பெங்களூரு, ஜன. 31- காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், அவர்களின் மனநலனை மேம்படுத்தவும் கருநாடக மாநில காவல்துறை ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. இனி வரும் காலங்களில் காவலர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாளன்று சிறப்பு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என அம்மாநில காவல்துறை இயக்குநர் (டிஜிபி) எம்.ஏ. சலீம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கருநாடக காவல்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பம்சங்கள்:
சிறப்பு விடுமுறை: காவலர்கள் தங்களது பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களைக் குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட இந்த சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்படுகிறது.
மன அழுத்த மேலாண்மை: 24 மணிநேரப் பணி, விடுமுறையற்ற சூழல் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து காவலர்களை விடுவிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
உடல் மற்றும் மனநலம்: இத்தகைய சலுகைகள் காவலர்களின் உடல்நலனைப் பேணவும், பணியில் அதிக உற்சாகத்துடன் ஈடுபடவும் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு காவலர்கள் மத்தியில் மட்டுமின்றி, அவர்களின் குடும்பத்தினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விழா காலங்களிலும், அவசர காலங்களிலும் ஓய்வின்றி உழைக்கும் காவலர்களுக்கு, வாழ்வின் முக்கியமான தருணங் களில் குடும்பத்துடன் செலவிட நேரம் ஒதுக்கித் தந்துள்ள இந்த அறிவிப்பு ஒரு “முன்னோடித் திட்டம்” என்று கருநாடக உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். காவலர்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, மற்ற மாநில காவல்துறையினரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
