புதுடில்லி, பிப்.19- ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தரப்பில் ஆண்டுதோறும் பல்வேறு பணிகளுக்காக சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.
அதன் படி, இந்த ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. இந்த ஆண்டில் 933 பணியிடங்கள், இந்தத் தோ்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. இதில் 33 பணியிடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான முதல்நிலைத் தோ்வு மே மாதம் 24-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும் ஒருவர் எத்தனை முறை தேர்வை எழுதலாம், அதற்கான வயது வரம்பு குறித்து பின்வருமாறு காணலாம்.
சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தகுதியுள்ள தேர்வர்கள் ஒவ்வொருவரும் 6 முறை இந்தத் தேர்வினை எழுதலாம். இருப்பினும், எஸ்சி/எஸ்டி/ஓபிசி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதில் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.
யு.பி.எஸ்.சி.
வயது வரம்பு தளர்வு விவரம்: பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு ஒருவருக்கு குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக 32 வயது வரை எழுதலாம். இருப்பினும், ஒவ்வொரு பிரிவினருக்கும் வயது வரம்பு தளர்வுகள் உள்ளன.
எஸ்சி/எஸ்டி: வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழு தலாம். (32 + 5 = 37 வயது வரை)
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்: 9 முயற்சிகள். (32 + 3 = 35 வயது வரை)
மாற்றுத்திறனாளிகள்: GL/EWS/OBC பிரிவினருக்கு 9 முயற்சிகள்; (32 + 10 = 42 வயது வரை)
மாற்றுத்திறனாளிகள்: எஸ்சி/எஸ்டி பிரிவினர் வயது வரம்பு முடியும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழு தலாம். (32 + 15 = 47 வயது வரை)
