சென்னை அசோக் நகர், நடேசன் நகரில் 18 ஆண்டுகளுக்கு முன் கனிமவள அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வீட்டு வேலைக்காரப் பெண் அன்புக்கரசி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வீடு பாழடைந்த நிலையில் இருப்பதாகவும், அதனால் அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாகவும் கூறி சிலர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதால் அந்த வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாக செய்தி (இந்து தமிழ் திசை, 18.02.2026) வெளிவந்துள்ளது.
அதிகம் வெளிச்சம் பெறாத கிராமங்களில் கூட அல்ல… சென்னை போன்ற நகரங்களிலேயே தங்களின் விளம்பர வெறிக்காக, அமானுஷ்யம் என்ற பெயரில் குழப்பத்தை, மூடநம்பிக்கையை உருவாக்குவது சட்டப்படி தடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51 ஏ (எச்) கூறும் “அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை” என்ற அடிப்படையில், ‘அமானுஷ்யம்’ நிறைந்ததாகப் பரப்பப்படும் அந்தக் குறிப்பிட்ட வீட்டில் தங்கி, பயன்படுத்தி மூடநம்பிக்கையை முறியடிக்க திராவிடர் கழகம் தயார்! தயார்!!
அரசும், காவல்துறையும் இதற்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்! மூடநம்பிக்கையை அகற்றிட இத்தகைய செயல்முறைகளே சிறந்த வழிமுறைகளாகும். எப்போதும் திராவிடர் கழகம் இப் பணியில் அரசுக்குத் துணை நிற்கும்!
– கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
