சென்னை, ஜன. 27- மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்க்கனவு திட்டம்
இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக தமிழர் மரபும் – நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆளுமைகளைக் கொண்டு அமர்வுகளை நடத்தலாம். அதில் மொழிப்பற்றாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள் உள்ளிட்டோரை கொண்டு மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின் கீழ் பயிற்சிப் பட்டறைகள் நடத்தலாம்.
`அதன்படி நடப்பு கல்வியாண் டில் 1,200 ஆசிரியர்களை கண்டறிந்து பயிற்சி பட்டறைகள் நடத்தப்படும். அதை சென்னை, கோவை, திருச்சி, மதுரை என 4 மண்டலங்களாகப் பிரித்து மாதம் ஒன்று வீதம் 3 மாதங்களில் மொத்தம் 12 அணி களுக்குப் பயிற்சியளிக்கப்படும்.
ஓர் அணியில் சராசரியாக 100 நபர்களுக்கு 2 நாட்கள் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி ஆணையர் அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆணையரின் கருத்துருவை கவனமுடன் ஆய்வுசெய்த அரசு, மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் 1,500 ஆசிரியர் களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்கான அனுமதியும், அதற்கு செலவினமாக ஒரு நிகழ்வுக்கு ரூ.7 லட்சத்து 56,250 வீதம் 12 நிகழ்வுகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மாபெரும் தமிழ்க்கனவு திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் துறை சார்ந்த நிபுணர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களை கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
