டேராடூன், ஜன. 31- உத்தர காண்ட் மாநிலத்தில் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
தபீஷ் அகமத் என்ற காஷ்மீர் இளைஞரிடம், கடை உரிமையாளர் உள்ளிட்ட சிலர் அவரது சுயவிவரங்கள் குறித்துக் கேட்டுள்ளனர். அவர் காஷ்மீரைச் சேர்ந்த இசுலாமியர் என்பது தெரிந்தவுடன், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இரும்புக்கம்பிகளால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் தபீஷ் அகமதின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞருக்கு உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 11 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வன்முறைச் சம்பவம் குறித்து உத்தரகாண்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக உத்தரகாண்ட், அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காஷ்மீர் வணிகர்கள் மற்றும் மாண வர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது அதிகரித்துள்ளது. “காஷ்மீர் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என ஜம்மு – காஷ்மீர் மாணவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
