தஞ்சை மாநாட்டுப் பணிகள் வெகு தீவிரம்! ஆசிரியர் அழைக்கிறார் வாருங்கள் தோழர்களே!-வி.சி.வில்வம்

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“ஒரே ஒரு மாநாடு” என்றாலே நம்மவர்களைக் கையில் பிடிக்க முடியாது. பிப்ரவரி 21 ஆம் தேதி, நான்கு அணிகள் ”நாட்டியமாட” இருக்கின்றன. மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம் ஆகியவை ஆயத்த நிலையில் இருக்கின்றனர்.

தஞ்சாவூர் குறித்துச் சொல்ல வேண்டியதில்லை. தஞ்சையின் பொதுச் சொத்தே நம் தோழர்கள் தான்! திசைகள் நான்காகினும், எட்டுத் திக்கிலும் காற்சக்கரம் பொருத்தி, நகரையே கொள்கை வயப்படுத்திவிடுவர். அதிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் ஒரு தகவலை பொது வெளியில் பதிவு செய்து வருகிறார். “இன்றைய தஞ்சை மாநாட்டுப் பணிகள்” எனத் தலைப்பிட்டு, அன்றாட வேலைகளை வரிசையிட்டு வருகிறார்.

இதை ஒரு புது உத்தியாகக் கருதலாம். ஒரு மாநாடு என்றால், என்னென்ன வேலைகள் இருக்கும் என்பதை இதன் மூலம் அறியலாம். சிறு வேலையாக இருந்தாலும், அதைச் செய்யும் தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதுவது என்பது பெரும் அங்கீகாரம் ஆகும். “முதுகுக்குப் பின்னால் ஒரே காரியம் தான் செய்ய வேண்டும். அது முதுகைத் தட்டிக் கொடுப்பதாக இருக்க வேண்டும்”, என்கிற பொன்மொழியின் செயல்வடிவம் இது!

ஆசிரியரின் கால அட்டவணையை இன்றைய தேதியில் பார்த்தால், மூன்று மாதங்களுக்கு முழு நிகழ்ச்சி நிரல் நிரம்பி இருக்கும். இதுதவிர ஆசிரியரின் எண்ணவோட்டத்தில் பல மடங்கு நிகழ்ச்சிகள் பரிசீலனையில் இருக்கும். எந்த மாவட்டத்தில், எந்தப் பொறுப்பாளர்களிடம் ஆசிரியர் ஒரு நிகழ்ச்சியைக் குறித்துக் கூறுகிறார்களோ, அது உடனே நடைமுறைக்கு வந்துவிடும்.

திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, வழக்குரைஞரணி, தொழிலாளரணி, விவசாயத் தொழிலாளர் அணி, மருத்துவர் அணி என எந்த அணியாக இருந்தாலும், ஆசிரியரின் சொற்களுக்குச் செயல் வடிவம் கொடுக்க அணியமாக இருப்பார்கள்.

அதிலும் மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் ஒரு படி உயர்வு என்று தான் சொல்ல வேண்டும். அவர்களின் கலந்துரையாடல் கூட்டங்கள், களப்பணிகள், நன்கொடை திரட்டல், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என எல்லாமே தனித்தன்மை வாய்ந்தவை. இதைக் குறிப்பிட்டு சொல்வதற்கு ஒரு காரணமும் உண்டு. சமூகப் பணிகள் செய்வதற்கு ஆண்களுக்குப் பல இலகுவான சூழல் உண்டு. அதே பணியைச் செய்வதற்குப் பெண்களுக்குக் குடும்பக் கட்டமைப்பு பெரும் சுமையாகவே இருக்கிறது.

எனினும் குடும்பத்தைக் கடந்து, பிற உறவினர்களின் சிக்கலை சரிசெய்து, கருப்புச் சேலை கட்டி கடவுள், மதத்தை மறுத்து, ஜாதியை எதிர்த்து, சடங்கு, சம்பிரதாயத்தைக் கடந்து ஒரு மகளிர் சமூகப் பணி ஆற்றுவதென்பது எளிதான ஒன்றல்ல; இது திராவிடர் கழகத்திற்கே உரிய அற்புதம்! ஒரு செயலைச் செய்யும் போது பாராட்டும், புகழும் கிடைத்தால் எவருமே அதைச் செய்வர். எதிர்ப்பும், விமர்சனமும் மட்டுமே கிடைத்தால் யார் தான் செய்வர்? திராவிடர் கழக மகளிர் செய்வர்!

பெரியார் இயக்கத்தில் மகளிர் பங்கு என்பது நூற்றாண்டுகளுக்குச் சொந்தமானது. மகளிர் முன்னேற்றம் என்பதையே பெரும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டவர் தந்தை பெரியார். தத்துவங்களை எழுத்திலும், பேச்சிலும் மட்டுமல்ல; (Theory) நடைமுறையில் செயல்படுத்தி (Practical) புரட்சி செய்தவர் அவர்!

திராவிடர் கழகம்

காவல்துறையில் அனைத்துப் பதவிகளிலும் பெண்கள், அரசுப் பணிகளில் இல்லாத துறைகளே இல்லை, தலைமைச் செயலகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை மகளிர் நிர்வாகமே ஆட்சி செய்கிறது, ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் பக்கமே போகக் கூடாது என மறுக்கப்பட்டவர்கள், இன்று பள்ளிக்கூடம் முதல் பல்கலைக் கழகங்கள் வரை பதவிகளில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமின்றி மருத்துவத் துறைகளில் அவர்களின் பங்கு சாதனை மிகுந்தது. அரசியல் துறையில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றின் தலைவர்களாக வலம் வருகிறார்கள். பெயர் சொல்லி அழைத்தவர்கள் எல்லாம், “மேடம்” என அழைக்கிறார்கள், ஒரு படி மேலே சென்று “தலைவரே” என விளிக்கிறார்கள். தமிழ்நாட்டின் ஊராட்சிப் பதவிகளில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேல் பதவியில் இருப்பதாக அரசாங்கப் புள்ளிவிவரம் கூறுகிறது. அதுமட்டுமின்றி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளிலும் மகளிர் மின்னுகிறார்கள். இவ்வளவு ஏன்… சென்னை மாநகராட்சி மேயரே ஒரு பெண்தானே! வட மாநிலங்களில் இதுபோன்ற நிலை ஏற்பட, இன்னும் எத்தனை அய்ம்பது ஆண்டுகள் தேவைப்படுமோ?

பாரதீய ஜனதாவில் இருக்கும் தமிழர்கள், வட இந்தியர்களைப் போல பேசி வருகின்றனர். பெரியாருக்கு எதிராகவும், திராவிட இயக்கங்களுக்கு எதிராகவும் அவர்களின் நடவடிக்கை இருந்து வருகிறது. ஆனால் அவர்களின் வாழ்வியல் முற்போக் காகவும், பகுத்தறிவோடும் இருக்கிறது. பெண் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்கிறார்கள், வெளிநாட்டிற்குக் கூட வேலைக்கு அனுப்புகிறார்கள், காதல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள், மாப்பிள்ளை இறந்தால் மகளுக்கு மறுமணம் செய்கிறார்கள், இப்படி ஒவ்வொரு விசயத்தில் முற்போக்காய் இருந்துவிட்டு, ஹிந்து மதம் வாழ்க என்றால், எப்படி வாழும்? திராவிடம் தான் வாழும்!

ஆக தமிழ்நாட்டில் பிறந்துவிட்டாலே கிடைக்க வேண்டிய கல்வியும், தமக்கான சுயமரியாதையும் தானாகவே கிடைத்துவிடும். இங்கு உருவாக்கப்பட்ட சமூகம் அமைப்பு அப்படி! அந்த அமைப்பை உருவாக்கப் பயன்பட்டவை பெரியார் கொள்கைகள். அதனாலே இதைப் பெரியார் மண் என்கிறோம்! தமிழ்நாட்டில் மகளிர் மேம்பாடு எப்படி இருக்கிறது என்பதை மேலே குறிப்பிட்டோம். அதன் ஒவ்வொரு வளர்ச்சிக்குப் பின்னாலும் கருப்புச் சேலை அணிந்த மகளிரின் தொண்டு இருக்கிறது, தியாகம் இருக்கிறது, உயிர் இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். உங்களின் ஒவ்வொரு பெண் குழந்தையின் மகிழ்ச்சிக்கு அருகிலும் மணியம்மையார் அவர்களின் வாழ்வு இருக்கிறது.

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, நமது சிங்கப்பூர் தோழர் ராஜராஜன் அவர்களின் அம்மா இயல்பாக அலைபேசியில் அழைத்தார். கட்டுரைக் குறித்துக் கூறிவிட்டு, “உங்கள் காலத்தில் இருந்த மகளிர் வாழ்க்கைக்கும், இப்போதைய நிலைக்கும் உள்ள வேறுபாடு என்ன?”,  எனக் கேட்டேன். சற்றும் தயங்கவில்லை. உடனே பேசினார்.

“எனது பெயர் ஜெயந்தி. இணையர் பெயர் ராஜ மகேந்திரன். வயது 64 ஆகிறது. எனக்குள் இன்றளவும் எண்ணி வருந்தும் மூன்று கருத்துகள் உள்ளன. இளம்வயதில் சைக்கிள் ஓட்ட அனுமதி தந்திருந்தால், நம் வேலைகளை நாமே செய்து கொள்ளலாமே என்று இன்றளவும் ஏக்கமாக இருக்கிறது.

பதினொன்றாம் (Old S.S.L.C.) வகுப்பில் எங்கள் ஊர் பள்ளியில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பேருந்தில் பயணித்து அருகில் இருந்த பள்ளியில் படிக்க வாய்ப்புக் கொடுத்திருந்தால், இன்னும் நல் இலக்கை நான் அடைந்திருக்கலாம்.

நான் பெற்ற பட்டம் என் காலில் நிற்கும் சூழல் தந்த போதும், என் மண வாழ்வு அனுமதித்து இருந்தால் நான் உயர் பதவியில் பலர் உயர வழிகாட்டியாக இருந்திருக்கலாம். இணையர் அனுமதியுடன் அவரைச் சார்ந்து தொழில் செய்து பொருள் ஈட்டினாலும் கூட, சுயமாக எதையும் முடிவு செய்ய முடியாது. ஆண்களை விட இக்கால பெண்கள் கணவரை சார்ந்தே இருப்பினும், தங்களது வாழ்வில், பொருளாரத்தில் சிறப்பாகவே இருக்கிறார்கள்.

எங்கள் காலத்தில் எட்ட முடியாத விசயங்கள் எல்லாம், எங்கள் பிள்ளைகள் காலத்தில் பெரும் முன்னேற்றமாக இருக்கிறது. பெரியாரை நாங்கள் விரும்புவதற்கு இது ஒன்றே போதும்”, அம்மா ஜெயந்தி கூறினார். பெரியார் கொள்கையை முழுமையாய் ஏற்காவிட்டாலும், பெரியாரைத் தலைவராய் ஏற்க ஆயிரம் காரணம் உண்டு தமிழர்களுக்கு!

நம் தங்கத் தமிழ்நாடு மேலும், மேலும் சிறக்க திராவிடர் கழகமும், இளைஞர்கள் முற்போக்காய் விளைந்திட இளைஞரணியும், மாணவர்கள் கல்வியில் மேம்பட மாணவர் கழகமும், மகளிரின் உன்னத உயர்விற்கு மகளிரணியும் போராடும் குணம் கொண்ட மகளிர் பாசறையும் தொடர்ந்து போராடும்; தொடர்ந்து மாநாடுகள் நடத்தும்!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஒவ்வொரு சிறு, சிறு அசைவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு படிக்கல்லாக உயரும்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *