இந்தியில் நடிகர் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் ‘கூஸ்கோர் பண்டட்’ (Ghooskhor Pandat) என்ற படம் உருவாகி உள்ளது.
நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் குறித்த அறிவிப்பை ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் அண்மையில் வெளியிட்டதும் தலைப்புக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
‘கூஸ்கோர்’ என்றால் லஞ்சம் வாங்குபவர், ‘பண்டட்’ என்பது பார்ப்பனரைக் குறிக்கும் சொல். எனவே படத்தின் தலைப்பு சர்ச்சையில் சிக்கி உள்ளதாம்!
மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் அசுதோஷ் துபே, ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனதிற்கு சட்ட ரீதியான நோட்டீசை அனுப்பியுள்ளார்.
டில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்குரைஞர் வினீத் ஜிண்டால் என்பவர் இந்தப் படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
லஞ்சம் என்பது தனிநபர் சார்ந்த குற்றம் என்றும், அதை ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இணைப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் நற்பெயரைக் குலைப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
‘நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘கூஸ்கோர் பண்டட்’ ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி, உத்தரப் பிரதேச காவல்துறை படக்குழுவினர்மீது குற்றப் பத்திரிகை (எஃப்.அய்.ஆர்.) பதிவு செய்துள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரில், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் படக் குழுவினர் மீது லக்னோ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இந்தத் தொடருக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். பிராமண சமூகத்தை ஊழல்வாதிகளாகக் சித்தரிப்பதை ஏற்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பண்டட்’ என்பது ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தின் புனைபெயர் மட்டுமே என்றும், எந்தச் சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும் ஒன்றிய அரசு அனுப்பிய நோட்டீஸை அடுத்து, நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை (டீசரை) சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
ஆண்டாண்டு காலமாக இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்களை ‘சூத்திரர்கள்’ என்று சொல்லும் சாஸ்திரங்களையும், இதிகாசங்களையும் இன்று வரை போற்றித் துதிபாடி வரும் கூட்டம், ஒரு படத்தின் பெயரில் பார்ப்பனர் என்று வந்த ஒரே காரணத்துக்காக மட்டும் இப்படித் தாண்டிக் குதிக்கின்றனர்! பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தைப் போட்டுக் கொள்வது வடமாநிலங்களில் சர்வ சாதாரணம் தானே!
இன்னும் தங்களைப் ‘பிராமணர்கள்’ என்று அழைத்துக் கொள்கிறார்கள்; மற்றவர்களும் அவ்வாறே அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
இவர்கள் ‘பிராமணர்கள்’ என்றால், மற்றவர்கள் யார் என்ற கேள்வி இயல்பாகவே எழவில்லையா?
தந்தை பெரியார் சொல்வார் ‘‘ஒரு தெருவில் ஒரு வீட்டில் மட்டும் ‘இது படிதாண்டா பத்தினி வீடு!’ என்று எழுதியிருந்தால் மற்ற வீட்டாரின் நிலை என்ன – கெதி என்ன?’’ என்று.
அதுபோன்றே தங்களை ‘பிராமணர்கள்’ என்றும், பூணூலை தரித்துக் கொள்ளத் தகுதி உள்ளவர்கள் (துவி ஜாதி– இரு பிறப்பாளர்கள்) என்றும் அழைத்து கொள்ளும் பார்ப்பனர்கள் ஒரு படத்தின் தலைப்பைப் பார்த்து பதறுவதும், எதிர்ப்பதும் எந்த வகையில் சரியானதாகும்?
கடவுளுக்கும், பக்தர்களுக்குமிடையே தரகர்களாக இருந்து ‘தட்சணை’ என்ற பெயரால் கட்டணம் வசூலிப்பதுகூட ஒருவகையான இலஞ்ச ஊழல்தானே!
இதில் பார்ப்பனர்களுக்கு பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதியம்மையாரின் வக்காலத்து வேறு! இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினருமே பெரும்பான்மையினராவார் (பகுஜன்) – ‘இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும்’ என்ற நோக்கில் ஒரு கட்சியைத் தொடங்கியவர் கான்சிராம் அவர்கள்.
அதன் அடிப்படையில் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக ஆக்கப்பட்டவர்தான் இந்த மாயாவதி அம்மையார். அத்தகைய ஒருவர் இன்றைக்குப் பார்ப்பனர்களுக்காகக் களத்தில் குதிக்கிறார்; அது மட்டுமா? தன் கட்சிக்கே பார்ப்பனர் ஒருவரை பொதுச் செயலாளராகவும் ஆக்குகிறார் என்றால் எத்தகைய வெட்கக் கேடு!
‘பார்ப்பனரைப் ‘பிராமணன்’ என்று அழைக்காதே, சூத்திரப் பட்டத்தைத் தேடிக் கொள்ளாதே! என்றார் தொலை நோக்காளர் தந்தை பெரியார் அவர்கள் – எண்ணிப் பாரீர்!
