சென்னை, ஜன.29 டில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி நேற்று (28.1.2026) சந்தித்து பேசினார்.
ராகுல் காந்தியுடன்
கனிமொழி சந்திப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று ஆளும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக திமுக – காங்கிரஸ் பிரமுகர்களிடையே கருத்து மோதல்கள் எழுந்துள்ளன.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று முன்தினம் (27.1.2026) அளித்த பேட்டியில், ‘‘கூட்டணி பேச்சு தொடர்பாக திமுகவின் பதிலுக்கு 2 மாதமாக காத்திருக்கிறோம். கூட்டணிப் பேச்சு இதுவரை தொடங்கவில்லை. திமுக தரப்பில் ஏன் இவ்வளவு தாமதம் என தெரியவில்லை’’ என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே, காங்கிரஸ் – திமுகவினரிடையே கருத்து மோதல் நிலவும் நிலையில், கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளில் சிலர், நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், டில்லியில் குடியரசுத் தலைவர் உரையுடன் மக்களவை கூட்டத் தொடர் நேற்று (28.1.2026) தொடங்கியது. அதில் பங்கேற்ற பின் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் நேற்று (28.1.2026) சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கையில் தேசிய அளவிலான அம்சங் களை சேர்ப்பது, நிர்வாகிகளின் மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பேச்சு வார்த்தை
அப்போது, தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு கூட்டணி பேச்சுவார்த்தைக்கான திமுக குழு விரைவில் அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப் படும். கருத்து வேறுபாடுகளை மறந்து 2 கட்சிகளும் தமிழ்நாடுத் தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ராகுலிடம் கனிமொழி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் சர்ச்சையான சூழலில், இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
