‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரருக்குத் தோள் கொடுப்போம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது ஓர் ஆரிய – திராவிட அறப்போர்!
கூடுங்கள் தஞ்சையில் – நாடுங்கள் நாட்டின் நலம்!
சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

 

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது ஓர் ஆரிய – திராவிட அறப்போர்! பரப்புரைப் பணியிலும், கொள்கைப் பாதுகாப்பையும், கடமைகளையும் எப்போதும் விழிப்போடு வினையாற்ற – தரும் திட்டத்தை எதிர்நோக்கக் கூடுங்கள் தஞ்சையில் – நாடுங்கள் நாட்டின் நலம்! சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!  ‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குத் தோள் கொடுப்போம்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

எமது பெருமைக்குரிய கொள்கை உறவுகளே,

பகுத்தறிவாளர்களான முப்பால் தோழர்களே,

மொழி உணர்வு, இன உணர்வுக்கான நமது பண்பாட்டுக் காவலர்களே,

என்னரும் தாய்மார்களே, உடன்பிறவா உறவுகளே,

களமாட என்றும் ஆயத்தமாக உள்ள வீரர், வீராங்கனைகளே,

உங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!

உங்கள் தோழன், உரிமையுடன் அழைக்கிறேன்! வரும் பிப்ரவரி 21 அன்று தஞ்சை மாநகரில் சந்திப் போம்; கலந்துரையாடுவோம்.

சரித்திரம் படைக்கும் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சி யினைப் போற்றினால் மட்டும் போதுமா? அவ்வாட்சி தொடர நாம் களப் பணி  ஆற்ற வேண்டும் அல்லவா!

ஒப்புவமையில்லா நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர்!

மக்களாட்சியின் மாண்பைக் காக்கும் சிறப்பான தேர்தல் களத்தில், வருகின்ற ஏப்ரலில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆயிரமாயிரம் அடுக்கடுக்கான சாதனைகளைச் சரித்திரமாக்கி வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சி மீண்டும் தேர்வாகிவிடக் கூடாது என்பதற்காக நமது இன எதிரிகள், ஸநாதனத்தின் பேராலும், ஒன்றிய ஆட்சி என்ற
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தின்மூலமும்,  பல ‘‘அரசியல் கண்ணிவெடி’’களையும், செயற்கை நெருக்கடிகளையும், அதிகார அச்சுறுத்தல் ஏவு கணைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்து கின்றனர்.  ஒப்புவமையில்லா நமது முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது ஆளுமை கண்டு, அகிலம் வியக்கிறது; ஆரியம் திகைக்கிறது. அதனால்தான், குறுக்கு வழியில் ‘ஆட்சி மாற்றம்’ என்ற வெறுங்கனவு காணும் ஆரியம்   ‘விபீடணர்கள்’, அரசியல் கொத்தடிமைகள் துணை கொண்டு, விடாத் தொல்லைகள் தந்து, ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்திவிட ‘‘சாம, பேத, தான, தண்ட’’ சகல வழிமுறைகளையும் (அதுதான் மனுவின் கட்டளை) களம் இறங்கி உள்ளனர்!

ஆரிய – திராவிட அறப்போர்!

தி.மு.க. தலைவரான அவரது தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு (கொள்கை) கூட்டணியை வீழ்த்திவிட துடியாய்த் துடிக்கின்றனர் – அச்சுறுத்தலுக்கு அடிபணிந்த கட்சிகளின் தலைவர்களும் அற்ப லாபங்களுக்காக ‘அடியாட்களாகி’, தங்களை விற்றுக்கொள்ளும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்!

தோற்றத்தில் இது ஓர் அரசியல் தேர்தல் என்றாலும், தத்துவத்திலும், இலட்சிய நோக்கத்திலும் இது ஓர் ஆரிய – திராவிட அறப்போரே!

பாசறையின் வெற்றி முழக்க அச்சாரம்தான் பிப்.21 இல் நடைபெறும் தஞ்சை மாநாடு!

தந்தை பெரியார், அவர் வழியில் மலர்ந்த பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திராவிட ஆட்சி, இதன் அடித்தளமாக 110 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி நடத்தி, திராவிடத்தின் உரிமைகளுக்கு முதல் முழக்கம் செய்தது நீதிக்கட்சி – இவற்றின் நீட்சியே எமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி என அறிவித்து, தம் ஆளுமையை நிரூபித்து வெற்றி வரிகளை, வைர வரிகளாக வரலாற்றுப் பக்கத்தில் எழுதிட தயார் என்று முழக்கமிடுகிறார் நம் முதலமைச்சர்.

அவரை காக்கும் கரங்களாகி,  அணிவகுத்துக் களமாட அழைக்கும் நமது சுயமரியாதை வீரர்கள், வீராங்கனைகள் பாசறையின் வெற்றி முழக்க அச்சாரம்தான் 21.2.2026 தஞ்சை மாநாடு.

இது ஆடம்பரம் இல்லாத எளிய மாநாடு!

கொள்கைப் போர்க் களத்தில் எதற்குக் கோலாகல ஆடம்பரம்?

வெற்றிக் கனி பறித்து, மக்களுக்கு நன்றி கூறும்போது, அதுபற்றிச் சிந்திக்கலாம்! களத்திற்குக் கருஞ்சட்டைகளைக் கடமையாற்ற அழைக்கையில், ஆடம்பரத்திற்கு நேரமும் இல்லை, அதுபற்றிய நினை வும் கருஞ்சட்டை இராணுவத்திற்கு வருவதில்லை.

சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும்,
சூரருக்குத் தோள் கொடுப்போம்!

‘கட்டுப்பாடு’ என்பதற்கு ‘அடையாளம் இதோ’ என்று விரல் நீட்டி நம்மைச் சுட்டிக்காட்டும்படிதான், நமது அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள், ‘மானம்பாரா’ பணி செய்து, நம்மை ஆர்வத்துடன் அணிவகுக்கச் செய்தார். அய்யா, அம்மா ஆகியோரின் வார்ப்புகளான நமது இளைஞர்கள், மகளிர், குடும்பம் குடும்பமாக அலை அலையாய் திரண்டு வந்து, ஆரியத்தின் அதிசூழ்ச்சிகளைத் துடைத்தெறிய தஞ்சையில் சந்திப்போம்; சதிகளை முறியடித்து, ‘‘தமிழ்நாட்டை என்றும் தலைகுனிய விடமாட்டேன்’’ என்று சூளுரைத்து, சுயமரியாதைச் சங்கநாதம் செய்யும், அந்த சூரருக்குத் தோள் கொடுப்போம்!

கூடுங்கள் தஞ்சையில் –
நாடுங்கள் நாட்டின் நலம்!

‘திராவிடம் என்றும் தோற்காது; தமிழ்நாட்டை ஆரியம் வென்றுவிட ஒருபோதும் அனுமதியோம்’, ‘திராவிடம் வெல்லும், நாளைய வரலாறு என்றும் சொல்லும்’ என்று காட்ட, பதவி நாடா, நன்றியை எதிர்பாரா, புகழ்வேண்டா கருஞ்சட்டை இராணுவம், களங்கள் எவையானாலும், அவற்றில் நெஞ்சுரம் காட்டி முன் நிற்கும்!

தற்போதைய தேர்தல் களத்தில், இன எதிரிகளையும், பல முக்காடு மனிதர்களையும், மின்மினி, வாணவெடி வகையறாக்களையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்!

கொள்கை உணர்வுடன், பரப்புரைப் பணி எனும்  கடமையாற்றவும், எப்போதும் விழிப்போடு வினையாற்றவும், கழகம் தரும் திட்டத்தை எதிர்நோக்கவும் கூடுங்கள் தஞ்சையில் – நாடுங்கள் நாட்டின் நலம்!

சந்திப்போம், சரித்திரம் படைப்போம்!

நம் தலைவர் பெரியார் அழைக்கிறார்!

கருஞ்சட்டை இராணுவம் களத்தில் நின்று, வென்று காட்டும்!

உங்கள் பணித் தோழன் அழைக்கிறேன்

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

16.2.2026           

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *