சென்னை, பிப். 7- கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளின் சாலை, மின்விளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு களின் பராமரிப்புப் பணிகளை மாநகராட்சி மேற்கொள்ளும் வகையில் சிட்கோவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணி
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் (சிட்கோ) கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
இங்கு லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், தொழிற்பேட்டைகளின் உள்கட்டமைப்புகளை பராமரிக்க, சென்னை மாநகராட்சி சார்பில் சிட்கோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை 1,167 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு 41.38 கி.மீ. நீளத்தில் 128 சாலைகள், 1,558 தெரு விளக்குகள், 8 உயர்கோபுர மின்விளக்குகள், 84 கி.மீ. நீள மழைநீர் வடிகால்கள் உள்ளன. இங்கு தினமும் 40 இடங்களில் குப்பை சேகரமாகின்றது.
கிண்டி தொழிற்பேட்டை 404.08 ஏக்கர் பரப்பு கொண்டது. இங்கு 15.28 கி.மீ. நீளத்தில் 82 சாலைகள், 344 தெரு விளக்குகள், 2 உயர்கோபுர மின்விளக்குகள், 23.50 கி.மீ. நீள மழைநீர் வடிகால்கள் உள்ளன. இங்கு தினமும் 20 இடங்களில் குப்பை சேகரமாகின்றது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அம்பத்தூர், கிண்டி தொழிற்பேட்டைகளில் உள்ள சிட்கோவின் உட்கட்டமைப்புகள் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
