புதுடில்லி, ஜன.29 நாடாளு மன்றக் கூட்டுக் கூட்டத்தில் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாக ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள வி.பி.ஜி. ராம்ஜி (VPG Ramji) சட்டம் குறித்துக் குடியரசுத் தலைவர் முர்மு தனது உரையில் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
இதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களின் கடும் எதிர்ப்பிற்கிடையே திரவுபதி முர்மு தொடர்ந்து உரையாற்றினார். இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்தப் புதிய சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏற்கனவே உள்ள மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தையே நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு ஒன்றிய அமைச்சர் ஜே.பி. நட்டா கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவர் அவையில் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் பேசும்போது, “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் சரியல்ல. அவர்கள் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தி விட்டனர். இந்தச் சம்பவத்திற்காகக் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொண்டு அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் செயலில் ஈடுபடலாமா?” என்றார்.
