திருவனந்தபுரம், பிப்.3 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கேரளத்துக்கு எவ்வகை யிலும் பயனளிக்காது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் “கேரளத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் போக்கையே இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒன்றிய பட்ஜெட் காட்டுகிறது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில அரசு நெடுங்காலமாக முன்வைத்துவரும், எய்ம்ஸ் மருத்துவமனை, அதிவேக ரயில் வழித்தடங்கள், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கான சிறப்பு நிதித் தொகுப்பு உள்பட முக்கிய கோரிக்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டுள்ளன.
கேரளத்துக்கான நிதி ஆணையத்தின் நிதி விடுவிப்பை அதிகரிக்கச் செய்யாததும், தொடர்ந்து அதே 41 சதவீத நிதிப்பங்களிப்பே தொடருமென் பதும் ஒன்றிய கொள்கைகளை கேள்விக் குறியாக்குகின்றன. பட்ஜெட்டில் கேரளா புறக்கணிக்கப்பட்டிருப்ப தற்கான விளக்கத்தை, இங்கிருந்து ஒன்றிய அமைச்சர் களாகியிருப்பவர்கள் தர வேண்டும்.
பெரும் முதலாளிகளுக்கு ஊக்குவிப்பளிக்கும் பொருளாதார கோட்பாட்டுடன் இந்த பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மிகுந்த வறுமைக்குள் தள்ளும் நோக்கத்தில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வந்தால் டில்லி காவல்துறையே பயப்படுகிறது
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா
புதுடில்லி, பிப்.3 மேற்கு வங் க மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.அய்.ஆர்.) மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியின் காரணமாக அம்மாநிலத்தில் 150 பேர் உயிரிழந்ததாக, முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா குற்றம் சாட்டியிருந்தார். எஸ்.அய்.ஆர். பணிக்குப் பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், உயிருடன் இருப்பவர்கள் பலரது பெயர்கள் இறந்தவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் இறந்ததாக அறிவித்த 50 பேருடன் மம்தா டில்லி சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-“தேர்தல் ஆணையத்துக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். வாக்காளர் பட்டியலில் இறந்ததாக அறிவிக்கப்பட்ட 50 பேருடன் நான் இங்கு வந்துள்ளேன். டில்லி காவல்துறையினர் யாரையும் பாதுகாக்க முடியாது. டில்லியில் குண்டுவெடிப்பு நடந்தபோது டில்லி காவல்துறை எங்கே சென்றது?
நாங்கள் அவர்களை விமர்சிக்கமாட்டோம். ஏனெனில் அது அவர்களின் தவறு அல்ல. டில்லி காவல்துறையினர் அடங்கிய ஒரு பேருந்து இங்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையருடன் நாங்கள் சந்திப்பு நடத்த வந்துள்ளோம். முறையாக அதிகாரப்பூர்வ அனுமதி பெற்ற பிறகே நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். டெல்லி காவல்துறையால் யாரையும் பாதுகாக்க முடியாது. டில்லியில் இன்னும் ஒரு நில பிரபுத்துவ அமைப்புதான் செயல்பட்டு வருகிறது” என்றார்.
