சமூகநீதி நிலைக்க – சமூக அநீதியை ஒழிக்க – தி.மு.க. ஆட்சி மீண்டும் வரவேண்டும்!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

*ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் இட ஒதுக்கீடு – சமூகநீதியின் நிலைப்பாடு என்ன?
* நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட புள்ளி விவரம் அதிர்ச்சிக்குரியது!
* எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்குச் சட்டப்படி 15+7.5% இட ஒதுக்கீடும் – 
ஓ.பி.சி. பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடும் சட்டப்படி இருந்தும் உண்மை நிலை என்ன?
திறந்த போட்டியில் அய்.ஏ.எஸ்.சில் 91.99% –அய்.பி.எஸ்சில்  89.83% –அய்.எஃப்.எஸ்.சில் 82.27% 
மீதி இடங்கள்தான் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி.க்கு என்றால், இன்றைய ஒன்றிய பி.ஜே.பி. அரசு யாருக்கானது?

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. ஆட்சியில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., பதவிகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் உயர்ஜாதியினரே அனுபவிக்கின்றனர். சட்டப்படி எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்குக் கிடைக்கவேண்டிய இடங்கள் – மிகவும் மோசமான இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளன. இந்த நிலையில், சமூக அநீதிக்கு எதிராகவும், சமூகநீதிக்கு ஆதரவாகவும் கண்காணிப்புக் குழு அமைத்துச் செயல்பட்டுவரும் தி.மு.க. ஆட்சியே மீண்டும் மலர வாக்களிப்பீர் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஒன்றிய அரசில், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்., அய்.ஆர்.எஸ். (I.A.S., I.P.S., I.F.S., I.R.S.) போன்ற முக்கிய ஆளுமைத் துறைகளில் – இந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து சமூக அநீதி – இட ஒதுக்கீட்டுக்கு எதிரானப் போக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்தேறி வருவதைக் கண்டு, சமூகநீதிப் போராளிகளாகிய நமது உள்ளங்களில் கனல் பற்றி எரிகிறது!

சமூகநீதி – இட ஒதுக்கீடு என்பது
நமது பிறப்புரிமை!

சமூகநீதி– இட ஒதுக்கீடு என்பது நமது பிறப்புரிமை. அது சலுகையோ, பிச்சையோ அல்ல. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்ற மறுக்க முடியாத – மறுக்கக் கூடாத உரிமையுமாகும்.

சமூகநீதிக்கான வழிகாட்டலில் அன்றைய சென்னை மாகாணமும், கருநாடகமும், மராத்தியத்தில் கோல்காப்பூர் பகுதியை ஆண்ட சத்திரபதி ‘சாகுமகராஜ்’ அவர்களுடைய ஆட்சியும்தான் இந்தியாவுக்கே முன்னோடியாகும்.

 

வகுப்புரிமை, சமூகநீதிப் போராட்ட வரலாற்றில், ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் உரிமைக்காக – தந்தை பெரியார் அவர்களும், அவரது கொள்கை ஆதர வாளர்களும் களப் போராளிகளாக மாறினர். 1928 இல் நீதிக்கட்சி ஆதரவு ஆட்சி முயற்சியின் காரணமாகவே, வகுப்புரிமை – அரசு ஆணையாகி, பின்பு நடைமுறைக்கு வந்ததும், முதன்முதலில் சில துறைகளிலும், பிறகு அகலப்படுத்தப்பட்டு, 1950 வரை தொடர்ந்தது; பிறகு புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை மேற்கோள்காட்டி, அது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் – மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து வெடித்த போராட்டத்தின் விளைவே – 1951 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாகும்.

மண்டல் குழுப் பரிந்துரையை
செயல்படுத்துவதில் தாமதம்!

மக்களில் பெரும்பான்மையினராக இருந்த நிலையிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தராத நிலையை மாற்றிடுவதற்கே, இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் – பி.பி.மண்டல் தலைமையில், 1980 இல் அறிக்கை அளித்திருந்தும், 10 ஆண்டுகள் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தொடர் கிளர்ச்சிகள் நடத்தியதால், சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களது துணிவும், கனிவும் மிக்க ஆணை வந்து, முதல் கட்டமாக 27 விழுக்காடு வேலை வாய்ப்பில், அதன் பிறகு தொடர் போராட்டத்தினால், கல்வி வாய்ப்பிலும் அது விரிவடைந்து சட்டப்படி உரிமையாகியது!

50 விழுக்காடுக்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற உயர்ஜாதியினரின் சூழ்ச்சி!

பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்திய மக்கள் தொகையில் சரி பகுதிக்கும் அதிகமானோர் ஆவர். ஆனால், அவர்களுக்கு 27% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. காரணம், 50 சதவிகிதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உயர்ஜாதி நீதிபதிகள் கூறினர். (நியாயமாகச் சொல்லவேண்டுமானால், அது தீர்ப்பின் முக்கியம் அம்சம் அல்ல; Obiter Dicta  –ஒரு கருத்து மட்டுமே!  (ஏற்கெனவே S.C., S.T. மக்களுக்கு ஒதுக்கியுள்ள 15+7.5% சதவிகிதம் பாதிக்கப்படாமல், அதற்கு முன்னுரிமை கொடுத்தே – மண்டல் கமிஷன் பரிந்துரை 27 சதவிகிதம் என்று தங்களுடைய பங்கு வேண்டுதலைக் குறைத்துக் கொண்டது வரலாறு). ஆனால், அதனைக்கூட தொடர்ந்து தராமல், பின் வந்த அரசுகள் பல ஆண்டுகள், S.C., S.T., O.B.C., என்ற பிரிவினரின் பங்கை மறுத்தே, வஞ்சகம் செய்து வந்தது – இன்றும் தொடருகிறது – நெஞ்சம் பதறுகிறது!

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்!

நாடாளுமன்றத்தில் கேரளாவின் ஜான்பிரிட்டாஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசின் சார்பாக இப்போது வெளியாகியுள்ள பதிலில்,

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற அதிகாரமுள்ள பதவிகளுக்கு முறையான 22.5 சதவிகிதமோ (S.C., S.T.,), 27 சதவிகிதமோ O.B.C. யினருக்கும் தராது – 92 சதவிகிதம் உயர்ஜாதி – பார்ப்பனர் அல்லது முன்னேறிய ஜாதியினருக்கே ‘தாரை’ வார்த்துக் கொடுத்துள்ளதாக வெளியாகியுள்ள விவரங்களை இங்கு தரப்பட்டுள்ள பட்டியலில் காண்க!

இப்படிப்பட்ட நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி ஆளும் பா.ஜ.க. பிரதமர் மோடி அரசு, தமிழ்நாட்டிலும் – சமூகநீதி ஆட்சியான ‘திராவிட மாடல்’ ஆட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென்று வாக்குக் கேட்க வருகிறது!

உயர்ஜாதியினர் மட்டும் வாக்களித்து
ஆட்சிக்கு வந்ததா ஒன்றிய பி.ஜே.பி. அரசு?

அதற்குத் தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளும் பி.ஜே.பி.யுடன் இணைந்து, ‘கூட்டணி’ என்று அமைத்து, தேர்தல் களத்தில் வருவதற்கு என்ன தார்மீக உரிமை உள்ளது?

உயர்ஜாதியினர் மட்டுமே வாக்களித்து வந்த ஆட்சியா, ஒன்றிய ஆட்சி?

இல்லையே! ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றி, பொய்ச் சிரிப்புக் காட்டியும், அடக்குமுறை, அச்சுறுத்தல்க ளாலும் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்படிக் கொடுமை செய்வதா?

ஏற்கெனவே பல படிக்கட்டுகளில் கல்வி, உத்தி யோகத்தில் உயர்ந்துள்ள பார்ப்பனர்கள், முன்னேறிய ஜாதியினருக்கு ‘ஏழைகள்’ என்று ஒரு முத்திரை குத்தி, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைப் பறித்து வருகின்றனர்!

அதையும் தாண்டி, நாட்டுடைமையாக்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார் பெரு முதலாளிகளான அம்பானி, அதானி, டாட்டா, பிர்லா போன்றோருக்கு அடிமாட்டு விலைக்கோ அல்லது பல ஆண்டுகளுக்கு மலிவுக் குத்தகைக்கோ விட்டு, ‘குபேரரர்’களாக அவர்களை ஆக்கி, அதனால், தேர்தல் நிதி போன்ற லாபங்களை பி.ஜே.பி. போன்ற கட்சிகள் பெறுவது ஒரு பக்கம். மற்றொரு பக்கத்தில், இட ஒதுக்கீடு, பொதுத் துறையில் இருப்பதால், கடந்த சில ஆண்டுகளில் S.C, S.T., O.B.C.,  மக்கள் (இட ஒதுக்கீடு காரணமாக) பெற்ற பதவிகள் பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் துறைகளாக மாறியதால், பறிக்கப்பட்ட பேராபத்து – உரிமை மறுப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளன!

இப்படி,  அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் தந்த சட்ட உரிமைகளுக்கு  ‘உலை வைத்தது’ மேலும் கொடுமை அல்லவா!

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் மீண்டும் மூட்டை தூக்கச் செல்லவேண்டுமா?

ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளும் மீண்டும் மூட்டை தூக்கும், வண்டி இழுக்கும் நிலைதானா?

நவீன ‘‘துரோணாச்சாரிகளாக’’ ஒன்றிய அரசு என்ற ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மோடி அரசு, ஒடுக்கப்பட்ட மக்களை ஏகலைவன்களாக்கி, கட்டை விரல் போன்ற இட ஒதுக்கீட்டைக் கபளிகரம் செய்வதா?

இதைத் தமிழ்நாட்டிலும் நடத்திக் காட்ட முற்படு வதுதான் – தி.மு.க. ஆட்சியை எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்கும் சூதான முயற்சிகள்!

இதற்குத் தமிழ்நாட்டு விபீடண, சுக்ரீவ அரசியல் கட்சிகளும் துணை போவதா?

அவர்கள் வீட்டுக் குழந்தைகளின் கல்வி, உத்தியோகங்கள் வாய்ப்புகள் கூட, இருள்மயமாகி, தவிக்க வேண்டியதாகுமே!

யோசித்துப் பார்க்கவேண்டுகிறோம்!

குஞ்சுகளைக் காப்பாற்றுவதில் தாய்க் கோழியின் உண்மையான கவலை, தி.மு.க. கூட்டணிக்கு உள்ளதுபோல, எதிரணியில் ஆர்.எஸ்.எஸ்., அமித்ஷாக்கள் வசமாகிய கட்சிகளிடம் உண்டா?

இதை வீடு தவறாமல், வீதிதோறும் எடுத்துச் சொல்லத் தவறாதீர்கள்.

தி.மு.க. ஆட்சியில் மட்டுமே
இட ஒதுக்கீட்டைக்
கண்காணிக்கும் குழு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ஆட்சி மட்டுமே, ‘இட ஒதுக்கீடு முறைப்படி பின்பற்றப்படுகிறதா?’ என்று கண்காணிக்கும் குழுவை நியமித்து, பல அரசுத் துறைகளிலும் கூர்ந்து ஆய்வு செய்து, அரசு நிரப்பும் இடங்களில் ஏமாற்றம் இருக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறது.

அதுபோல, எங்காவது ஒன்றிய அரசிலோ, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலோ உண்டா?

நமது முன்னோடித் தலைவர்களான களப் போராளிகள் போராடிப் பெற்றுத்தந்த  உரிமைகளை நாம் இழந்துவிடக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. எதிரிகளுக்கு அல்லது எந்தத் திட்டமும் இல்லாத காலி டப்பா ஓசையாளர்களுக்கு வாக்களித்து, அதன்மூலம் நம் தலையைக் கொள்ளிக்கட்டை எடுத்துச் சொறிந்துகொண்ட அவலத்திற்கு ஆளாகலாமா?

சிந்தியுங்கள்! சீர்தூக்கிப் பாருங்கள்!

மீண்டும் தி.மு.க. கூட்டணியே
வெற்றி பெற்றாகவேண்டும்
!

சமூகநீதி மண்ணாக, பெரியார் மண்ணாக நாடே ஆகவேண்டும். ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்பதை நிலையாக்கும் ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைந்திட, தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாகவேண்டும்! முக்கியம்! முக்கியம்!!

ஏமாந்துவிடக் கூடாது!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை    

17.2.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *