வல்லம், பிப். 3- நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ பற்றிய விழிப்புணர்வு முகாம் 22.01.2026 முதல் 24.01.2026 வரை நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சி
முதல் நாள் நிகழ்வாக 22.01.2026 அன்று வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மேயர் சண்.இராமநாதன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை துணைவேந்தர் ஆர்.மல்லிகா ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாட்டு நலப்பணித்திட்டத்தை சேர்ந்த 87 மாணவர்கள் தூய்மைப் பணிகளில் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் சுத்தம் மற்றும் பொது இடங்களில் தூய்மையைப் பேணுதல் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தினர்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் 23.01.2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் இரண்டாம் நாள் நிகழ்வாக பல்கலைக்கழக வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனை துணை வேந்தர் முனைவர் வெ.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் 8 பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டதுடன் சுற்றுச் சூழல் நிலைத்தன்மையை ஊக்குக்குவிக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி
இத்திட்டம் சார்பில் “தூய்மை இந்தியா இயக்கம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் 24.01.2026 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் வல்லம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் பேரா. பி.கே.சிறீவித்யா மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் சிவசங்கரி ஆகியோரின் தலைமையில் தூய்மை இயக்கம் விழிப்புணர்வு தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் பள்ளியில் உள்ள குளம் பராமரிப்பு மற்றும் பள்ளியின் தூய்மை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக, சுற்றுச் சூழல் நிலைத்தன்மையை ஊக்குக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வல்லம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டத்தை சேர்ந்த 80 மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங் கிணைப்பாளர்கள் முனைவர் பொ.விஜய லட்சுமி, (இணைப் பேராசிரியர், சமூக தொடர்பு ஒருங்கிணைப்பாளர்), முனைவர் டி.பாக்யராஜ், (நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்) மற்றும் முனைவர் எஸ்.ஆனந்த் ஞான செல்வம் (கல்வியியல் துறை உதவி பேராசிரியர்) ஆகியோர் இம்முகாமினை ஒருங்கிணைத்தனர்.
