வினாயகர் சதுர்த்தி
வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு முதலில் “பிள்ளையார் சுழி” போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதாகப் பரப்பப்படும் பாலகங்காதரதிலகர். 1893 ஆம் ஆண்டு ‘சர்வஜன கணேஷ் உத்சவ்’ என்னும் பெயரில் ஆரம்பித்தார். இந்து மதத்தில் மிகப் பற்றுக் கொண்ட திலகர் இதை நாடு முழுவதும் பரப்பிக் கொண்டாட வழி செய்தார். முதலில் மராட்டியத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இவ்விழா தமிழ்நாட்டில் 1980களில் மெல்ல நுழைந்தது.
தமிழ்நாட்டில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள மிகப் பழமையான பிள்ளையார் கோவிலாகப் பிள்ளையார்பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலைத் தொ.பரமசிவம் கருதுகிறார்.

வணிகர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் பிள்ளையார் பரவியதாகக் கூறுகிறார் தொ.பரமசிவம் பிள்ளையாரின் தொடக்கக் கால உருவம் இரண்டு கை உடையதாகவும், பூணூல், அணிகலன், ஆயுதங்கள் இல்லாமலும் காட்சியளித்தது. காலப்போக்கில் பிள்ளையாருக்குப் பூணூலும் அணிகலனும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. பிள்ளையார்பட்டி கோவிலிலுள்ள பிள்ளையார் உருவம் இரண்டு கைகளை மட்டும் உடையதாயும் பூணூல், அணிகலன்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றிக் காட்சியளிப்பதாலும் இதுவே தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பிள்ளையார் உருவம் என்று நிறுவுகிறார் தொ.பரமசிவம். இதன் பின்னரே தாமரை மலரில் வீற்றிருப்பவராகவும் நான்கு கரங்களையுடையவராகவும் யானைக் கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் போன்றவற்றை ஏந்தியவராகவும் உருப்பெற்றார்.
தென்மாவட்டங்களில் வீடுகளில் பிள்ளையார் உருவத்தின் முன் மோதகம், சுண்டல் கொழுக் கட்டை, எள்ளுருண்டை போன்றவற்றைப் படைத்து வழிபாடு செய்வதுடன் பிள்ளையார் சதுர்த்தி நிறைவடைகிறது. பிள்ளையாரின் உருவத்தை நீர் நிலையில் கொண்டு போடும் வழக்கம் தென்மாவட்டங்களில் பரவலாகக் கிடையாது. வட மாவட்டங்களில் கோவில் அல்லது ஊர்ப் பொது நீர் நிலையில் பிள்ளையாரைப் போடும் வழக்கம் உண்டு. ஆயினும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலையில் பிள்ளையார் உருவத்தைப் போடும் வழக்கம் தமிழ்நாட்டில் பரவலாக இல்லாத ஒன்று.

1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 இல் திருநெல் வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 180 குடும்பங்கள் இசுலாத்தைத் தழுவின. அதே ஆண்டு மே 23 இல் மேலும் 27 குடும்பங்கள் இசுலாத்தைத் தழுவின. இதன் தொடர்ச்சியாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் சிறுசிறு குழுக்களாக தாழ்த்தப்பட்டோர் இசுலாமியச் சமயத்தைத் தழுவினர். இதனை யொட்டி ‘மறு மதமாற்றம்’, மதமாற்றத்திற்கு எதிரான ‘தாய்மதம் திரும்பச் செய்தல்’ என்ற குரல் இந்துத்துவவாதிகளால் எழுப்பப்பட்டது. வடபுலத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் துறவியர்கள் மீனாட்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதனையொட்டி ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் இந்து மத அடிப்படைவாத இயக்கம் ஒன்று தமிழ் நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
இதன் பின்னர் 01.03.1982 முதல் 15.03.1982 வரை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்ற கடற்கரைக் கிராமத்திலும் வேறு பகுதிகளிலும் மதக்கலவரங்கள் உருவாயின.
இக்கலவரத்தை உருவாக்குவதில் பிள்ளையாரைத் துணைக்கு அழைத்தனர். 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை என்ற ஊரில் உள்ள போக்குவரத்துத் தீவில், பிள்ளையார் சிலை ஒன்றைத் திடீரென்று நிறுவினர். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையால் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது என்ற வதந்தியைத் திட்டமிட்டு உருவாக்கினர். இதனால் பதட்ட நிலை உருவானது. இவ்வாறு குமரி மாவட்ட மதக் கலவரத்திற்குப் “பிள்ளையார் சுழி” போடப்பட்டது.

அடுத்தடுத்த இந்துத்துவ இயக்கங்களின் வளர்ச்சிக்காக 1990 ஆம் ஆண்டு பிள்ளையார் ஊர்வலத்தை இந்து முன்னணியினர் உருவாக்கி இன்று வரை தொடர்கின்றனர். பலருக்கும் பணம் கொடுத்து பிள்ளையார் சிலைகளை வைத்துப் பிரச்சாரம் செய்ய இந்து முன்னணி இதை ஒரு உத்தியாக்கியது. இதற்குப் பெரிதும் வடநாட்டுப் பணமும் பயன்பட்டது. இதைக் கடலில் கரைக்கும் சாக்கில் ஊர்வலம் என்ற பெயரில் சென்று, மசூதிகள் இருக்கும் இடங்களில் கலவரம் செய்வது முன்பு பல ஆண்டுகளாக நடைபெற்றும் உள்ளன!
அந்த வரிசையில் இன்று அனுமன் ஜெயந்தி, நாரதர் ஜெயந்தி, புஷ்கரணி, வினாயகர் சதுர்த்தி என்று பலவற்றை புதிய வடிவில், முறையில் உருவாக்கி வீட்டிற்குள் இருந்த பக்தியை வீதிக்குக் கொண்டுவந்து விபரீதங்களை அன்றாடம் நிகழ்த்தி வருகின்றனர்.
சாஸ்திர விரோதமாய் பண்டிகைகள்
எதற்கெடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், ஆகமம், ஆச்சாரம், தெய்வீகம், புனிதம் என்று கூப்பாடு போடும் ஆரிய பார்ப்பனர்கள், எந்த சாஸ்திர சம்பிரதாய அடிப்படையும் இல்லாமல் விழாக்களை இவர்கள் விருப்பம் போல் அரசியல் ஆதாயத்திற்கும், மதவெறியைத் தூண்டவும், வருவாய் ஈட்டவும், சுரண்டவும் கொண்டாடுகின்றனர்.
அவர்கள் சொல்லிக் கொள்கின்ற சாஸ்திர சம்பிரதாயப்படி வினாயகர் சதுர்த்தி என்பது, ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியில் விரதம் இருப்பதே ஆகும். விரதம் என்பது வீட்டிற்குள் இருப்பது. வினாயகர் உருவத்தை களிமண்ணால் செய்து விரதம் இருந்து, முடிந்தபின் நீரில் கரைப்பது. ஆனால், இன்று இந்த வினாயகர் சதுர்த்தி விழாவின் நிலை என்ன? அவலம், அடாவடிச் செயல், அவர்கள் வணங்கும் கடவுளுக்கே அடுக்காத அக்கிரமங்கள்! ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பத்து அடி, இருபது அடி உயரத்திற்கு சிலைகளை வைத்து, ஆர்ப்பாட்டம் செய்து, இறுதியில் அதை கரைக்கிறேன் என்று சொல்லி ஊர்வலமாக எடுத்துச் சென்று, செல்லும் வழியில் கலவரம், அடிதடி, குத்துவெட்டு, ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு என்று சட்டம், ஒழுங்கிற்கு சவால் விட்டு, பின் கடலில் கரைப்பதாகச் சொல்லி, அதுவரை வணங்கிய வினாயகர் சிலையை கட்டையால் அடித்து நொறுக்கி கை வேறு, கால் வேறு, வயிறு வேறு, தலை வேறு என்று சிதைத்து கடலை மாசுபடுத்தி, கடல்வாழ் உயிரினங்களுக்குக் கேடு உருவாக்கிவிட்டு வீடு திரும்புகின்றனர்.
இப்படி விழாக் கொண்டாட அவர்கள் சொல்லும் சாஸ்திரம் அனுமதிக்கிறதா? வணங்கிய கடவுளை கட்டையால் அடித்து நொறுக்குவதுதான் பக்தியா?
ஆக, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற மதவெறி அமைப்புகளுக்கு பக்தி நோக்கமல்ல, ஆர்ப்பாட்டமும், பிரச்சாரமுமே. தங்கள் அரசியல் செல்வாக்கை இதன்வழி நிலைநிறுத்தவும், வளர்க்கவும், இப்பண்டிகையை இவர்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைத்து கொண்டாடுகின்றனர்.
வினாயகரிலே கம்ப்யூட்டர் வினாயகர், ராக்கெட் வினாயகர் வரை எல்லாம் உண்டு. இதுவெல்லாம் சாஸ்திரத்தில் உண்டா? புராணத்தில் உண்டா?
ஆக, பண்டிகையானாலும், இந்து மதம் இந்துக்கள் என்ற பற்றானாலும் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காகவே அவர்கள் கையாளுகிறார்கள். மற்றபடி அவர்களுக்கு பக்தியோ, மதப் பற்றோ இருப்பதாகக் கொள்ள முடியாது. எல்லாம் ஆரிய ஸநாதனத்தை நிலைநிறுத்தி, ஆதிக்கம் செலுத்துவதற்கான யுக்திகளே!
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
இதன் உள்நோக்கம் அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன?
கோயில்களைத் திறக்கப் போராடுகிறோம் என்றார்கள்; அன்றைய தமிழ்நாட்டின் ஆட்சியாளர் களும் (அ.தி.மு.க. ஆட்சி) திறந்தார்கள். விளைவு – மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகரின் தாயார் கரோனாவினால் மரணமடைந்தாரே – பல அர்ச்சகர்கள், கோவிலுக்கு வந்தவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லையா?
வினாயகர் ஊருவாக்கம்
அறிவுக்கு உகந்ததா?
- ஒரு நாள் சிவனின் பெஞ்சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்துவதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து – “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!…” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார வைத்திருந்ததாகவும், அந்த சமயத்தில் பார்வதியின் புருஷனான பரமசிவன் வீட்டிற்குள் புகுந்ததாகவும், அழுக்குருண்டையான வாயில் காக்கும் பிள்ளையார் அந்தப் பரமசிவனைப் பார்த்து, “பார்வதி குளித்துக் கொண்டிருப்பதால், உள்ளே போகக்கூடாது…” என்று தடுத்ததாகவும், அதனால், பரமசிவக் கடவுளுக்குக் கோபம் ஏற்பட்டு தன் கையிலிருந்த வாளாயுதத்தால் ஒரே வீச்சாக அந்தப் பிள்ளையார் தலையை வெட்டிக் கீழே தள்ளிவிட்டு குளிக்குமிடத்திற்குள் போனதாகவும், பார்வதி சிவனைப் பார்த்து, “காவல் வைத்திருந்தும் எப்படி உள்ளே வந்தாய்…?” என்று கேட்டதாகவும், அதற்கு சிவன், “காவற்காரன் தலையை வெட்டி உருட்டிவிட்டு வந்தேன்” என்று சொன்னதாகவும், இதுகேட்ட பார்வதி, தான் உண்டாக்கின குழந்தை வெட்டுண்டதற்காகப் புரண்டு புரண்டு அழுததாகவும், சிவன் பார்வதியின் துக்கத்தைத் தணிக்க வேண்டி, வெட்டுண்டு கீழே விழுந்த தலையை எடுத்து மறுபடியும் ஓட்ட வைத்து உயிர் கொடுக்கலாம் எனக் கருதி உடனே வெளியே வந்து பார்க்க, வெட்டுண்ட தலை காணாமல் போனதால் அருகிலிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி, முண்டமாகக் கிடந்த குழந்தையின் கழுத்தில் ஒட்டவைத்து, அதற்கு உயிரைக் கொடுத்து, பார்வதியைத் திருப்தி செய்ததாகவும் கதை சொல்லப்படுகிறது. இக்கதைக்கு சிவ புராணத்திலும், கந்தபுராணத்திலும் ஆதாரங்கள் இருக்கிறது.
- ஒரு காட்டில் ஆண் _- பெண் யானைகள் கலவி செய்யும்போது, சிவனும் _ பார்வதியும் கண்டு, கலவி ஞாபகம் ஏற்பட்டுக் கலந்ததால், யானை முகத்துடன் குழந்தை பிறந்தது என்றும் பிள்ளையார் கதை கூறுகிறது.
- பார்வதி கருவுற்றிருக்கையில் ஓர் அசுரன் அக்கருப்பைக்குள் காற்று வடிவமாகச் சென்று அக்கருச் சிசுவின் தலையை வெட்டிவிட்டு வந்ததாகவும், அதற்குப் பரிகாரமாக பார்வதி யானையின் தலையை வைத்து உயிர் உண்டாக்கி குழந்தையாகப் பெற்றுக் கொண்டதாகவும் வினாயகர் புராணம் கூறுகிறது.
- தக்கனுடைய யாகத்தை அழிப்பதற்காக சிவன் தனது மூத்த குமாரனாகிய கணபதியை அனுப்பியதாகவும், தக்கன் அக்கணபதி தலையை வெட்டிவிட்டதாகவும், சிவன் தனது இரண்டாவது பிள்ளையாகிய சுப்பிரமணியனை அனுப்பியதாகவும், அவன் போய்ப் பார்த்ததில் தலை காணப்படாமல் வெறும் முண்டமாய் கிடந்ததாகவும், உடனே ஒரு யானையின் தலையை வெட்டி வைத்து உயிர்ப்பித்ததாகவும் மற்றொரு கதை சொல்லப்படுகின்றது. இது தக்கயாகப் பரணி என்னும் புத்தகத்தில் இருக்கிறது.
பிள்ளையார் பிரமச்சாரியா?
பிள்ளையார் திருமணமாகாத பிரம்மச்சாரி என்று கூறுகின்றனர். ஆனால், அவருக்கு சித்தி, புத்தி என்ற இரண்டு மனைவி இருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் மோதை, பிரமோதை, சுமனக சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசினிகாந்தை, சாருக்தானகை, சுபத்திமை, நந்தினி, மாமதை, வல்லபை போன்ற மனைவிகள் உள்ளதாய் அபிதான சிந்தாமணி கூறுகிறது.
பிள்ளையார் பிரம்மச்சாரி என்று கூறிவிட்டு, அதன்பின் இத்தனை மனைவிகள் இருப்பதாய்க் கூறுவது அறிவுக்கு ஏற்புடையதா?
விசா கணேசர் முதல் கிரிக்கெட் கணேசர் வரை வினாயகர் எத்தனை வினாயகர்?
வினாயகர் உருவானது பற்றி அறிவுக்கு ஒவ்வாத அபத்தமான பல கதைகளை உருவாக்கியது போல, இன்றைக்கு காலத்திற்கு ஏற்ப, வணிக நோக்கில் பல வினாயகரை உருவாக்கியுள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் ரசனைக்கு ஏற்ப “கிரிக்கெட் கணேசர்” என்று புதிதாய் உருவாக்கியுள்ளனர். மோட்டார் வாசகனத்துக்கு படையல் போடுகிறார்கள் என்பதால் அதனை அடிப்படையாக வைத்து “மோட்டார் கணேசர்”, “லைசன்ஸ் கணேசர்” என்று புதிய வினாயகரை உருவாக்கியுள்ளனர். அயல்நாடுகளுக்கு அதிகம் வேலைக்காகச் செல்கிறார்கள் என்பதை வைத்து பக்தி வியாபாரம் செய்யத “விசா கணேசர்‘‘, “பாஸ்போர்ட் கணேசர்” என்று பல வினாயகரை காலத்திற்கேற்ப வணிக நோக்கில் உருவாக்கியுள்ளனர்.
தந்தை பெரியார் கூறியது போல பக்தி வந்தால் புத்தி போய்விடுகிறது எதைச் சொன்னாலும் அதை ஏற்று நம்பி அறிவைச் சிறிதும் பயன்படுத்தாமல் பக்தி பிடிப்பில் பலவும் செய்கின்றனர். ஆன்மிகம் அறிவைக் கெடுத்து, சிந்தனையைப் பாழாக்கி, கண்ணை மூடிக் கொண்டு எதையும் செய்யும் நிலைக்கு மக்களை ஆளாக்கி வருகிறது.
வாகனம் அறிவுக்கு ஏற்றதா?
வினாயகருக்கு ‘பெருச்சாளி’ வாகனம் என்கிறது ஆன்மிகம். இது அறிவுக்கு உகந்ததா? வினாயகர் குறைந்தது 100 கிலோ எடை இருப்பார். அவரை 2 கிலோ எடையுள்ள பெருச்சாளி சுமந்து செல்ல முடியுமா? அதுமட்டுமல்ல வினாயகர் அமரும் அளவிற்கு பெருச்சாளியின் முதுகின் பரப்பு அகலமிருக்காது. மேலும் பெருச்சாளி அரை அடி உயரத்திற்குள் இருக்கும். அதில் 100 கிலோ எடையுள்ள வினாயகர் அமர்ந்து காலை எப்படி தொங்க விட முடியும்? இதில் ஏதாவது அறிவுக்கு ஏற்ற உள்ளதா? ஆன்மிகம் அறிவுக் கெடுத்து மக்களை மடையராக்குகிறது என்பதறகு இதுவே சான்று அல்லவா?
வினாயகர் வழிபாட்டு தமிழர்க்கு இல்லை
வினாயகர் வழிபாட என்பதே கி.பி. 641க்கு முன் தமிழ்நாட்டில் இல்லை. தமிழின் தொன்மை இலக்கியமான தொல்காப்பியத்தில் வினாயகர் பற்றிய குறிப்பு இல்லை. குறிஞ்சி நிலத் தலைவர் முருகன் பணி பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. முருகனுக்கு அண்ணனாகக் கற்பிக்கப்பட்டுள்ள வினாயகர் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
கி.பி. 641இல் நரசிம்ம வர்மன் வாதாபியின் மீது படையெடுத்து வென்ற போது, அவனது படைத் தலைவனான பரஞ்சோதி, யானைத் தலையும் மனித உடலும் உடைய வினோத சிலையை கண்டு வியந்து அதை அப்படியே எடுத்து வந்து தமிழ்நாட்டில் காட்சிப் பொருளாக வைத்தான். காட்சிப் பொருளாக வந்த வினாயகர் இன்று கட்சிப் பொருளாகி, இந்துத்துவாதிகளுக்குக் கையாளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதுதான் பக்தியா? பகுத்தறிவு?
வினாயகர் வழிபாட்டில் பக்திச் செயல்பாடுகள் ஏதாவது உள்ளதா? பல நூற்றாண்டாக களி மண்ணில் சிறு வினாயகர் உருவம் செய்து வணங்கினர். ஆனால், வினாயகர் அரசியல் கருவியாக ஆக்கப்பட்ட பின் 5 அடி, 10 அடி, 20 அடியென்று போட்டிப் போட்டுக் கொண்டு வினாயகரைப் பெரிய அளவில் செய்து, அதை வீதியில் வைத்து, ஆட்டம் பாட்டம் என்று கூத்தடித்து விட்டு, இரண்டு நாள் கழித்து அதை ஊர்வலமாக எடுத்துச் சன்று கடலில் தள்ளி, அதன்மீது ஏறி கட்டையால் வினாயகரின் கைகால்களைத் தனித்தனியே உடைத்தெடுத்து, தலையைத் தனியே வெட்டியெடுத்து கடலை மாசு படுத்துகின்றனர். முதல் நாள் வரை வணங்கிய கடவுளை (வினாயகரை) கடலில் தள்ளி அதன்மீது ஏறி உடைத்து நொறுக்குவது பக்தியா? அறிவுக்கு உகந்த செயலா? மனிதனின் அறிவை ஆன்மிகம் எந்த அளவுக்குக் கெடுத்து, பாழாக்கி, சீரழிக்குறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!
(தொடரும்)
