ஆர்.ஜே.டி.யின் தேசிய செயல் தலைவராக தேஜஸ்வி நியமனம்!
பாட்னா, ஜன. 27- ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவராக பீகாரின் முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரின் தேசிய தலைநகர் பாட்னாவில் 24.1.2026 அன்று நடைபெற்ற ஆர்.ஜே.டி. கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கட்சியின் தலைவர் லாலு பிரசாத், மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது மகனுக்கு நியமனக் கடிதத்தை முறையாக வழங்கினார். இந்த நிகழ்வில் தேஜஸ்வியின் தாயார் ராப்ரி தேவியும் கலந்து கொண்டார்.
தேஜஸ்வியின் அரசியல் பயணம்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் இளைய மகனான தேஜஸ்வி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். தனது தந்தை கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டபோது கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளப்பட்டார். தேஜஸ்வி 2015 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராகோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2015இல் நிதிஷ் குமார் தலைமையிலான மகா கூட்டணியில், 26 வயதிலேயே பீகாரின் மிக இளைய துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
இந்த துணை முதலமைச்சர் பதவியும், 2017இல் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறியபோது திடீரென முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டணி முறிவு, தேஜஸ்வியை எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்புக்குத் தள்ளியது. அப்போது ஆர்ஜேடி அமைப்பை மீண்டும் வலுப்படுத்திய தேஜஸ்வி, தனது தேர்தல் பிரச்சார உத்திகளைக் கூர்மைப்படுத்தி, பீகாரில் என்.டி.ஏ கூட்டணிக்கு முதன்மையான சவாலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2020 சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியை வழி நடத்திய தேஜஸ்வி அதிகாரத்தை கைப்பற்றவில்லை யென்றாலும், தனிப்பெரும் கட்சியின் தலைவராக உருவெடுத்தார். 2022 ஆகஸ்டில் நிதிஷ் குமார் மீண்டும் மகா கூட்டணியுடன் இணைந்தபோது, தேஜஸ்வி இரண்டாவது முறையாகத் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார். 2024இல் நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் இணைந்ததால் இப்பதவி முடிவுக்கு வந்தது. 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். இருப்பினும், கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இந்தியாவின் பணக்கார நகரங்கள்! சென்னையின் ஜிடிபியின் வளர்ச்சி எவ்வளவு?
புதுடில்லி, ஜன. 27- இந்தியாவில் அதிக ஜிடிபி வளர்ச்சி கொண்ட நகரங்களில் பட்டியலில் 10ஆம் இடத்தில் விசாகப்பட்டினம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
9ஆம் இடத்தில் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
8ஆம் இடத்தில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 5.70 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
7ஆம் இடத்தில் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 5.80 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
6ஆம் இடத்தில் தெலங்கானாவில் மாநிலத்தில் உள்ள அய்தராபாத் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 6.23 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
சென்னை 5ஆம் இடத்தில் உள்ளது. சென்னையின் மொத்த ஜிடிபி மதிப்பு சுமார் 6.52-11.95 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
4ஆம் இடத்தில் பெங்களூரு நகரம் உள்ளது. பெங்களூருவின் ஜிடிபி மதிப்பு சுமார் 9.13-11.04 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
3ஆம் இடத்தில் மேற்குவங்கத்தில் உள்ள கொல்கத்தா நகரம் உள்ளது. இதன் ஜிடிபி மதிப்பு சுமார் 12.45 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த டாப் 10 பட்டியலில் 2ஆம் இடத்தில் டில்லி என்சிஆர் நகரம் உள்ளது. அதன் ஜிடிபி மதிப்பு சுமார் 24.37 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் மும்பை உள்ளது. இதன் ஜி.டி.பி. ரூ.25.73 லட்சம் கோடியாகும்.
