நாங்கள் எப்போதும் ‘உங்கள்’ கொள்கைக்கு கட்டுப்பட மாட்டோம்; எங்களை அடக்க நினைத்தால் திமிறி எழுவோம்!
காரணம் எங்களிடத்திலே 72–ம் இருக்கிறது. 92–ம் இருக்கிறது;
இவர்கள் நினைக்கிற போது 22 எல்லாம் உள்ளே வரும்!
நாம் 22 களை உருவாக்குவதற்காக 92 அய், 72 அய் போற்றி வணங்கி, அவர்களின் பாதையிலே பயணிப்போம்!
பெரம்பலூர், பிப்.6 நாங்கள் எப்போதும் உங்கள் கொள்கைக்கு கட்டுப்பட மாட்டோம். எங்களை அடக்க நினைத்தால் திமிறி எழுவோம். காரணம் எங்களிடத்திலே 72–ம் இருக்கிறது. 92–ம் இருக்கிறது. இவர்கள் நினைக்கிற போது 22 எல்லாம் உள்ளே வரும். எனவே, அந்த உணர்வோடு, நாம் 22 களை உரு வாக்குவதற்காக 92 அய், 72 அய் போற்றி வணங்கி, அவர்களின் பாதையிலே பயணிப்போம் என்றார் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள்
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”
பெரம்பலூர் தேரடித் திடலில், கடந்த 31.01.2026 அன்று மாலை ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினுடைய முகத்திரையைக் கிழிப்பதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய நாயகர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற அந்த முதுபெரும் தலைவரை மீண்டும் முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்றும், தமிழ்நாடெங்கும் பயணம் மேற்கொண்டிருக்கின்ற ஒரு நிகழ்வாக – இந்த நிகழ்வில் தலைமை ஏற்றிருக்கின்ற திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் தோழர் தங்கராஜ் அவர்களே! வரவேற்பை நிகழ்த்தியிருக்கின்ற மாவட்டச் செயலாளர் விஜயேந்திரன் அவர்களே! திரா விட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அருமை சகோதரர் ஜெகதீசன் அவர்களே! தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகரன் அவர்களே! கழகத்தினுடைய மூத்த தலைவர்களில் ஒருவர் அண்ணன் முகுந்தன் அவர்களே! மேடையிலே வீற்றிருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இசுலாமிய இயக்கங்கள் உள்ளிட்ட நம்முடைய கூட்டணிக் கட்சிகளுடைய மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளே! திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒன்றிய கழகச் செயலாளர்களே! மாவட்டக் கழகத்தினுடைய நிர்வாகிகளே! வருகை தந்திருக்கின்ற பெரியோர்களே! தாய்மார்களே! நிறைவாக விளக்க உரை, சிறப்பு உரை நிகழ்த்த இருக்கின்ற தமிழர் தலைவர் – திரா விடர் கழகத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கொள்கை ரீதியாக இயக்கிக் கொண்டிருக்கிற நம்முடைய தலைவர், அய்யா ஆசிரியர் அவர்களே! பத்திரிகையாளர்களே! ஊடகவியல் நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்!
பெரம்பலூர் மாவட்டத்திற்குப்
பெரும் பங்கு உண்டு!
பெரம்பலூர் வரலாற்றில் தந்தை பெரியார் அவர்களுடைய சுற்றுப்பயணம் என்று தனியாகப் பிரித்து, நம்முடைய வரதராஜன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் அளித்தார்கள். அந்த நூலைப் படித்தால், பழைய பெரம்பலூர், அரியலூர் பகுதியில் தந்தை பெரியார் அவர்கள் எத்தனை முறை வந்து, இந்த வேப்பந்தட்டையாக இருந்தாலும், பாடாலூராக இருந்தாலும், இருகூராக இருந்தாலும், நாரணமங்கலமாக இருந்தாலும், அதேபோல் அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறையாக இருந்தாலும், அரியலூராக இருந்தாலும் எல்லா கிராமங்களுக்கும் அந்தக் காலத்திலேயே சென்று கொள்கைப் பிரச்சாரத்தை; பகுத்தறிவுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தமிழர்களுக்கு மானமும், அறிவும் வரவேண்டும் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டதில், இந்த மாவட்டத்திற்கு பெரும் பங்கு உண்டு என்ற அந்த அடிப்படையில், அவருடைய கொள்கைகளை இன்றைக்கு ஏற்று இந்த இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்ற ஆசிரியர் அவர்களையும், பெரம்பலூர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்பில் நாங்கள் வருக! வருக! என்று வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம்.
நாடாளுமன்றத்தில் நின்று பாருங்கள் பெரியார் யாரென்று உங்களுக்குத் தெரியும்!
இந்த நிகழ்ச்சியிலே ஆசிரியர் அய்யா அவர்கள் நீண்ட நேரம் உரையாற்ற வேண்டும். பெரியாருக்கு, பெரியாருடைய கொள்கைகளுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே வந்த விமர்சனங்கள் எல்லாம், அவர் வாழ்ந்த காலத்தை விட பொய்யான, திரிபான விமர்சனங்களை எல்லாம் இன்றைக்கு சங்கிகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் நாங்கள் தான் பெரியாரிடத்தில் தோற்றுவிட்டோம். எங்கள் சமுதாயம்தான் தோற்றுவிட்டது பெரியாரிடத்தில்; உங்கள் சமுதாயத்திலேயே – தமிழ் சமூகத்திலேயே கோடாரிகளை உருவாக்குகிறோம் என்று சொல்லி, எந்த மா.பொ.சி. தோற்று போனாரோ? யாராரெல்லாம் இந்த இயக்கத்தை விமர்சித்து தோற்றுப் போனார்களோ; அவர்கள் தூக்கிப்போட்ட துருப் பிடித்ததை எடுத்து வந்து, குரலை மட்டும் கொஞ்சம் கம்பீரமாக மாற்றிக்கொண்டு; கை காலை உயரத்தூக்கி ஆட்டிக்கொண்டு, நான் பெரியாரை வீழ்த்தி விடுவேன் என்று சொல்கின்ற, கொக்கரிக்கினற கூட்டங்களுக்கு எல்லாம் சொல்கின்றேன் அருள் கூர்ந்து டில்லிக்கு வாருங்கள். தமிழ்நாட்டில் அல்ல, நாடாளுமன்றத்தில் நின்று பாருங்கள் பெரியார் யாரென்று உங்களுக்குத் தெரியும்!
அவர்களால், தமிழ்நாட்டுக்கு
ஏன் வர முடியவில்லை?
திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருக்கின்ற நானோ, டி.ஆர்.பாலுவோ, தயாநிதி மாறனோ, கனிமொழியோ – நாடாளுமன்றத்தில் நாங்கள் இந்தக் கறை வேட்டியோடு போனால், 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஜே.பி.யில் இருந்தாலும், எங்களைக் கண்டு… பயந்து… எழுந்து குசுகுசுவென்று அவர்கள் பேசிக் கொள்வதை நீங்கள் பார்க்கலாம். என்ன காரணம் என்றால் பெரியார் பற்ற வைத்த நெருப்பு இன்றைக்கு இந்தியாவுக்குத் தேவைப்படுகின்றது என்பதைத்தான் அகிலேஷ் யாதவாக இருந்தாலும், மம்தா பானர்ஜியை இருந்தாலும், வேறு கூட்டணிக் கட்சிகள் யாராக இருந்தாலும் எங்களிடத்திலே பேசுவது – இவ்வளவு தந்திரங்களைச் செய்து; இவ்வளவு பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, மதவெறியைத் தூண்டி என்னென்னவோ செய்து ஈடி (ED), இன்கம்டாக்ஸ் (Income Tax), சி.பி.அய்.(CPI) என்று எல்லாவற்றையும் வைத்து ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் நுழைய முடிகிறதே – எங்கள் மாநிலத்திற்கு வந்து விட்டார்களே! – அவர்கள் மாநிலத்துக்கு வந்து விட்டார்களே! ஏன் தமிழ்நாட்டுக்கு வர முடியவில்லை என்று கேட்டால், அதற்குக் காரணம் ‘எல்லைச் சாமிகள்’ இங்கே இருக்கிறார்கள், உங்களை விரட்டுவதற்கு! எங்களுக்கும் சாமி நம்பிக்கை வந்துவிட்டது இப்போது – 92 வயதிலே ஒரு எல்லைச் சாமி! 72 வயதிலே கோட்டையிலே ஒரு எல்லைச் சாமி! இந்த எல்லைச் சாமிகள் இரண்டு பேரும் தமிழ்நாட்டில் இருக்கிற வரைக்கும் – பெரியார் – அண்ணா – கலைஞர் எல்லோ ரும் உயிரோடு இருப்பதாகப் பொருள். அதுவரைக்கும் ஒருவரும் உள்ளே வரமுடியாது. அதுதான் சூத்திரம்.
2000 ஆண்டுகளுக்கு மோடியையும், அமித்ஷாவையும் இந்த மண்ணிலிருந்து ஓட்டக்கூடிய வலிமையை நமக்குத் தருவார்கள்!
எனவே, நமக்கு வேலியாக இருக்கின்ற இரண்டு தலைவர்களையும் – தத்துவத்துக்கு ஒரு தலைவர் – 92 வயது! தத்துவத்தைக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற இன்னொரு தலைவர். அவருக்கு 72 வயது! இந்த 72–ம், 92–ம் இணைந்து, இன்னும் 2000 ஆண்டுகளுக்கு மோடியையும், அமித் ஷாவையும் இந்த மண்ணிலிருந்து ஓட்டக்கூடிய வலிமையை நமக்குத் தருவார்கள்.
எனவே, இந்த ஆட்சி தொடர வேண்டும். குறை சொல்வதற்கு வழியே இல்லை. வேறு ஏதேதோ சொல்லி, சொல்லிப் பார்க்கிறார்கள். ஆகவே, இந்த பெரம்பலூரில் இருந்து சொல்கிறேன். இந்த பெரம்பலூர் தொகுதி கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாம் சொல்லி, ‘‘இராசா இந்துக்களுக்கு எதிரி’’ என்று இங்கே பிரச்சாரம். நீலகிரி முழுவதும் பிரச்சாரம் – ‘‘கடவுள் நம்பிக்கை இல்லாதவர், தீவிரவாதி, நாத்திகர், ஓட்டுப் போடாதீங்க’’ என்று சொல்லி, சொல்லிப் பார்த்தார்கள். போன முறை நீலகிரியில் 2 லட்சத்து 20 ஆயிரம். இந்த பிரச்சாரத்துக்குப் பின்னர் 2 லட்சத்து 80 ஆயிரம். ‘கடவுளே’ எங்களுக்கு ஓட்டு போட்டு விட்டார். அப்படிப்பட்ட பிரச்சாரத்திற்கு எல்லாம் பயப்படாத மண் இந்த பெரம்பலூர் மண்.
என்னுடைய தந்தை, தந்தையாக இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார்!
ஆசிரியரை இந்த நேரத்திலே வரவேற்று, என்னுடைய தந்தையாரின் நினைவு நாள் இன்று (31.01.2026). கிராமத்திற்கு வருவதாகச் சொல்லி யிருந்தேன். எப்போது வருகிறேன் என்று கேட்டார்கள். நான் சொன்னேன். என்னுடைய தந்தை, தந்தையாக இருப்பதற்குக் காரணம் தந்தை பெரியார்! அந்த பெரியார் இடத்திலே இருந்து வந்திருக்கிறார் ஆசிரியர். இந்தத் தந்தையைப் பார்த்துவிட்டு, அந்தத் தந்தையைப் பார்க்கலாம் என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். எனவே, இதை முடித்துவிட்டு கிராமத்துக்குச் சென்று திரும்பி வந்துவிடுவேன். அதுவரையிலும் யாரும் கலையாமல் இருந்து, அய்யாவின் உரையை நீங்கள் கேட்க வேண்டும். நான் வலையொளியில் ஆசிரியர் உரையைக் கேட்டுக்கொள்கிறேன். அவருடைய உரை முடிவதற்குள் நான் வந்துவிடுவேன். அதுவரை அவருடைய உரையைக் கேட்டு, இந்த பகுத்தறிவுப் பிரச்சாரத்தைக் கொண்டு போய் சேருங்கள்.
கொள்கையிலே தளராத
ஒரு முதலமைச்சர்!
இந்த ஆட்சி தொடர வேண்டும். இப்படிப்பட்ட பணிகளைச் செய்கின்ற ஒரு முதலமைச்சரைப் பார்க்க முடியவில்லை. எங்களை மேற்கு வங்காளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கிறார்கள். எங்களால் அரசாங்கத்தை தொடர முடியவில்லை. மோடி பணம் தர மாட்டேன் என்கிறார். எங்களால் ஒரு புது திட்டத்தைக்கூட கொடுக்க முடியவில்லை. ஆனால், மோடி இத்தனையாயிரம் கோடிகள் தமிழ்நாட்டுக்கு தரவில்லை என்றாலும், எப்படி முதலமைச்சர் இத்தனை திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துக்கொண்டே இருக்கிறார்? எப்படி சாத்தியமாகிறது? என்று கேட்கக் கூடிய அளவுக்கு, நல்ல திட்டங்களை அருமையான திட்டங்களை தந்து கொண்டிருக்கின்ற ஒரு முதலமைச்சர்! கொள்கையிலே தளராத ஒரு முதலமைச்சர்! இந்த ஆட்சி பெரியாருடைய ஆட்சிதான்! இப்போதும் என்னை வழிநடத்துவது பெரியார் திடல் தான்! என்று கோட்டையிலே உட்கார்ந்து கொண்டு சொல்லக்கூடிய ஒரு முதலமைச்சர்!
எங்களிடத்திலே 72–ம் இருக்கிறது;
92–ம் இருக்கிறது; இவர்கள் நினைக்கிற போது 22 எல்லாம் உள்ளே வரும்!
ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சர் நாங்கள் அவுட் ஆப் கண்ட்ரோல் டூ டில்லி (Out of control to Delhi) என்று சொல்வதற்கு யாருக்காவது யோக்கி யதை இருக்கிறதா? எங்களை ஒரு காலத்தில் தனித் தமிழ்நாடு கேட்டோம் என்றீர்கள். இப்போது நாங்கள் தனித் தமிழ்நாடு கேட்கவில்லை. ஆனால், அவுட் ஆப் கண்ட்ரோல் (Out of control) என்று சொல்லிவிட்டோம். அதற்கு என்ன பொருள்? இதற்குக் காரணம் என்ன? தந்தை பெரியார்! பேரறிஞர் அண்ணா! கலைஞர்! நாங்கள் எப்போதும் உங்கள் கொள்கைக்கு கட்டுப்பட மாட்டோம். எங்களை அடக்க நினைத்தால் திமிறி எழுவோம். காரணம் எங்களிடத்திலே 72–ம் இருக்கிறது. 92–ம் இருக்கிறது. இவர்கள் நினைக்கிற போது 22 எல்லாம் உள்ளே வரும். எனவே, அந்த உணர்வோடு, நாம் 22 களை உருவாக்குவதற்காக 92 அய், 72 அய் போற்றி வணங்கி, அவர்களின் பாதையிலே பயணிப்போம்.
நன்றி! வணக்கம்!
– இவ்வாறு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
