பெரம்பலூரில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமையை –
ஆர்.எஸ்.எஸ். மாடல் ஆட்சியின் கொடுமையை விளக்கி கழகத் தலைவர் உரை!
ஆர்.எஸ்.எஸ். மாடல் ஆட்சியின் கொடுமையை விளக்கி கழகத் தலைவர் உரை!
பெரம்பலூர், பிப்.1 சிறுபான்மையா? பெரும்பான்மையா? இங்கே எல்லாம் ஒரு பான்மை தான்! என்றும், இதுதான் சமதர்மம்! இது கூடாது என்பதுதான் மனுதர்மம்! என்றும், ‘திராவிட மாடலு’க்கும், மனு தர்மத்திற்கும் இடையிலான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
- பெரம்பலூரில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் பெருமையை – ஆர்.எஸ்.எஸ். மாடல் ஆட்சியின் கொடுமையை விளக்கி கழகத் தலைவர் உரை!
- தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., உரை
- கொள்கை எதிரிகளுக்கு என்றைக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்!
- ‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’
- 2026–லும் ‘திராவிட மாடல்’ அரசு தான்!
- பெரம்பலூர் மாவட்டத் தோழர்கள்
பெரம்பலூர் மாவட்டக் கழகம் – பகுத்தறி வாளர் கழகம் இணைந்து, ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ எனும் தலைப்பில் 31.01.2026 அன்று மாலை 5 மணியளவில், சஞ்சீவி ராயன் கோயில் தெருவில் உள்ள தேரடித் திடலில் தொடர் பயண பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தன. மேடையின் பின்புறம் கோயிலின் தேரும், முன்புறம் மாரியம்மன் கோயிலும், பக்கவாட்டில் அருள்மிகு அன்ன காமாட்சி அம்மன் கோயிலும், அடுத்து ஆஞ்சநேயர் கோயில் ஆகியவை ஒரு தீபகற்பம் போல அமைந்திருக்க, மேடையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராஜ் தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார்.
லால்குடி மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், ஆசிரியர் முருகானந்தம், தோழர் இலியாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் வெ.ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெ.இரமேஷ், இந்திய தொழிலாளர் கட்சித் தலைவர் ஈஸ்வரன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் செ. துரைராஜ், வி.சி.க. மண்டலச் செயலாளர் இரா.ஸ்டாலின், வி.சி.க. மாவட்டச் செயலாளர் ந.கிருஷ்ணகுமார், தி.மு.க. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்
ஆ.இராசா எம்.பி., உரை
ஆ.இராசா எம்.பி., உரை
நிறைவாக உரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு முன்னதாக மேனாள் ஒன்றிய அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா அவர்கள் உரையாற்றினார். முன்னதாக கழகச் சொற்பொழிவாளர் பூவை.புலிகேசி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், மாவட்டக் காப்பாளர் அக்ரி ஆறுமுகம், தி.மு.க.பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். பரப்புரை தொடர் பயணத்தின் ஒருங்கிணைப்பாளரும், கழக மாநில ஒருங்கிணைப்பாளருமான ஒரத்தநாடு இரா.குணசேகரன் இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்து, அவற்றை வாங்கிப் படிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
தொடர்ந்து பெரியார் உலகம் நிதி அளிப்பு நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட கழகம் சார்பில், மேலும் நிதியைத் திரட்டி வழங்குவோம் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டது.
இரவு 7 மணி அளவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா மற்றும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இருவரும் ஒன்றாக மேடைக்கு வருகை தந்தார்கள். இருவரையும் ஒரு சேரக் கண்டதும் உற்சாகமும், எழுச்சியும் ஒன்றிணைந்து மாவட்டக் கழகத்தின் சார்பில் மட்டும் அல்ல, பொதுமக்களும் மயிர்க்கூச்செரியும் வகையில் கொள்கை ஒலி முழக்கங்களுடன் வரவேற்று மனநிறைவடைந்தனர். அடுத்து மாவட்டக் கழகம் சார்பில் கழகத் தலைவருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களுக்கும், ஆ.இராசா அவர்கள் கழகத் தலைவருக்கும், இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கழகத் தலைவருக்கும் என்று அடுத்தடுத்து மரியாதை செய்தனர். நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
கொள்கை எதிரிகளுக்கு என்றைக்கும்
சிம்ம சொப்பனமாக இருப்பவர்!
சிம்ம சொப்பனமாக இருப்பவர்!
கழகத் தலைவர் தனது உரையை, ‘‘ஒரு காலத்தில் பெரம்பலூர் தொகுதி எப்படி இருந்தது? இப்போது எப்படி மாற்றப்பட்டு இருக்கிறது! அன்றைக்கு இங்கிருக்கும் கிராமங்களுக்கு ஓட்டு கேட்டு போனவர்கள் செருப்பு அணிந்து கொண்டு போக முடியாது. அதே பெரம்பலூரைத்தான் இன்றைக்கு தலைகீழாக மாற்றி இருக்கிறார்கள் அந்தப் பெருமை கொள்கை எதிரிகளுக்கு என்றைக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கக் கூடிய ஆ.இராசா அவர்களுக்கு உண்டு’’ என்று பலத்த கைதட்டல்கள் மற்றும் பெருத்த ஆரவாரங்களுக்கிடையே தொடங்கினார்.
‘‘அனைவருக்கும்
அனைத்தும்!’’
அனைத்தும்!’’
‘‘தண்டனைக்குரிய பகுதி என்று ஒன்று உண்டு என்றால் அது பெரம்பலூர்தான். இன்று விரும்பிக் கேட்டு மாறுதல் பெற்று வரக்கூடிய அளவுக்கு மாற்றிய ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!” என்று, இரண்டே நிகழ்வுகளைக் கூறி, பெரம்பலூரின் நூறாண்டு கால சமூக வரலாற்றை விவ ரித்துவிட்டார். அந்த சமூக வரலாற்றின் பின்னடைவுகளுக்குக் காரணம் எது என்று குறிப்பிட வந்தவர், ‘‘இதோ மனுதர்மம்’’ என்று புத்தகத்தை எடுத்துக் கட்டினார். தொடர்ந்து, ‘‘இதுதான் படிக்கட்டு ஜாதி முறைகளை உண்டாக்கியது’’ என்றும், ‘‘அதை கடவுளே உண்டாக்கினார்’’ என்றும், ‘‘கடவுள் உண்டாக்கியதை மனிதன் மாற்ற முடியாது’’ என்றும், ‘‘அதனால்தான் நாம் உரிமையற்று அடிமைகளாக வாழ்ந்தோம்’’ என்று மனு தர்மத்தின் விளைவை விவரித்தார். அடுத்து, ‘‘இதைத் தலைகீழாக மாற்றிய இயக்கம் தான் திராவிடர் இயக்கம்! நாம் ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்று சொன்ன பிறகுதான் ‘‘எல்லாம் எங்களுக்கே’’ என்று இருந்தவர்கள் அலறினார்கள். நம்மிடையே சிறுபான்மையா? பெரும்பான்மையா? என்றெல்லாம் இல்லை. இங்கே இருப்பது ஒரு பான்மைதான்!’’ என்று அடுக்கிக் கொண்டே சென்றதும் கைதட்டல்களும், ஆரவாரமும் அந்த இடத்தை நிறைத்தன.
2026–லும்
‘திராவிட மாடல்’ அரசு தான்!
‘திராவிட மாடல்’ அரசு தான்!
மேலும் அவர், திராவிடர் இயக்கம் பெண்களின் உரிமைகளுக்காக முன்னெ டுத்த போராட்டங்களை விவரித்து, அன்றைக்கு அனைத்துக் கட்சிகளிலும் இருந்த ஸநாதனவதிகளால் தடுக்கப்பட்டுப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் நிறைவேற்ற முடியாததைக் கூட, திராவிடர் இயக்கத்தால், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டதை எடுத்துச் சொல்லி, இன்றைக்கு இருக்கும் ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விவரித்து, மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். ஆகவே, 2026–லும் ‘திராவிட மாடல்’ அரசு தான் மீண்டும் வரப்போகிறது என்று பலத்த கைதட்டல்கள், ஆரவாரங்கள் இடையே தமது உரையை நிறைவு செய்தார்.
முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள் பேசி முடித்ததும், முக்கியமான பணி இருப்பதாகவும், கூட்டம் முடிவதற்குள் திரும்பி வந்து விடுவதாகவும் கூறிச் சென்றார். சொன்னது போலவே கழகத் தலைவர் உரையை நிறைவு செய்வதற்குள் மேடைக்கு திரும்பவும் வருகை தந்தார். இருவரும் ஒன்றாக மேடையில் ஏறியதைப் போலவே ஒன்றாகவே மேடையில் இருந்து இறங்கினர். பொதுமக்கள், கழகத் தோழர்கள் எழுச்சிகரமாகவும், உற்சாகமாகவும் வரவேற்பளித்ததை போலவே இருவருக்கும் பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.
பெரம்பலூர் மாவட்டத்
தோழர்கள்
தோழர்கள்
வேலாயுதம், அருள்ராஜ், மணிமாறன், மதுபாலன், இராமு,காளிதாசன், சரவணன், தமிழரசன், மருத்துவர் இலட்சுமி, துரைசாமி, அண்ணாதுரை, சுகுமாறன் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் பொறுப்பாளர்கள், தோழர்கள், அரியலூர் மாவட்டத் தோழர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
