT Act (தகவல் தொழில்நுட்பச் சட்டம்) போன்றவை உள்ளன.
டில்லி சிறுமிகள், பெண்கள் கடத்தல்
இந்தியாவின் தலைநகரான டில்லி, மக்கள் நெருக்கம் மற்றும் புலம்பெயர்ந்தோர் வருகை காரணமாகக் கடத்தல் கும்பல்களின் முக்கிய மய்யமாக மாறியுள்ளது. 2026இன் தொடக்க காலத் தரவுகளின்படி, டில்லியில் நாளொன்றுக்குச் சராசரியாக 50 முதல் 60 நபர்கள் காணாமல் போகிறார்கள். இதில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
கடத்தப்படும் சிறுமிகள் பெரும்பாலும் மூன்று பிரதான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பாலியல் தொழிலுக்காக டில்லியின் சிவப்பு விளக்கு பகுதிகள் மற்றும் ரகசிய விடுதிகளுக்குச் சிறுமிகள் விற்கப்படுகிறார்கள். சிறுநீரகம், தோல், கல்லீரல், நுரையீரல், குடல் ஜவ்வு, எலும்பு மஞ்சை, இதயம் போன்ற உறுப்புகளுக்காகச் சிறுமிகள் ரகசியமான மருத்துவ இடங்களுக்குக் கடத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. உடல் உறுப்புக் கடத்தல் என்பது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு குற்றமாகும். கடத்தப்படும் சிறுமிகள் அங்கீகரிக்கப்படாத சிறிய கிளினிக்குகள் அல்லது போலி மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள்.
குறைந்த விலையில் உறுப்புகள்
பணக்கார மருத்துவப் பயனாளிகளுக்கு விரைவாகவும், குறைந்த விலையிலும் உறுப்புகளை வழங்க, சட்டவிரோத மருத்துவர்களின் உதவியுடன் இவை அகற்றப்படுகின்றன.
பெரிய மருத்துவமனைகளில் இந்தச் சிறுமிகள் கடத்தல்காரர்களால் உறவினர் என்பது போன்ற போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, இந்தத் தொழில் நடக்கிறது.
இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் மூலம் சிறுமிகளுடன் பழகி அவர்களை வலையில் வீழ்த்தி டில்லிக்கு வரவழைக்கப்படுகிறார்கள்.
போதைப் பொருள் பயன்பாடு
சிறுமிகளைக் கடத்திய பின் அவர்களுக்குப் போதைப் பொருட்கள் அல்லது ஹார்மோன் ஊசிகளைச் செலுத்தி அவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்கின்றனர்.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, டில்லியில் காணாமல் போகும் சிறுமிகளில் 12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 90 சதவீதம் ஆக உள்ளனர். 2025இல் மட்டும் சுமார் 24,500 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 60 சதவீதம் பேர் மீட்கப்பட்டாலும், எஞ்சியவர்களான சுமார் 10,000 பேரின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.
ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள் தேவதாசி மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வரும் சாமியார் மடங்களின் நவீன உருவம் ஆகும்.
அமெரிக்காவில் ஒரு ஜெப்ரி எப்ஸ்டீன் தான் உள்ளார். ஆனால், இங்கே ஒவ்வொரு மடத்திலும் ஜெப்ரி எப்ஸ்டீன்கள் உள்ளனர்.
சாமியார் ஆசாராம், சத்லோக் ஆசிரமத்தின் தலைவர் ராம்பால், சாமியார் ராம் ரஹீம் உள்ளிட்ட பல சாமியார்கள் எதற்கு தற்போது சிறையில் உள்ளனர்? குறிப்பாக சத்லோக் ராம்பால், ராம் ரஹீம் மற்றும் ஆசாராம் மூவருமே பருவமடையாத சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்தது, இதற்கு சாட்சியாக இருந்தவர்களைக் கொலை செய்தது போன்ற கொடூர குற்றத்தின் காரணமாக வாழ்நாள் சிறை தண்டனையைப்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
