சென்னை, பிப். 17- வேளான் துறை, உயர்கல்வித்துறை சார்பில் ரூ.597.68 கோடியில் 16 உழவர் அங்காடிகள், கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூ.555.92 கோடி மதிப்பிலான கல்விக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
உழவர் அங்காடிகள்
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று (16.2.2026) வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை நகர்ப்புற நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் வேளாண் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரூ.2.06 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 16 உழவர் அங்காடிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அத்துடன், ரூ.53.60 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மய்யங்கள், 6 துணை வேளாண்மை விரிவாக்க மய்யங்கள், 2 விதை சேமிப்பு கிடங்குகள், 4 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், 100 டன் கொள்ளளவு கொண்ட ஒரு குளிர்பதனக் கிடங்கு, 2 ஒருங்கிணைந்த விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை வளாகங்கள், தோட்டக்கலைப்பட்டயப்படிப்பு மாணவர் விடுதி,வேளாண்மைப் பொறியியல் துறை விரிவாக்க மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், 100 மதிப்புக் கூட்டும் மய்யங்கள் அமைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 54 தொழில் முனைவோருக்கு மதிப்புக்கூட்டும் மய்யங்கள் அமைக்க ஒப்பளிப்பு ஆணைகள் வழங்கி, வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திர வாடகை சேவையினை வலுப்படுத்த கொள்முதல் செய்யப்பட்ட 672 வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவாரூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சென்னை, தருமபுரி, திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, கோவை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, சேலம், வேலூர் ஆகிய இடங்களிலுள்ள கல்லூரிகளில் வகுப்பறை, உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
கல்விசார் கட்டடங்கள்
சென்னை, கோவை, மதுரையில் 5 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ரூ.255 கோடியில் திறன்மிகு மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்காக ரூ.198.84 கோடி செலவில் கற்றல் மேலாண்மை அமைப்புடன் ஒருங்கிணைந்த நிறுவன வள மேலாண்மைக்கான மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை
ரூ.542.02 கோடி செலவிலான உயர்கல்வித் துறை சார்ந்த 15 கட்டடங்களை திறந்து வைத்து, ஒருங்கிணைந்த நிறுவன வள மேலாண்மைக்கான மென்பொருளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதுதவிர, கரூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சிவகங்கை, கடலூர் மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.180.08 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் ரூ.375.84 கோடியில் 437 வகுப்பறைகள், 19 பல்நோக்கு அரங்குகள், விடுதிகள் மற்றும் இதர கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதன்படி மொத்தம் ரூ.555.92 கோடியில் கட்டப்பட உள்ள கட்டடங்களுக்கு முதலமைச்சர் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறைகளின் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
