‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ கண்டனக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, பிப். 20 மனுதர்மத்தை அரசி யலமைப்புச் சட்டமாக்க விடமாட்டோம்; மதச்சார்பின்மையைக் காப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’ சிறப்புக் கூட்டம்!
‘‘மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா? மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப்பாடலா?’’ என்ற தலைப்பில், நேற்று (18.2.2026) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். –
பா.ஜ.க. அரசின் திட்டமிட்ட திணிப்பு!
மிகக் குறுகிய காலத்தில், தேவையைக் கருதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சிறப்பான ‘‘மதச்சார்பின்மையை குழிதோண்டி புதைப்பதா? என்ற தலைப்பிலே, நியாயமான ஒரு கேள்வியை முன்வைத்து இந்தக் கூட்டத்தை நடத்துகிறோம். ‘வந்தே மாதரம்’ – ‘தேசிய பாடல்’ என்ற திணிப்பைத் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி அதனுடைய ஆட்சி, அதன் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தில் இருந்து திடீரென்று இந்த ஆறு சரணத்தையும் பாடவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இங்கே முதலில் ‘வந்தே மாதரம்’ பாடலைப் பற்றி மிகத் தெளிவாகச் சொன்னார்கள். அந்தப் பாடலுடைய வரலாற்றைப்பற்றி, நம்முடைய கழகத் துணைத் தலைவர் கவிஞர் பூங்குன்றன் அவர்கள், ‘விடுதலை’யில் சிறப்பாக ஒரு பெரிய கட்டுரையை எழுதி இருக்கிறார். இதையெல்லாம் திரட்டி, இன்றைக்கு பேசியவர்களுடைய கருத்துகளையும் திரட்டி ஒரு சிறிய வெளியீட்டை வெளியிடுவோம். எப்பொழுதுமே ஒரு விஷயத்தை, பொதுமக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும். அவர்களிடம் விளக்க வேண்டும். தேசபக்திக்கு விரோதமாக இவர்கள் எல்லாம் பேசுகிறார்களே என்றெல்லாம், அவர்கள் ‘சாயம்’ அடிப்பார்கள், காவிச் சாயத்தை! தேசபக்திக்கு அவர்கள்தான் ஏதோ மொத்த குத்தகைதாரர்கள் மாதிரி கருதிக்கொண்டு பேசுவார்கள். அதை விளக்க வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் சிறப்பாக வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத்தினுடைய துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
எனக்கு முன் சிறப்பாக உரையாற்றியுள்ள அருமைத் தோழர் திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினுடைய தேசியத் தலைவர் பெருமதிப்பிற்கும். பேரன்பிற்கும் உரிய அய்யா ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களே,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இங்கே உரையாற்றிய சட்டப்பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய தோழர் நாகை மாலி அவர்களே,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறப்பாக இங்கே உரையாற்றிய பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி அவர்களே,
அதுபோலவே சிறப்பான முறையிலே உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே, மற்றும் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்கின்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச்செயலாளர் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் அருமைச் சகோதரர் அபுபக்கர் அவர்களே, நிகழ்ச்சியிலே கலந்து கொள்கின்ற அருமை இயக்கப் பெரியோர்களே, நண்பர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பெருமக்களே, ஊடகவியலாளர்களே, தாய்மார்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, திராவிடர் கழகம் பிரச்சாரத்தைத் நடத்தி முடித்திருக்கிறது!
இந்தக் கூட்டம் ஏன் தேவைப்படுகிறது? அண்மையிலே ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள எல்லா பகுதிகளுக்கும் சென்று, தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, திராவிடர் கழகம் பிரச்சாரத்தைத் நடத்தி முடித்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலே திடீரென்று கட்டாயப்படுத்தக்கூடிய அளவிற்கு திணிக்கக்கூடிய அளவிற்கு, அய்யா அவர்கள் சொன்னதை போல, பள்ளிக்கூடங்கள் உள்பட எல்லா இடங்களிலும் வந்தே மாதரம் பாட வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தி இருக்கிறார்கள். பல பேருக்கு வந்தே மாதரம் என்று சொல்லுவோம் என்று சொன்ன உடனே, சில திரைப்படப் பாடல்களில் வருகின்ற இரண்டு வரியை மட்டும்தான் ஞாபகம் வைத்திருப்பார்கள்.

‘ஏன், அதைப் பாடுவதில் என்ன இவர்களுக்குக் கஷ்டம்? இவர்களுக்குத் தேசபக்தி இல்லையா?’ என்று கேட்பார்கள்.
மக்கள் மத்தியிலே கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்
முழுமையாக அதன் விவரத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதைத்தான் மிக அழகாக எனக்கு முன் உரையாற்றிய நம்முடைய நண்பர்கள் சொன்னார்கள். நிறைவாக நன்றி கூற இருக்கக்கூடிய வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்கள் உள்பட வழக்குரைஞர்கள், நண்பர்கள், இங்கே குழுமி இருக்கிற அத்தனை பேரும், கவனமாக இந்த அம்சத்தைத் தெளிவாக மக்கள் மத்தியிலே கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.
1937 ஆம் ஆண்டு நடைபெற்ற
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின்போதும்!
என்ன இதனுடைய அடிப்படை? முதலில் டில்லி உள்துறையிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? ஏற்கெனவே கொடுத்த தீர்ப்பு – ஏற்கெனவே எடுத்த முடிவு – அதைப்பற்றித்தான் இங்கே சொன்னார்கள். Constituent Assembly என்ற அரசியல் நிர்ணய சபை; அதற்கு முன்னால், 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்கத்தா காங்கிரஸில், ராஜேந்திர பிரசாத், சர்தார் பட்டேல், நேரு மற்றவர்கள் எல்லாருமே கலந்து கொண்டு முடிவெடுத்த போது கூட இந்தப் பிரச்சினை வந்தது.
அந்தப் பிரச்சினை வந்தபோது தெளிவாகச் சொன்னார்கள். ‘வந்தே மாதரம்’ முழு பாட்டின் வர லாறு என்ன? ‘ஆனந்தமடம்’ என்பது ஒரு வங்காள நூல், ஒரு புதினம். அதை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற உயர்ஜாதிப் பார்ப்பனர். அந்த நாவலில், பாத்திரங்கள் பேசுவது மாதிரியும், பாடுவது மாதிரியும் உருவாக்கப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் ‘வந்தே மாதரம்’ பாடல். அதனுடைய வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மதத்தால் மாறுபட்டாலும்,
மனதால் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய
ஒரு சமுதாயம்!
நண்பர்களே, அந்த நாவலில், இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்ல, நாகரிகம் படைத்த நாம் அனைவரும் வெட்கித் தலை குனியக்கூடிய அளவிற்கு, அதில் என்ன சொல்கிறார்கள் என்றால், நம்முடைய சகோதரர்களாக வாழந்து கொண்டிருக்கிறவர்கள்; மதத்தால் மாறுபட்டா லும், மனதால் ஒன்றுபட்டு இருக்கக்கூடிய ஒரு சமுதாயமாகத்தான் – இஸ்லாமியர்களாக இருந்தாலும், கிறிஸ்தவர்களாக இருந்தாலும், ஜொராஸ்டிரியர்களாக இருந்தாலும், மதமற்ற வர்களான எங்களைப் போன்ற நாத்திகர்களாக இருந்தாலும் – எல்லோரும் ஒன்றாக – ஒரு குலம் ஓர் நிறை – அனைவரும் உறவினர் – யாவரும் கேளிர் என்ற உணர்வோடு இருக்கக்கூடிய ஒரு சமுதாயத்தில், அந்த நாவலில் என்ன வரி வருகிறது என்று சொன்னால், அவர்கள், வெள்ளைக்காரர்களைப் பார்த்து, நீ எவ்வளவு வேண்டுமானாலும் அன்றைக்குச் சொல்லி இருக்கலாம்; ‘‘வெள்ளையனே வெளியேறு’’ என்று சொன்னீர்கள்; ஆனால், தேவையில்லாமல், இஸ்லாமியர்கள் மீது அவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? இஸ்லாமியர்களைக் கொச்சைப்படுத்தி, மிக மிக இழிவாக அந்தப் பாடல்களிலே
வருகிறது.
இந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள், இந்திய நாட்டுக் குடிமக்கள் அல்லவா?
நான், அந்த வார்த்தையைச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். ஆனால், அது எவ்வளவு மற்றவர்களைப் புண்படுத்தும் என்று நினைத்துப் பார்க்கவேண்டும். அதுமட்டுமல்ல, எவ்வளவு அநாகரிக மானது – எவ்வளவு மனித நேயத்திற்கு விரோதமானது என்பதற்கு அடையாளம் – இந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்கள், இந்திய நாட்டுக் குடிமக்கள் அல்லவா? அதுமட்டுமல்ல, அவர்கள் இந்த நாட்டு வாக்காளர்கள் அல்லவா? அவர்கள் என்ன, எல்லாரும் வெளியில் இருந்து ‘தொப்’பென்று குதித்தவர்களா?
5, 6 தலைமுறைகளுக்கு முன் இந்து மதத்தவர்கள் தானே! உன்னுடைய மதத்தைச் சார்ந்தவர்கள் தானே! ‘நீ எட்டி நில்’ என்று சொன்னீர்கள். ‘தொடாதே’ என்று சொன்னீர்கள்; ‘படிக்காதே’ என்று சொன்னீர்கள்; ‘கிட்டே வராதே’ என்று சொன்னீர்கள். யார் அணைத் தார்களோ, அவரிடத்தில் போய்விட்டார்கள். இது தானே அவர்களுடைய வரலாறு! அவர்களை ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் போன்று பேசுகி றீர்களே? வெளிநாட்டில் இருந்து வந்தால் கூட மனிதநேயத்தோடு பேச வேண்டும்.
பிற மதத்தவர் எவரும் ஏற்க முடியாத பகுதியைச் சேர்த்திருக்கிறார்கள்!
ஆனால், இஸ்லாமியர்களை மிகக் கேவலமாகக் கொச்சைப்படுத்தி, அருவருப்பான வார்த்தை – அதைச் சொல்வதே நம்முடைய தகுதிக்குக் குறைவு. இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் ‘ஆனந்தமடம்’ நூலிலிருந்து ஒரு பாடலைக் கட்டாயப்படுத்துகிறார்கள். அதிலும் பிற மதத்தவர் எவரும் ஏற்க முடியாத பகுதியையும் சேர்த்தி ருக்கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்?
அதைவிட அதற்கு அடுத்தது என்ன? யாரை நாம் அழைத்து வரவேண்டும்?
பாட்டுப் பாடும்போது, லட்சுமி, சரஸ்வதி இவர்கள் எல்லாம் சூலாயுதத்தோடு மிக முக்கியமாக வர வேண்டும். இந்தக் கடவுள்கள் எல்லாம் நமக்கு துணை யாக அழைத்து வர வேண்டும் என்பது அந்தப் பாடலில் பாடப்பட வேண்டிய பகுதிக்குள்ளே இருக்கிறது.
இதோ, இந்திய அரசியலமைப்புச் சட்டம். இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கிற ஆர்.எஸ்.எஸ். அரசு – பி.ஜே.பி. அரசு, முதலில் பதவி ஏற்பதற்கு முன் – யாராக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி, பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் நீதிபதிகள் யாராக இருந்தாலும், பதவி ஏற்கும் போது, எதன் மீது பதவிப் பிரமாணம் எடுக்கவேண்டும்?
இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீது, அதிலே என்ன சொல்லியிருக்கிறதோ, அதனைக் காப்பாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான், பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச்
சட்டத்தினுடைய முகப்புரை!
அம்பேத்கர் அவர்கள் அரும்பாடுபட்டு உரு வாக்கி, இவ்வளவு காலமும் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிற இந்த அரசியலமைப்புச் சட்டத்தி னுடைய அடிக்கட்டுமானம் என்னவாக இருக்கிறது நண்பர்களே, நினைத்துப் பார்க்க வேண்டும். ‘பிரி யாம்பிள்’ என்று சொல்லக்கூடிய முகப்புரை. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினுடைய மிக முக்கியமான பகுதி. சொல்லி இருப்பது நாங்கள் அல்ல, உச்சநீதிமன்றம்.
அதைவிட பல தீர்ப்புகள் மூலமாக – The Basic Structure of the Constitution என்பது மிக முக்கியம். இது அடிக்கட்டுமானத்தை மாற்ற முடியாது. ‘We, the People of India’ என்று ஆரம்பிக்கிறது; ‘இந்திய மக்களாகிய நாம்…’ அதில் வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. எல்லா மக்களும் சேர்த்து, இந்திய மக்களாகிய நாம் – having solemnly resolved to constitute India ‘‘மக்களாகிய நாம் தேர்ந்தெடுத்து, இந்த அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது’’ என்று தொடங்குவதுதான் இந்த அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முகப்புரை. நாம் எல்லாம், இந்தியாவை அமைப்போம்! எப்படிப்பட்ட இந்தியாவை அமைப்போம், அமைக்க வேண்டும், அமைக்கிறோம் என்று அவர்கள் சொல்லுகிற நேரத்தில், into a SOVEREIGN, DEMOCRATIC, REPUBLIC, SOCIALIST, SECULAR அய்ந்து அம்சங்கள்.
யாராக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டப்படி அவர்கள் கட்டுப்பட்டவர்கள்!
அதாவது, இறையாண்மை மிக்க ஒன்று, அதற்கு அடுத்தது சமதர்மம் இரண்டு, மூன்று மதச்சார்பற்ற, நான்கு ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தில் கூட பலவகை ஜனநாயகம் இருக்கிறது. அப்படி இல்லாமல், இந்த ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்றால், குடியரசாக இருக்க வேண்டும். ஆக, அய்ந்து அம்சங்கள்! இந்த அய்ந்து அம்சங்களுக்கும், யாராக இருந்தாலும், அரசியலமைப்புச் சட்டப்படி அவர்கள் கட்டுப்பட்டவர்கள். அதன் மீது பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆனால், ஒன்றியத்தில் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வந்ததிலிருந்து, அதை ஒழிக்க வேண்டும் என்பது தான் அவர்களுடைய முதல் திட்டம்.
பிரதமர் மோடி தலைசிறந்த நடிகர்; நடிப்புக்கு முதல் பரிசு அவருக்குதான் கொடுக்க வேண்டும்!
எனவே ‘வந்தே மாதரம்’ பாடல் உள்பட, அரசியல் அதிகாரங்களை எல்லாம் பறித்துக் கொண்டிருப்பது உட்பட, எதுவாக இருந்தாலும்! இந்தப் புத்தகத்தை அப்படியே வைத்தால், நனைந்து போய், அது நீண்ட நாள்களாக இருந்தால், மேல் அட்டை மட்டும் அப்படியே இருக்கும்; உள்ளே எல்லாம் செல் அரித்துப் போயிருக்கும். அதுபோன்று, ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சி ஒன்றியத்தில் வந்து, ஒவ்வொரு நாளும் செல்லரித்ததாக இதை ஆக்கிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகத்தான் அவர்கள் நடக்கிறார்கள். ஆனால், நம்முடைய பிரதமர் மோடி தலைசிறந்த நடிகர். நடிப்புக்கு முதல் பரிசு அவருக்குதான் கொடுக்க வேண்டும். இதை நான் வேடிக்கைக்காகவோ, நகைச்சுவைக்காகவோ சொல்லவில்லை. ஒரு நிகழ்வைச் சொல்லி, அதை சான்றாவணமாக வைக்கிறேன்.
இரண்டாவது முறை அவர் பிரதமராகப் பதவி ஏற்றபோது, தொலைக்காட்சிகளில் அதை எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாண உறுதிமொழியைச் சொல்ல, பதவி ஏற்பவர்கள் அதைத் திருப்பிச் சொல்வார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி,
‘வந்தே மாதரம்’ பாடல் ஏற்புடையதா?
அதுபோன்று, பதவியேற்பு விழாவின்போது, குடியரசுத் தலைவர், ‘‘மே’’ என்று ஹிந்தியில் ஆரம்பிப்பார். ‘மே’ என்று அவர் சொன்னதும், பதவி ஏற்றுக் கொள்பவர் கடகடன்னு சொல்லத் தொடங்குவார். ‘ஈஸ்வர்கி’ (கடவுள் பெயரால்) என்று பதவிப் பிரமாணம் எடுப்பார்கள். அது போன்று, இந்த அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவேன் என்று அவர்கள் பதவி ஏற்கி றார்களே, அந்த அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ‘வந்தே மாதரம்’ பாடல் ஏற்புடையதா? இது முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தது. மதத்தை சார்ந்தது என்பது மட்டுமல்ல, அதைவிட மற்றவர்களை எல்லாம் கொச்சைப்படுத்துகின்ற அளவிற்குக் கேவலப்படுத்துவதாகத்தான் அந்த நூல் இருக்கிறது. அதனால்தான், இங்கே உரை யாற்றியவர்கள், கல்கத்தா காங்கிரஸ் மாநாடாக இருந்தாலும், அரசியல் நிர்ணய சபையாக இருந்தா லும், அதைத் தாண்டி மிக முக்கியமாக வழக்குப் போட்ட நிலையில்கூட, உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்திருக்கிறது.
‘உருவமுள்ள கடவுளை ஏற்க மாட்டோம்’ என்பதுதானே இஸ்லாமியத் தத்துவம்!
வந்தே மாதரம் பாடலில், ஆறு சரணங்கள் இருக்கின்றன; அதில் முதல் இருக்கும் இரண்டு வரியை வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அடுத்த பகுதியில் தான், நான் சொல்கிற பகுதிகள் வருகின்றன. நம்முடைய மதம், நம்முடைய கடவுள் – லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை இவை எல்லாம் பாடலில் இருக்கின்றது என்று சொன்னால், லட்சுமி, சரஸ்வதியைக் கொண்டாடுகிற ஒருவருக்கு வேண்டு மானால், அதில் உடன்பாடாக இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு – ‘உருவமுள்ள கடவுளை ஏற்க மாட்டோம்’ என்பதுதானே இஸ்லாமியத் தத்துவம். நீங்கள், மற்றவர்களை மதிப்போம் என்று சொன்னால், அதற்கு மிக முக்கியமாக, ‘மதச்சுதந்திரம்’ என்பது என்ன? ஒழுங்கு முறை இல்லையா? இதனால், நாளைக்குக் கலவரம் வராதா? தமிழ்நாடு பண்பட்ட பூமி, அதனால் இங்கே கலவரத்தை உண்டாக்க மாட்டோம். அதையே மற்ற மாநிலங்களில் செய்தால், என்னாகும்? அதைவிட மிக முக்கியம், எத்தனை இஸ்லாமிய நாடுகளோடு நீங்கள் கை குலுக்கிறீர்கள்? ஒப்பந்தம் போட்டு இருக்கி றீர்கள்? இந்த நாட்டினுடைய கவுரவம் என்ன ஆவது? தேசியம் என்ன ஆவது? உலக அளவில் இறையாண்மை என்ன ஆவது? மனித நேயம் என்ன ஆவது? இதுதான் எங்களுடைய கேள்வி. தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். ‘வந்தே மாதரம்’ என்று சொல்வதை மட்டும் கேட்டுவிட்டுச் சொல்லாதீர்கள். அது ஒரு காலத்தில், சுதந்திரத்துக்கு ஒரு சொல்லாகக் கூட இருந்திருக்கலாம். அதைப்பற்றி ஹாஜா கனி சொன்னார் – கலைஞர் சொன்னார் என்று! ஒரு காலத்தில், காங்கிரசை எதிர்த்து, அதைப்பற்றிச் சொல்லும்போது, ‘வந்தே மாதரம்’ என்றால், ‘வந்தே ஏமாத்துறோம்’னு சொல்லக்கூடிய அளவுக்கு கலைஞர் போன்றவர்களே பேசியிருக்கிறார். அது பழசு. இப்பொழுது நாம் அங்கே கூட போக வேண்டாம். அதற்குப் பதிலாக இப்போது ‘வந்தே மாதரம்’ பாடலை பாடவேண்டும் என்று சொல்வதன்மூலம், ‘வந்தே மாதரம்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘வந்தே மோதுகிறோம்’ என்று சொல்கிறார்கள். நாங்கள் எல்லாம் மோதுவதற்குத் தயாராக இருக்கிறோம்; நீங்கள் எல்லாம் ஒற்றுமையாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம்.
‘வந்தே மாதர’ப் பாடல் அல்ல;
‘வந்தே மோதுகிற’ பாடல்!
ஆகவே. மோதுதலை உருவாக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள். மதக்கலவரங்களை உரு வாக்க வேண்டும் என்பதற்காக, அது ‘வந்தே மாதர’ப் பாடல் அல்ல; ‘வந்தே மோதுகிற’ பாடல்; ஆனால், ‘மோதாதீர்கள், ஒற்றுமையாக இருங்கள்’ என்று சொல்வதற்குத் தான் இந்தக் கூட்டம். அது மட்டுமல்ல நண்பர்களே, இன்னும் இரண்டு விஷயம். அரசியலமைப்புச் சட்ட ரீதியாகப் பேசுகிறோம். இது ஒரு மிக முக்கியமான ஒரு ‘ஹாவனூர் லெக்சர்ஸ்’ என்று சொல்லக்கூடிய அளவில், தலைமை நீதிபதியாக இருந்து, ஓய்வு பெற்ற ஒருவர். Havanur Endowment Lecture என்ற நூல் எழுதி இருக்கிறார். அதில், அரசியலமைப்புச் சட்டத்தில், விவாதம் நடந்தபோது, என்ன நடந்தது என்று சொல்லுகிற போது, ஒரு தெளிவான செய்தியை இங்கே எடுத்துச் சொல்லுகிறார். அதாவது, மதச்சார்பின்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும் என்பது அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள் அத்தனை பேரும் நாட்கணக்கில் விவாதித்துதான், ஒவ்வொரு பகுதியும் இதில் வைக்கப்பட்டிருக்கிறது. அதில், மிக முக்கியமான ஒரு பகுதி என்னவென்றால், பதவி ஏற்றுக் கொள்கிறார்கள் பாருங்கள், அந்தப் பதவி ஏற்கும் போது, மிக முக்கியமாக இரண்டு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள் – இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்.
இரண்டு, மூன்று நாள்கள் விவாதித்து…
அதாவது ‘In the Name of God’ கடவுள் நம்பிக்கை யாளர்கள் கடவுள் பெயரைச் சொல்லி, பதவிப் பிரமாணம் எடுப்பார்கள். சரி, கடவுளை நம்பாதவதவர்கள் இருக்கிறார்கள் அல்லது மற்றவர்கள் இருக்கிறார்கள். ‘புத்திஸ்ட்’ என்றால், அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்க முடியாது. பகுத்தறிவுவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன வழி? என்று சொல்லும்போது, இந்த அரசியலமைப்புச் சட்டத்தில், அம்பேத்கர், மற்றவர்கள் எல்லாம் இரண்டு, மூன்று நாள்கள் விவாதித்து, அவர்கள் ஏற்படுத்திய அமைப்புப் படி, அதற்குப் பிறகு வழிகண்டார்கள்.
எப்படி என்று சொன்னால், ஒன்று, ‘கடவுளின் பெய ரால்’ உறுதிமொழி எடுத்துக் கொள்வது. இன்னொன்று By Affirmation என்று சொல்வது. அதற்கு அர்த்தம், ‘மனசாட்சிப் படி’ – மனசாட்சி என்று சொல்ல வேண்டிய வார்த்தை இல்லாமல். ‘நான் என்னுடைய நம்பிக்கை யின்படி’ உறுதிமொழி எடுத்தபடி அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று இரண்டு வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார்கள்.
நம்புகிறவர்களுக்கும் வாய்ப்பு உண்டு; நம்பாதவர்களுக்கும் உண்டு!
எனவே, நாத்திகர்களுக்கும் வாய்ப்பு உண்டு; ஆத்திகர்களுக்கும் வாய்ப்பு உண்டு. நம்புகிறவர்களுக்கும் வாய்ப்பு உண்டு; நம்பாதவர்களுக்கும் உண்டு. அந்த இரண்டு பேருக்கும் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வரலாறு எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும். நிறைய பேருக்கு இது தெரியாது. நான் எடுத்து காட்டுகிற பகுதி, அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் இருந்து, இந்தப் பகுதி எப்படி இறுதி யாக்கப்பட்டது அம்பேத்கர் அவர்களால் – அரசியல் நிர்ணய சபையால் என்பதற்கு முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
எச்.வி.காமத்
The debate on the preamble unfolded a very interesting aspect. Shri H.V.Kamath, a renowned Socialist, and a leading member of the Constituent Assembly moved an amendment to the preamble to the effect that the first sentence of the preamble should read:
இதில் நகைப்புக்குரிய ஓர் இடம் என்னவென்றால், எச்.வி.காமத் அவர்கள், சோசியலிஸ்ட். அதனுடைய கதி நம்மூரில் எப்படி இருக்கிறது பாருங்கள்.
அவர் என்ன சொல்கிறார் என்றால்,
‘‘In the name of God, We the People of India having solemnly resolved to constitute India into a sovereign democratic republic and to secure to all her citizens…..”
Shri Kamath wanted that – “the Constitution should be consecrated by a solemnly dedication to God in the spirit of the Geetha”.
பகவத் கீதை அடிப்படையில், அந்தக் கடவுளை முன் வைக்கவேண்டும் என்று ஒரு யோசனை – ஒரு தீர்மானம் கொடுக்கிறார்.
திருமலாராவ்
திருமலாராவ் என்பவர், டெபுடி ஸ்பீக்கராக இருந்த வர். அனந்தசயன அய்யங்கார் ஸ்பீக்கராக இருந்தார். திருமலாராவ் அவர்கள் ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் நாத்திகர் இல்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்.
“God should not be subjected to the vote of the House”.
Pandit H.N.Kunzru while opposing the amendment said that-
“Sacred feeling should not have been brought into the array of discussion. The proposed amendment was inconsistent with the preamble which promises liberty of thought, expression, belief, faith and worship to everyone”.
Thereafter Shri Kamath pressed for a vote and the amendment was negatived by 41 against 68.
இதன் தமிழாக்கம் வருமாறு:
“கடவுள், சபையின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப் படக்கூடாது” என்று திருமலாராவ் கூறினார்.
பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு
திருத்தத்தை எதிர்த்த பண்டிட் எச்.என்.குன்ஸ்ரு, “புனித உணர்வு விவாத வரிசையில் கொண்டு வரப்பட்டிருக்கக்கூடாது. முன்மொழியப்பட்ட திருத்தம் அனைவருக்கும் சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தை உறுதியளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரைக்கு முர ணானது” என்று கூறினார்.
அதன் பிறகும் சிறீ காமத் வாக்கெடுப்புக்கு அழுத்தம் கொடுத்தார். மேலும் திருத்தம் 68–க்கு எதிராக 41 வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது.
கடவுள் தோற்றுப் போனார்;
கருத்துரிமை வெற்றி பெற்றது!
இந்திய அரசியலமைப்புச் சட்ட முகப்புரையில், கடவுள் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று சொல்லி 68 பேர் வாக்களித்தனர். கடவுள் இருக்கலாம் என்று சொல்ல 41 பேர் வாக்களித்தனர். முடிவில், கடவுள் தோற்கடிக்கப்பட்டார்.
அரசியல் நிர்ணய சபையில், கடவுள் தோற்றுப் போனார்; கருத்துரிமை வெற்றி பெற்றது.
மத சுதந்திரத்திற்கு எதிரானதல்ல!
ஆகவே, அந்தக் கருத்துப்படி பார்த்தால், மதச்சார் பின்மை என்று சொல்வதனுடைய நோக்கம் என்ன? அதன்படி இந்தக் கருத்து ஏற்கத்தக்கதா? ஓர் இஸ்லாமியர் எப்படி அதை ஏற்றுக் கொள்வார்? ஒரு கிறித்துவர் எப்படி அதை ஏற்றுக் கொள்வார்? கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பாடப்பட்ட தேசப் பக்திப் பாடலின்போது, கிறித்துவ மதத்தைச் சார்ந்த மாணவர்கள் பாடவில்லை என்று பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு நீக்கியது. இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது, தேசப் பக்தி பாடாமல் இருந்தது தவறு; அந்த மாணவர்களுக்குத் தண்டனை கொடுத்தது சரிதான் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் மாணவர்கள். உச்சநீதிமன்றம், ‘‘தேசிய கீதத்தையோ அல்லது பாடலையோ பாடுவதை மறுத்தாலும், அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது போதுமானது. அவர்கள் மத வழக்கத்தை மீறி, தேசிய கீதத்தை (ஜனகனமண) பாடவில்லை என்றாலும், மரியாதையுடன் எழுந்து நின்றனர். அதுவே, போதுமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி (பிரிவு 25) பேச்சு மற்றும் மத சுதந்திரத்திற்கு எதி ரானதல்ல’’ என்று தீர்ப்பளித்தது.
1937 இல் காங்கிரஸ் மாநாடு, அதற்குப் பிறகு அரசியல் நிர்ணய சபை, அதற்குப் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இவ்வளவையும் மீறியது உள்துறை அமைச்சகத்தினுடைய ஆணை.
கிரிமினல் சட்டப்படி உள்துறை அமைச்சர் மீது வழக்குப் போட வேண்டும்!
இன்னொரு படி சென்று நான் மேலே சொல்லு கிறேன், நியாயம் உள்ளவர்கள் பதில் சொல்லட்டும். புராணத்தில் இருப்பதைச் சொன்னால், உடனே மதத்தைப் புண்படுத்தி விட்டார்கள். உடனே அவர்கள் மேல் வழக்கு போடு என்று சொல்லி, வழக்குப் போடுறார்கள். காரணம், இந்தியன் பீனல் கோட் (IPC) அந்த IPC யில், மதத்தைப் புண்படுத்துகிற செக்சன் 295ஏ என்ற பிரிவின்படி, அடுத்தவர்கள் மதத்தைப் புண்படுத்தினால், கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். இப்போது உள்துறை அமைச்சகம் போட்டிருக்கிற ஆணை என்பது மற்றவர்களைப் புண்படுத்தாதா? வந்தே மாதரம் பாடவேண்டும்; அப்படி பாடவில்லை என்றால், தண்டனை என்றால், முதல் குற்றவாளி யார்? கிரிமினல் சட்டப்படி உள்துறை அமைச்சர் மீது வழக்குப் போட வேண்டும். நான் ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் பேசுகிறேன் – திராவிடர் கழகத்துக்காரன் என்ற முறையில் இல்லை. சட்டப்பூர்வமாக இதற்குப் பதில் சொல்லட்டும்.
இருநாடு தத்துவத்தை
முதன்முதலில் சொன்னது யார்?
‘நாங்கள் நினைத்தால் எல்லாம் செய்வோம்; எங்களைக் கேட்பதற்கு ஆளே கிடையாது’, அப்படித்தானே! ‘‘தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால், தம்பி சண்டப் பிரசண்டம்’’ என்று ஒரு பழமொழி உண்டு. அது மாதிரி முழுக்க முழுக்க இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதம். எல்லாவற்றையும் விட, அன்றைக்கே அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது அருவருப்பான விஷயம். அன்றைக்கே அது மதக்கலவர்களுக்கு வித்திட்டது. எதற்காக அவர்களை இவ்வளவு கொச்சைப்படுத்திப் பேச வேண்டும். அவர்க ளுடைய தத்துவத்தை விட்டுவிடுங்கள். ஆனால், இழிவுபடுத்திப் பேசினால், அவர்கள் நம்முடைய மக்கள் இல்லையா? இன்னுங்கேட்டால், இருநாடு தத்துவத்தை முதன்முதலில் சொன்னது யார்? ஹிந்துத்துவாவை உண்டாக்கிய சவார்க்கார். Two Nations Theory உண்டாக்கியது முஸ்லிம்கள் அல்ல, சவார்க்கார். அதை ஆதாரத்தோடு சொல்ல முடியும் – பெரிய விவாதத்துக்குரிய ஒன்று அது.
நாட்டுக்குரியவர்கள் மட்டுமல்ல,
நம் வீட்டுக்குரியவர்களும் கூட!
அந்த நேரத்தில் கூட, நீங்கள் பாகிஸ்தானுக்குப் போறீங்களா? இங்கே இருக்கப் போறீங்களா? என்று கேட்டபோது, 10 கோடி முஸ்லிம்கள், இந்த நாடுதான், நாங்கள் பிறந்த நாடு என்று சொல்லி, அன்றிலிருந்து இன்று வரையில் இந்த நாட்டுக்குரியவர்களாய் இருக்கி றார்கள்; ஏனென்றால் நாட்டுக்குரியவர்கள் மட்டுமல்ல, நம் வீட்டுக்குரியவர்களும் கூட அவர்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கு இதுதான் பரிசா? அவர்களை இவ்வளவு கொச்சைப்படுத்திப் பார்ப்பதா? அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? அது மட்டுமல்ல, எங்களைப் பார்த்து மனம் புண்படுகிறது என்று சொல்றீங்களே, நீங்க ஏன் தேவையில்லாமல், பன்றிகள் என்று கொச்சைப்படுத்திப் பேசுறீங்க? பன்றி என்ன சாதாரண விஷயமான்னு நான் திருப்பி ஒரு கேள்வி கேட்டேன் என்றால், இந்த ஹிந்துத்துவவாதிகள் பதில் சொல்ல வேண்டும் அல்லவா! மகாவிஷ்ணு அவதாரம் அது ஒருவேளை நாளைக்குச் சொன்னாலும் சொல்வார்கள், ‘உங்களை மிகவும் உயர்த்திச் சொல்லி இருக்கிறோம் – அவதாரம் என்று சொல்லியிருக்கிறோம்’ என்று சொன்னாலும் சொல்வார்கள். கடவுளை சங்கடப்படுத்தலாமா? அரசியலமைப்புச் சட்டத்தில், கடவுளைக் கொண்டு வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்களே, அந்த அடிப்படையில், வந்தே மாதரம் பாடலைப் பாட நீங்கள் ஆணை போடலாமா?
மதம் சார்ந்ததாக நாட்டை அணுகக் கூடாது; மனிதம் சார்ந்த பிரச்சினையாக
இதை அணுக வேண்டும்!
எனவேதான், இது அநாகரிகம், மனித நேயத்திற்கு விரோதம். மதம் சார்ந்ததாக நாட்டை அணுகக் கூடாது; மனிதம் சார்ந்த பிரச்சினையாக இதை அணுக வேண்டும். சட்டம் சார்ந்த பிரச்சினையாக இருக்கவேண்டும் – அரசியலமைப்புச் சட்டப்படி.
அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம், இரட்டை நாக்கு, ஆரிய மாயை என்று அடையாளப்படுத்து கிறோம். ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் எழுதுகிறார்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு, ‘‘மனுதர்மம் தான் அரசியலமைப்புச் சட்டம் ஆகவேண்டும்’’ என்று!
அதை அறிவிக்காமலே இப்போது உண்டாக்கி இருக்கிறார்கள். ‘செக்குலரிசம்’ என்பதைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரே நாடு, ஒரே மதம், அதை ஹிந்துராஷ்டிரத்தை உண்டாக்கி விடுவோம் என்கி றார்கள். ஒவ்வொரு நாளும் அதை செய்து கொண்டே வருகிறார்கள். பல பிரச்சினைகளுக்கு மத்தியில், மக்களுக்கு இதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
திடீர்னு அறிவிப்பார்கள்; ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறோம். இதெல்லாம் உங்களுக்கு மலிவான பொருள் என்று சொல்லிவிட்டு, அடுத்தாக பிரதமர் மோடி என்ன சொல்கிறார் என்றால், ‘‘தீபாவளியை முன்னிட்டு இதை செய்திருக்கிறோம்’’ என்றார்.
தீபாவளி யாருடைய பண்டிகை? எந்த மதத்தினு டைய பண்டிகை? நன்றாக நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆகவே, அரசியலமைப்புச் சட்டத்தினுடைய ‘செக்குலரிசம்’ என்று சொல்லக்கூடிய பகுதியைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். ‘சமதர்மம்’ என்பதைத் தூக்கி எறிந்துவிட்டார்கள்.
அந்த ஊர் மோடி – ட்ரம்ப்;
இந்த ஊரு ட்ரம்ப் – மோடி!
அதே மாதிரி, மிக முக்கியமாக இன்றைக்கு அமெரிக்காதான் முடிவு செய்கிறது, நாம் என்ன வாங்க வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும்? என்ன ஏற்றுமதி செய்யவேண்டும்? என்று! அந்த ஊர் மோடி – ட்ரம்ப். இந்த ஊரு ட்ரம்ப் – மோடி.
இறையாண்மை எங்கே போயிற்று? எதை நான் வாங்குவது? எதை நான் விற்கவேண்டும்? எதை ஏற்றுமதி, இறக்குமதி செய்யவேண்டும்? இதெல்லாம் யார் முடிவு செய்வது? நம்முடைய வெளியுறவுத் துறைதானே!
ஒரு பக்கம் சீனாவிடம் வாங்காதே, ரஷ்யாவிடம் வாங்காதே என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்னால், அதற்குத் தலையாட்டிக் கொண்டிருந்தால், இறை யாண்மை போய்விட்டது என்றுதானே பொருள்.
அதற்கு அடுத்து சோசலிசம் என்னாயிற்று? அதானி வீட்டுக்குள் தூங்குகிறது. அம்பானி, அதானி, டாட்டா, பிர்லாக்களிடம் நாட்டின் பொதுத்துறையே முழுவதுமாக காலியாகிவிட்டது.
எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட நாடாளுமன்றத்தில் வாய்ப்பில்லை!
அதற்கு அடுத்தது, டெமாக்ரசி – ஜனநாயகம்! நாடாளுமன்றத்தில், என்ன நடக்கிறது என்று உங்களுக்கு எல்லாம் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட அங்கே வாய்ப்பில்லை.
‘டெமாக்ரடிக் ரிபப்ளிக்’ ஒன்றும் கிடையாது. பிளாட்டோ எழுதிய ‘ரிபப்ளிக்’ புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருக்கவேண்டியதுதான்.
ஆகவே, இது குடியரசாக இல்லை. தான்தோன்றித்த னமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதனுடைய ஓர் அம்சம்தான், இப்படிப்பட்ட ஒரு திணிப்பு.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு நாளும்
அழித்துக் கொண்டிருக்கிறார்கள்!
எனவேதான், நல்ல மனிதநேயத்தோடு, ஜன நாயகத்தைக் காக்க வேண்டும் என்று நினைக்கின்ற யாராக இருந்தாலும், பாசிசத்தை ஒழிக்க வேண்டும்; அது உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், முன்வரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரும்பாடுபட்டு, எத்தனையோ சூழ்நிலைகளை எதிர்த்து நின்று, வரையறுத்துக் கொடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு நாளும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றியாக வேண்டும். மனுதர்மம் மீண்டும் இங்கே சதிராட வருகிறது. நல்ல வாய்ப்பு வருகின்ற தேர்தல், அதிலே அவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும்; அதன் மூலம் பாடம் கற்பித்தால் தான், மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி பலத்தோடு வருவதுதான் அதற்குச் சரியான பதில்!
அவர்கள் வாக்குத் திருட்டு வரையில் போயிருக்கிறார்கள்!
எத்தனை கிளர்ச்சிகள், எத்தனை மேடைகள் இருந்தாலும், இந்த ஒரு முத்திரை சரியாக இருக்க வேண்டும். அதைத் தடுக்கத்தான் அவர்கள் வாக்குத் திருட்டு வரையில் போயிருக்கிறார்கள். அதனால், வீட்டுக்குச் சென்றவுடனே உங்கள் பெயர் சரியாக இருக்கிறதா? என்று பாருங்கள். அதே மாதிரி தேர்தல் களத்துக்குள்ளே போனாலும்கூட, ஓட்டுச் சாவடிக்குள்ளே போனால் கூட நீங்கள் பார்த்து வைத்தி ருக்கிற வாக்காளர்கள் பட்டியலும், அங்கே இருக்கி்னற வாக்காளர் பட்டியலும் ஒன்றாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்.
இது முதல் கட்டம் – முடிவல்ல, தொடக்கம்!
கடைசி நேரத்தில்கூட, அங்கே போனவுடன், ‘‘உங்கள் பெயர் இல்லீங்களே, நீங்கள் போய்விட்டு வாங்க’’ என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதில் ஏமாந்து விடாதீர்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி! மீண்டும் போராடுவோம்! இது முதல் கட்டம் – முடிவல்ல, தொடக்கம்!
இதனுடைய வெற்றி நிச்சயமாக அமையும்! எங்களுக்காக அல்ல – மனித நேயத்துக்காக – மனித நாகரிகத்துக்காக – சமத்துவத்துக்காக – ஒருங்கி ணைப்புக்காக!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
