அட்லாண்டிக் கடலுக்கு அடியில் 9 மீட்டர் ஆழத்தில் மறைந்திருந்த 7,000 ஆண்டு பழைமையான மாபெரும் சுவர், பிரான்சு ஆராய்ச்சியாளர்களின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு, பழங்கால மனிதர்களின் பொறியியல் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது.
அட்லாண்டிக் கடலின் சீற்றமான அலைகளுக்கு அடியில், காலத்தின் சுவடுகளைத் தாங்கி நிற்கும் மாபெரும் கல் சுவர் கண்டறியப்பட்டு உள்ளது. மனித நாகரிகம் விவசாயத்தை கற்பதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், வேட்டையாடித் திரிந்த மனிதர்களால் கட்டப்பட்ட இந்த சுவர், வரலாற்றையே மாற்றி எழுதும் வல்லமை கொண்டது.
பிரான்சு நாட்டின் பிரிட்டானி கடற்கரைக்கு அப்பால் உள்ள ‘செயின்’ (Sein) தீவுப் பகுதியில் இந்தச் சுவர் கண்டறியப்பட்டது. வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், இதை முதலில் கண்டுபிடித்தது டைவர்ஸ் அல்ல; ஒரு புவியியலாளர்.
புவியியலாளர் யவ்ஸ் ஃபோகுவெட், கடலடி வரைபடங்களை ஆய்வு செய்தபோது, நேர்கோடான அமைப்பைக் கவனித்தார். இயற்கையான பாறைகள் ஒருபோதும் இவ்வளவு நேர்த்தியாக இருக்காது என்பதால், 2022 முதல் 2024 வரை நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வுகள் ஒரு மாபெரும் உண்மையைப் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன.
சுமார் 9 மீட்டர் ஆழத்தில், 120 மீட்டர் நீளத்திற்கு நீளும் அந்தச் சுவர், மனிதக் கைகளால் செதுக்கப்பட்டு அடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது. 20 மீட்டர் அகலமான அடிப்பகுதியைக் கொண்ட இந்தச் சுவர், மேல்நோக்கிச் செல்லச் செல்ல குறுகலாக (Tapering) மாறுகிறது. இதன் உச்சியில் இரண்டு நேர்க்கோடுகளில் மிகப் பெரிய கிரானைட் கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. இது சுமார் 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது. அதாவது, உலகப்புகழ் பெற்ற ‘கார்னாக்’ (Carnac) கற்களை விடவும் இது பழைமையானது. கனமான கிரானைட் கற்களைத் தூக்கி அடுக்க, அந்தக் காலத்திலேயே அந்தச் சமூகத்தினருக்கு இடையில் ஒரு வலுவான ஒருங்கிணைப்பும், திட்டமிடலும் இருந்திருப்பதை இது காட்டுகிறது.
இந்தச் சுவர் எதற்காகக் கட்டப்பட்டது என்பது குறித்து 2 சுவாரசியமான கருத்துகள் நிலவுகின்றன. கடலில் அலைகள் ஏறி இறங்கும்போது, மீன்களை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் சிக்க வைக்கும் ‘உணவு இயந்திரமாக’ செயல்பட்டிருக்கலாம். இது ஒரு பெரிய சமூகத்திற்கே உணவளிக்க உதவியிருக்கும். 7,000 ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகம் முடிந்து கடல் மட்டம் மெல்ல உயர்ந்தபோது, தங்கள் வாழ்விடத்தை காக்க ஒரு ‘தடுப்புச் சுவராக’ (Breakwater) இதைப் பயன்படுத்தியிருக்கலாம்.
இன்று சிறிய தீவாக இருக்கும் ‘செயின்’, அன்று தற்போதைய அளவை விட 14 மடங்கு பெரிய நிலப்பரப்பாக இருந்தது. அங்கு மக்கள் வாழ்ந்தார்கள், வேட்டையாடினார்கள், திருவிழாக்கள் நடத்தினார்கள். கடல் மட்டம் உயர்ந்தபோது, அவர்களின் வீடுகளும், பாதைகளும் கடலுக்குள் மூழ்கிப்போக, இந்த ஒரு கல் சுவர் மட்டும் காலத்தின் சாட்சியாக எஞ்சி நிற்கிறது.
பிரிட்டானி மக்களின் வாய்மொழிக் கதைகளில் “கடலில் மூழ்கிய நகரங்கள்” மற்றும் “நீருக்கடியில் ஒலிக்கும் மணி ஓசைகள்” பற்றிய கதைகள் அதிகம். வெறும் கற்பனை என்று ஒதுக்கப்பட்ட இந்தக் கதைகள், உண்மையில் நம் முன்னோர்கள் கடலால் இழந்த தங்கள் நிலங்களைப் பற்றிய நினைவுகளாக இருக்கலாம் என்பதை இந்தச் சுவர் உறுதிப்படுத்துகிறது.
