ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (2)-மஞ்சை வசந்தன்

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஆன்மா என்பதும், கடவுள் என்பதும் உண்மையற்ற நம்பிக்கைகள். கற்பிதக் கருத்துகளான இவற்றை அடிப்படையாக வைத்து செய்யப்படும் செயல்பாடுகள் அறிவியலுக்கும், அறிவுக்கும், ஆக்கத்திற்கும் எதிரானதாகவே இருப்பதை நாம் கூர்ந்து நோக்கி அறியலாம்.

ஆன்மா என்று எதுவும் இல்லை. அதேபோல் பரமாத்மா என்றும் எதுவும் இல்லை. (இவற்றை அய்யத்திற்கு இடம் இன்றி தெளிவாக, உறுதியாக அறிய “பெரியார் ஓடிடி”-யில் கடவுள் பற்றிய எனது விளக்கத்தைப் பாருங்கள்).

ஆனால், இந்த உண்மையற்ற கற்பிதங்களை பயன்படுத்தி பல நம்பிக்கைகளை, சிந்தனைகளை, செயல்களை மக்களிடையேப் பரப்பி, அவர்களை அறிவுக்கு ஒவ்வாதவற்றைச் செய்யும்படிச் செய்கின்றனர்.

பிறவி, விதி, சொர்க்கம், நரகம், முக்தி என்று அறிவுக்கு எதிரான, உண்மையற்ற கற்பிதங்களை உருவாக்கி, மக்களை அறிவிற்கு எதிரானவற்றை நம்பும்படியும், செய்யும்படியும் தூண்டுகின்றனர்.

திதி

இறந்தவர்கள் ஆவியாக மேல் உலகத்தில் இருப்பது போலவும், அந்த ஆன்மாவிற்கு உரிய விருப்பங்களை, தேவைகளை நிறைவேற்ற திதி கொடுக்கின்ற சடங்கைச் செய்கின்றனர்.

இறப்பு என்பது உயிர்ப்பை உடல் இழப்பது ஆகும். உயிர் என்பது ஒரு பொருள் அல்ல. அது ஓர் ஆற்றல். நெருப்பு (தீ) போல அது ஒரு ஆற்றல். நெருப்பற்ற பொருளிலிருந்து நெருப்பு வெளிப்படுவது போல, உயிரற்ற பொருள்களிலிருந்து இயற்கைச் சூழலில் உயிர் உருவாகியது.

அந்த உயிர் நிலைக்க உணவும், ஆக்சிஜனும் வேண்டும். இந்த இரண்டில் எந்த ஒன்று இல்லையென்றாலும் உயிர் என்ற சக்தி இல்லாமல் போகும். தீ எரிய எரிபொருளும், ஆக்சிஜனும் வேண்டும். இந்த இரண்டில் எந்த ஒன்று இல்லையென்றாலும் தீ இல்லாமல் போகும் அல்லவா அதுபோல.

எரியும் ஒரு சிமினி விளக்கின் கண்ணாடி குடுவையின் மேல் திறப்பில், ஒரு அட்டையை வைத்து மூடினால், கண்ணாடிக் கூண்டிற்குள் எரியும் தீ மெல்ல மெல்ல தன்னளவில் குறைந்து இறுதியில் இல்லாமல் போகும்.

அப்படி இல்லாமல் போகும் தீ எங்கும் செல்வது இல்லை. இன்னொரு எரியாத விளக்கில் சென்று பற்றி எரிவது இல்லை. அப்படித்தான் உடலில் உள்ள உயிர் மூக்கையும், வாயையும் இறுக்கி முடினால் உயிர்த் தன்மையை உடல் இழந்து விடுகிறது. இதுவே இறப்பு. அப்படி இறந்த பின் உடலில் இருந்து உயிர் விலகிச் சென்று அலைவதில்லை. இன்னொரு உடலில் சென்று ஏறிக் கொள்வதில்லை. சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்வதில்லை, பேயாக அலைவதும் இல்லை.

உண்மை இப்படியிருக்க இறந்தவர்களுக்கு திதி கொடுக்கிறேன் என்று அவர்களுக்குப் பிடித்தமான பொருள்கள் வைத்து படைப்பது, அதை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று நம்புவது எப்படி அறிவுக்கு உகந்த செயல் ஆகும்? பார்ப்பனர்கள் வருவாய் ஈட்ட இப்படிப்பட்டச் சடங்குகளை உண்டாக்கி, மக்களை நம்பச் செய்து கடவுள் பெயரால், ஆன்மா பெயரால் மக்களை ஏமாற்றுவதும், அதற்கு படித்தவர்கள், பதவியில் உள்ளவர்கள் கூட ஏமாறுவதும், திதி போன்ற அறிவுக்குப் பொருந்தாத செயல்களைச் செய்தும் அறிவார்ந்த செயலாகுமா?

‘இறந்தவர்கள் ஆவியாக அலைகிறார்கள்’ என்ற அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கையில் சடங்குகளைச் செய்து, பொருளையும், பொழுதையும் வீணடிப்பதற்கு மாறாக, இறந்தவர்கள் நினைவாக அறப்பணிகளைச் செய்து, ஏழை எளியோர்க்கு உதவினால், இறந்தவர்கள் பெயரும் விளங்கும், செயகின்றவர்களுக்கும் நற்பெயர் ஏற்படும்! மனம் நிறையும்.

சடங்குகள்: கடவுள், ஆன்மா நம்பிக்கையால் எண்ணற்றச் சடங்குகள். அதற்காக அளவற்ற பொருள் வீணடிப்புகள், பாழடிப்புகள், பொருள் இழப்பு ஏற்படுவதோடு, அளவற்ற, தேவையற்ற பாதிப்புகளும் மக்களுக்கும், இயற்கைக்கும் ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி, உயிரினம், உயிர் பற்றிய உண்மைகள் ஆராயப்படாத காலத்தில் இருந்த ஆன்மிக நம்பிக்கைகள் அறிவைக் கெடுக்குமே தவிர, அறிவைக் கொடுக்காது. எனவே, அறிவியலை, உண்மையை ஏற்று அதன்படி வாழ வேண்டியது கட்டாயமாகும்!

கார்த்திகை தீபம்

திருவண்ணாமலையில் எரிமலை வெடித்து, நெருப்பு விண் முட்ட எழுந்து நின்ற உண்மையை அறியாமல், சிவபெருமான் நெருப்பு வடிவில் நின்றார் என்ற ஒரு புராணக் கதையை, புரட்டை நம்பி, அம்மலை உச்சியில் நூற்றுக்கணக்கான லிட்டர் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வீணடிப்பதோடு, அதைப் பார்க்க பல லட்சம் பேர் கூடுவதன் மூலம் தேவையற்ற சுகாதாரக்கேடு, சட்டம் ஒழுங்கு கேடு, போக்குவரத்து நெரிசல், கோடிக்கணக்கில் ரூபாய், பொருள் செலவு!

தீபம் ஏற்றுவதை திருவண்ணாமலையோடு நிறுத்திக் கொள்ளாமல், நாட்டில் பல இடங்களிலும் கோடிக்கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. அதற்கு லட்சக்கணக்கான லிட்டர் எண்ணெய் வீணடிக்கப்படுகிறது. இது ஒரு நாளில் முடியாமல் மூன்று நாள்கள் நடக்கிறது. இதன்மூலம் எத்தனை ஆயிரம் கோடி பொருள் இழப்புகள் ஏற்படுகின்றன! இது அறிவுக்கு உகந்த செயலா? சிந்திக்க வேண்டும்! ஆன்மிகம் அறிவைக் கெடுக்கிறது என்பதற்கு இது ஆதாரமல்லவா?

தீபாவளி

நரகாசுரனை திருமால் அழித்ததாக ஒரு புராணக் கதையைச் சொல்லி அதற்கு தீபாவளி என்று பெயர் சொல்லி நாடு முழுக்க ஆன்மிகத்தின் பெயரால் ஒரு பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. உண்மையில் நரகாசுரனும் இல்லை, திருமாலும் இல்லை. திருமால் நரகாசுரனை வதம் செய்து கொல்லவும் இல்லை.

சமணர்களின் தீர்த்தங்கரர்களில் 24ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர், பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண்மனையிலே தங்கி இருந்தபோது அங்கு குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

கட்டுரை

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழா கொண்டாடும்படி ஏற்பாடு செய்தனர். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவளி ‘லி’ என்பது ‘ளி’ ஆகத் திரிந்தது) தீபாவளி என்று அழைக்கப்பட்டது. மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் நீராடிய பின்னர் விளக்குகளை  வரிசையாக ஏற்றிச் சமணர்கள் கொண்டாடினர்.

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள், திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. (கல்வெட்டாராய்ச்சி அறிஞர் “மயிலை சீனி.வேங்கடசாமி’’ அவர்கள் எழுதிய “சமணமும் தமிழும்’’ என்னும் நூலில், பக்கம் 79_80)

தீபாவளி என்னும் பெயர் சமணப் பண்டிகைக்கு மட்டுமே பொருந்தும். நரகாசுரன் கதைக்குப் பொருந்தாது. எனவே, சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகையாக ஆக்கிக்கொண்ட மோசடி இதில் வெளிப்படுகிறது. இதை வாரியாரே கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.

கட்டுரை

அசுரர் கொலைக்கு விழாவா?

“தீபாவளியின் உண்மையறிந்தவர்கள் ஒரு சிலரே ஆவார்கள். பெரும்பாலோர் நரகாசுரனைக் கண்ணபிரான் சம்கரித்தார்; அந்த அரக்கனை அவர் அழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். நரகாசுரனைக் கொன்ற காரணத்தினால் கொண்டாடப்படுவது தீபாவளி என்பது பிழை. ஓர் அசுரனைக் கொன்றதற்காக ஒரு கொண்டாட்டம் இருக்க முடியாது. அப்படியானால் இராவணன், இரணியன், இடும்பன் மகன் சலந்தரன், அந்தகன் முதலிய அரக்கர்களைக் கொன்றதற்கும் கொண்டாட்டம் இருக்க வேண்டும். (ஆனால் அவ்வாறு இல்லையே) நரகாசுரனைக் கொன்றதற்கும், தீபாவளிக்கும் தொடர்பு இல்லை என உணர்க. நரகாசுரனைக் கொன்றதற்காகத் தீபாவளி ஏற்பட்டதன்று”. (திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதிய “வாரியார் விரிவுரை விருந்து’’ என்ற நூலில், பக்கம்-95)

கட்டுரை

எனவே, தீபாவளி இந்துப் பண்டிகை அல்ல என்பதையும், அது தமிழர்க்குரிய பண்டிகையும் அல்ல என்பதையும் உணர வேண்டும். இப்பொழுது கொண்டாடப்படுவது, பட்டாசு வெடித்து மாசுபடுத்துவது, ஒரே நாளில் பல பலகாரங்களைத் தின்று உடலைக் கெடுத்துக் கொள்வது அறிவுக்கும் உகந்தது அல்ல என்பதை உணர்ந்து மக்கள் இப்பண்டிகையை கை விடவேண்டும். அது நாட்டுக்கும், வீட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

ஒரே நாளில் இந்தியா முழுக்க புகையாக்கி காற்றை மாசுபடுத்துவது, அதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரின் உடல் நலத்தைக் கெடுப்பது, சமுதாய துரோகச் செயல் என்பதைக் கருத்தில் கொண்டு இவற்றைக் கைவிடவேண்டும். தீபாவளி என்னும் பெயரே இது சமணப் பண்டிகைதான் என்பதை உறுதிசெய்யும். 24ஆம் தீர்த்தங்கரர் இறந்த நேரத்தில் வரிசையாக விளக்கேற்றி வணங்கியமையால், தீப + ஆவலி (விளக்கு வரிசை) என்று அழைக்கப்பட்டது. நரகாசுரன் வதை என்பதற்கு தீபாவளி என்ற பெயர் பொருந்தாது.

கட்டுரை

எனவே, சமணப் பண்டிகையை இந்துப் பண்டிகையாக மாற்ற கற்பனையாய்ப் புனையப் பட்டதே நரகாசுரன் கதை என்பதும், தீபாவளி என்பது இந்துப் பண்டிகையல்ல; அது சமணப் பண்டிகையே என்பதும் உறுதியாகிறது. மேலும் வடமாநிலங்களில் தீபாவளியன்று வரிசையாக விளக்கேற்றி வழிபடும் வழக்கம் இன்றும் இருப்பது இதை உறுதி செய்கிறது.

கட்டுரை

பொய்யான புராணக் கதை எழுதி சமணப் பண்டிகையாக மாற்றிய உண்மையறியாது, தீபாவளி கொண்டாடி, நாட்டை புகை மண்டலமாக்குவது, மக்களை பாதிப்படையச் செய்வது அறிவுக்குகந்த செயலா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *