சிதம்பரம், பிப்.3 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரு முறை தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்தை தேசிய கீதத்திற்குப் பிறகு பாட வைத்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 87-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலை, அறிவியல் மற்றும் மொழியியல், பொறியியல், கல்வி, இசை, வேளாண், மருத்துவம், கடல் வாழ் அறிவியல் உள்ளிட்ட 10 துறைகளைச் சார்ந்த 2014 மாணவ, மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். அதேபோல் மறைமுகமாக 35,815 பேருக்கு என 36 ஆயிரத்து 829 பேருக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி வாழ்த்துகளை கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை ஆராய்ச்சி மாணவர் புஷ்பராஜ் பட்டங்களை வாங்கும் போது தமிழ்நாடு முதலமைச்சரின் படத்தை பட்டத்தின் மீது வைத்து ஆளுநர் கையால் வாங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாட வேண்டும். ஆனால் முதலிலும் முடிவிலும் 2 முறை தேசிய கீதம் பாடி விட்டு பின்னர் தமிழ் வாழ்த்தை பாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழ் வளர்த்த பல்கலைக்கழகத்தில் தமிழனின் கலாச்சாரங்களை ஆளுநர் மாற்றி உள்ளார். தமிழ்நாட்டில் துணைவேந்தராக தமிழ்நாடு முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தை ஆளுநர் புறக்கணித்து விட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களால் நான் பணம் உதவி பெற்று கல்வி பயின்று உள்ளேன். ஆகையால் நான் அவரிடம் பட்டம் வாங்கும் போது தமிழ்நாடு முதலமைச்சர் படத்தை பட்டத்தின் மீது வைத்துக் கொண்டு கையால் பட்டம் வாங்கியதாக நினைத்துக் கொண்டேன்’ என்றார். இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
