நாகவுர், ஜன.28- ராஜஸ்தானின் நாகவுர் மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
குடியரசு தின விழா பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், மிகப்பெரிய அளவில் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நாகவுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிருதுல் கச்சவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வெடிமருந்துகள் சட்டவிரோதமாக வாங்கப்படுவதாகவும், பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்ட சிறப்புப் படை ஜனவரி 24இல் ஹர்சோர் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது அங்கு சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் கிலோ அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் டெட்டனேட்டர்கள், கம்பிகள் உள்ளிட்ட சுரங்க வெடிப்புக்குப் பயன்படுத்தப்படும் இதரப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக சுலைமான் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது வெடிப்பொருட்கள் சட்டம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், அவர் சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதச் சுரங்கங்களுக்கு இந்த வெடிப்பொருட்களை விநியோகம் செய்தது தெரியவந்துள்ளது. சுலைமான் கான் மீது ஏற்கனவே வெடிப்பொருட்கள் சட்டத்தின் கீழ் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன” இவ்வாறு மிருதுல் தெரிவித்தார்.
