சென்னை, ஜன. 28- டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி மற்றும் எம்ஆர்பி ஆகிய அமைப்புகள் மூலம் அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
தேர்வு வாரியங்கள்
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் அலுவலர்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும், ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வாயிலாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRP) மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
* டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் 5,307 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் 1,700 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRP) வாயிலாக ஏறத்தாழ 3,000 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விழா ஏற்பாடுகள்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ ருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதற்காகச் சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் மாபெரும் விழா ஒன்று நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அனைத்துத் துறைகளின் செயலாளர்களுக்கும் மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் சி.சமயமூர்த்தி அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
“புதிய பணியாளர்களுக்குப் பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தேர்வு வாரியங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணைகளைத் தயாராக வைத்திருக்குமாறு அந்தந்தத் துறைத் தலைவர்கள் மற்றும் பணி நியமன அலுவலர்களுக்குச் செயலாளர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
