பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் போதைப் பொருள் கலாச்சாரம் தலை விரித்தாடுகிறது. குட்கா விளம்பரத்தைக் கிழித்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சட்ட மீறலும் நடந்துள்ளது. இந்நிலையில் சொந்தக் குறையை மறைக்க தமிழ்நாட்டைச் சாடுகிறார் மோடி!
மதுராந்தகத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாடு போதைப்பொருள் மய்யமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டியிருப்பது – அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் உள்துறையைக் கையில் வைத்திருக்கும் அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான மோடி தான் வகிக்கும் பதவிக்கானப் பொறுப்பை உணராமல் சான்றுகளே இல்லாத குற்றச்சாட்டுகளை ஒரு மாநிலத்தின் மீது சுமத்துவது அரசியல் அநாகரீகத்தின் உச்சம்!
பா.ஜ.க. மாநிலங்களில் நடப்பது என்ன? உண்மை நிலவரம் என்னவென்றால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், குறிப்பாக அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள் வழியாக வாரந்தோறும் டன் கணக்கில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதும், பிடிபடுவதும் தொடர்கதையாக உள்ளது. இளைஞர்களைச் சீரழிக்கும் வகையில் ஒரு திட்டமிட்டச் செயல்முறையை பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் கையாண்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
தென்னிந்தியாவிலும் – இந்தப் போக்கைப் புகுத்தும் முயற்சியாக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பல மாநிலங்களிலும் தடை செய்யப்பட்ட ‘குட்கா’ போன்ற போதைப்பாக்கு நிறுவனங்களின் விளம்பரங்கள் அரசுப் பேருந்துகளில் பகிரங்கமாக ஒட்டப்பட்டுள்ளன.
ஆந்திராவில் இதனைக் கண்டு கொதித்தெழுந்த முற்போக்குச் சிந்தனை கொண்ட இளைஞர்கள், சமூக அக்கறையுடன் அந்த விளம்பரங்களைக் கிழித்து எறிந்தனர். ஆனால், போதைப் பொருட்களைத் தடுப்பதற்குப் பதிலாக, அந்த விளம்பரங்களை அகற்றிய இளைஞர்கள் மீது “பொதுச்சொத்தை சேதப்படுத்தியதாக” வழக்குப்பதிவு செய்துள்ளது ஆந்திர அரசு.
சொந்தக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் போதையை ஊக்குவிக்கும் விளம்பரங்களை அனுமதித்துவிட்டு, தமிழ்நாட்டை விமர்சிப்பது பிரதமரின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
இதில் மட்டுமல்ல – எல்லாவற்றிலும் இவர்கள் போட்டு வருவது இரட்டை வேடம்தான். பாலியல் வன்கொடுமை என்று எடுத்துக் கொண்டாலும் பிஜேபி ஆளும் மாநிலங்கள்தான் முதலிடத்தில்.
2023ஆம் ஆண்டில்
ராஜஸ்தானில் – 5078 வழக்குகள்,
உத்தரப்பிரதேசத்தில் – 3516 வழக்குகள்,
மத்தியபிரதேசத்தில் – 2979 வழக்குகள்,
மகாராட்டிராவில் – 2930 வழக்குகள்,
தமிழ்நாட்டில் வெறும் 365 வழக்குகள்
2025ஆம் ஆண்டில் வழக்குகள் பதியப்பட்ட மாநிலங்களில் முதல் 5 இடங்களில் இருப்பதும் பிஜேபி ஆளும் மாநிலங்களே (டபுள் என்ஜின் சர்க்கார்) –உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, மகாராட்டிரா மாநிலங்கள்தான்! குறைவான மாநிலங்களின் பட்டியலில் புதுச்சேரி, நாகாலாந்து, தமிழ்நாடு என்ற நிலையே உண்மை. இவ்வாறு இருக்க தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சங்பரிவார்க் கூட்டம் ஒரே ராகத்தில் ஒப்பாரி வைக்கின்றன. இந்தப் பட்டியலில் ஒரு பிரதமரும் இருப்பது நாகரிகமானதல்ல! அரசியல் கண்ணோட்டப் போதை இல்லாமல் பார்வையைச் செலுத்தட்டும்!
