தான் பேசுகிற கூட்டங்களிலெல்லாம் மக்களைத் தம் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்!
பெரியார் சொன்னதையே பாடல் வரியாக்கினேன்;
புத்தகத் தலைப்பாக்கினேன்!
சென்னை, ஜன.26 தான் பேசுகிற கூட்டங்களிலெல்லாம் மக்களைத் தம் சொந்தப் புத்தியைக் கொண்டு சிந்திக்கச் சொன்னவர் பெரியார்! பெரியார் சொன்னதையே பாடல் வரியாக்கினேன்; புத்தகத் தலைப்பாக்கினேன்! என்றார் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜ் அவர்கள்
‘பெரியார் விருது’ வழங்கும் விழா!
கடந்த 17.1.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழாவும், பெரியார் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகன் உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
அந்த நூலைத் தொகுத்த திருநாவுக்கரசு என்பவர் எழுதுகிறார், ‘‘பெரியார்தான் இந்தக் குழப்பத்தைத் தீர்த்தார். அதற்குப் பின்தான் இங்கே இருந்த தமிழர்கள் எல்லோரும் குடியுரிமை பெற்றார்கள்’’ என்று எழுதுகிறார்.
தமிழர்களாகிய நாம், தோட்டத் தொழிலாளர்களாகவே நம்முடைய வாழ்க்கையைக் கழிக்கக் கூடாது!
அது மட்டுமல்ல, அங்கே போய் பெரியார் என்ன சொல்கிறார் என்றால், ‘‘படிங்கள்’’ என்று சொல்கிறார். கல்வி வேண்டும் நமக்கு என்று சொல்கிறார். ‘‘சீனர்களைப் பாருங்கள், சீனர்கள் வேறு நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்தவர்கள்; சீனர்கள் எப்படி முன்னேறி இருக்கிறார்கள் என்று பாருங்கள். தமிழர்களாகிய நாம், தோட்டத் தொழிலாளர்களாகவே நம்முடைய வாழ்க்கையைக் கழிக்கக் கூடாது. நீ இப்போது தோட்டத் தொழிலாளியாக இருக்கிறாயா? உன்னுடைய பையனும், பெண்ணும் அதே மாதிரி தோட்டத் தொழிலாளியாக இருக்கக் கூடாது. அவர்களுக்குக் கல்வி கொடு, அவர்கள் அடுத்த நிலைக்குப் போக வேண்டும். சீனர்களைப் போல முன்னேற வேண்டும்’’ என்று சொல்கிறார். மேலும் அவர் சொல்கிறார், ‘‘பெண்கள் நிறைய பேர் திரைப்படம், நாடகம் பார்ப்பதற்குப் பணம் செலவழிக்கிறீர்கள். அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்துப் பிள்ளைகளின் கல்விக்குச் செலவழியுங்கள்’’ என்கிறார்.
‘‘தொழிலாளர்களாக இருக்கக்கூடிய ஆண்கள் எல்லோரும், கள்ளுக்கடைக்குச் சென்று உங்களுடைய சம்பாத்தியத்தைச் செலவு செய்கிறீர்கள். அதை விட்டு விட்டு, உங்களுடைய பிள்ளைகளின் படிப்புக்குச் செலவு செய்யுங்கள். எல்லோரும் கல்வி கற்க வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார்.
மலேசியாவிற்குச் சென்ற பெரியார், தொடர்ந்து பேசியது இந்த மூன்று விஷயங்களைத்தான். ‘கடவுள் இல்லை’ என்று பேசி, பிரிவினையை ஏற்படுத்தி விடுவார் என்று பயந்தவர்களுக்கெல்லாம் ரொம்ப ஆச்சரியமாகப் போயிற்று. பெரியார் அதைப் பற்றி ஒன்றுமே பேசவில்லை. அப்படிப் பேசினாலும் ‘ஒருவனே தேவன்’ என்று சொன்னார்.
அவருடைய கருத்து கடவுள் இல்லை என்பதாக இருந்தாலும்கூட, அந்தச் சூழலில் எது தேவையோ, அதை அங்கே முன்னிறுத்திப் பேசி இருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. அப்படித்தான் என்னால் பெரியாரைப் புரிந்துகொள்ள முடிந்தது. என்னுடைய அறிமுகத்தைத் தொகுத்திருந்த இந்தப் படத்தில், பிரின்ஸ் அவர்கள் சொன்னார், ‘‘அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது’’ என்று. அது பெரியார் சொன்ன வாசகம். அதைத்தான் நான் புத்தகத்துக்கான தலைப்பாக நான் வைத்தேன். ஜெயகாந்தன் ஒரு கூட்டத்தில், பெரியாரை விமர்சனம் செய்து பேசிய போது, தோழர்கள் வந்து சொல்கிறார்கள். ‘‘இவர் இப்படி மனம் புண்படுகின்ற மாதிரிப் பேசுகிறார்’’ என்று!
பொது வாழ்க்கையில் ஈடுபடக்கூடியவர்கள் மனம் புண்படக்கூடாது!
அதற்குப் பெரியார், ‘‘பொது வாழ்க்கையில் ஈடுபடக்கூடிய நாம், அப்படியெல்லாம் மனம் புண்படக்கூடாது’’ என்று சொல்கிறார். ‘‘இந்தப் புண்படுதல் என்பது என்ன?’’ என்ற கேள்வியே நமக்கு எழுகிறது. யார் வேண்டுமானாலும் தங்களுக்குப் பிடிக்காததை, ‘‘இது என்னைப் புண்படுத்துகின்றது என்று சொல்லிவிடலாம். அதற்கு என்ன அளவுகோலை வைக்க முடியும்? பெரியாருடைய பேச்சில் இருந்துதான், நான் அந்த வாக்கியத்தை எடுத்து, அந்த நூலுக்குத் தலைப்பாக வைத்தேன்.
பெரியார் அவர்கள், அந்தந்த இடத்திற்குத் தகுந்தது போல, நாகரிகத்தோடு பேசக்கூடியவர். அவர், இப்படி பேசினார், அப்படிப் பேசினார் என்று சொன்னால், அவர் கருத்துச் சார்ந்துதான் பேசுவார். பார்ப்பனர்களைத் திட்டிப் பேசினார் என்று சொன்னால், பார்ப்பனர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது? என்று பார்த்து, அதற்காகத்தான் அவர் அப்படிப் பேசுகிறார். பார்ப்பனர்கள் பல பேருக்கு, அவர் உதவி செய்த நிகழ்வுகள் எல்லாம்கூட உண்டு.
ஒரு பார்ப்பனரின் வீட்டு மனையைத் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டார் என்று அவர் வந்து புகார் சொன்னபோது, அவரை அழைத்துத் திட்டி, அவருக்கான இடத்தைக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னவர் பெரியார். அதற்காக அந்தப் பார்ப்பனர் பழங்களை வாங்கிக்கொண்டு, பெரியார் திடலுக்கு வந்து, பெரியாரைச் சந்திக்க வருகிறார்.
அப்போது பெரியார் அவர்கள், ‘‘நீங்கள் என்னத்துக்கு இவ்வளவு தூரம் இங்க வறீங்க’’ என்று சொல்லி, அந்தப் பழங்களை எல்லாம் ‘‘நீங்களே வைத்துச் சாப்பிடுங்கள்’’ என்று சொல்லி, போக்குவரத்துக்குக் காசு கொடுத்து அனுப்பியவர் பெரியார். ஆகவே, பெரியார் அவர்கள், எல்லா பார்ப்பனர்களையும் எதிர்க்கவில்லை. ஜாதிக்கு ஆதரவாக இருக்கக்கூடிய, ஜாதியை ஆதரிக்கக்கூடிய, மத உணர்வைத் தூண்டக்கூடிய பார்ப்பனர்களுக்குத் தான் எதிராக இருந்தார்.
அதனால் பெரியாரை இப்படியெல்லாம் பல கோணங்களில் நாம் பார்க்க வேண்டும். சென்ற வாரத்தில் நான் புத்தகக் காட்சிக்குச் சென்றபோது, நிவேதிதா லூயிஸ் அவர்கள் எழுதிய ‘‘முதல் மொழிப்போரில் பெண்கள்’’ என்ற புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்றேன். 1938 இல் நடந்த முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய நூல் அந்த நூல். அந்தப் போரில் ஈடுபட்ட பெண்களைப் பற்றி விவரித்து எழுதுகிறார். அதில், பெண்களுடைய பங்கு எவ்வளவு இருந்தது என்று விளக்கியுள்ளார்.
பெண்கள் பொதுவெளிக்கு வர வேண்டும் என்று சொன்னால், அவர்களுக்குத் தனியிடம் ஒதுக்க வேண்டும்!
அந்தப் புத்தகத்தை நான் படிக்கும் போது, எனக்கு இரண்டு விஷயங்கள் தோன்றின. அதாவது இயக்கத்தில் பெண்களை ஈடுபடுத்துவதில் பெரியார், எவ்வளவு கவனமாக இருந்தார் என்பது அந்தப் புத்தகம் மூலமாகத் தெரிகிறது. அந்தக் காலகட்டத்தில் கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் எல்லாம் கூட்டமாகப் போகும்போது, பெண்களுடைய நகையை, சங்கிலியை அறுப்பது, பெண்களை இடிப்பது, ஆபாசமாகப் பேசுவது போன்ற பல நடவடிக்கைகளில், பல பேர் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்போது பெரியார் என்ன சொல்கிறார், ‘‘நம்முடைய கூட்டங்கள் எல்லாவற்றிலுமே பெண்களுக்குத் தனியிடம் ஒதுக்க வேண்டும்’’ என்கிறார். பெண்களை வெளியே வரவழைக்க வேண்டும் என்பதற்காக, நாம் இட ஒதுக்கீட்டைக் கூட ஏன் பெண்களுக்குக் கேட்கிறோம்? அவர்கள் முன்னேறி வரவேண்டும் என்பதற்காகத்தான் அவர் இவ்வாறு செய்கிறார். பெண்கள் பொதுவெளிக்கு வர வேண்டும் என்றால், அவர்களுக்குத் தனியிடம் ஒதுக்க வேண்டும்.
ஆகவே, அக்காலக்கட்ட மாநாட்டுக் கூட்டங்களில், மொழிப்போர் கூட்டங்களில் எல்லாம் பெண்களுக்குத் தனிப்பகுதி ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பே பத்திரிகையில் கொடுக்கப்படுகிறது. அதேபோல, மொழிப்போரில் ஈடுபட்டு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிறைக்குச் சென்ற தோழர்களைப்பற்றி எழுதும்போது, பெண்கள் எத்தனை பேர் என்று குறிப்பிட்டு, அதைச் செய்தியாக வெளியிடுகிறார். அதேபோல குழந்தை களோடு சிறைக்குச் சென்ற பெண்கள் எல்லாம் உண்டு. சிறைக்குச் சென்ற அந்தப் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்? அங்கே குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள முடிகிறதா? அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று அடிக்கடி விசாரிக்கிறார். இந்தத் தகவல்களை எல்லாம், அந்தப் புத்தகத்தின் மூலமாக நான் அறிய முடிந்தது. பெண்ணுரிமைக்காகப் பாடுபட்டவர் பெரியார் என்று சொல்லும்போது, சின்ன சின்னச் விஷயங்க ளில் எல்லாம் அவர் எந்த அளவிற்குக் கவனம் செலுத்தி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இப்படி படித்துக் கொண்டு வரும்போதுதான், பெரியாரை நான் புரிந்து கொண்ட ஒரு விதத்தில், ‘‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’’ என்ற பாடலை எழுதினேன். அந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணாவுக்காகத் தான் எழுதினேன். நான், அம்பேத்கர் பற்றி ஒரு பாட்டு எழுதி, டி.எம்.கிருஷ்ணா பாடினார். அடுத்துப் பெரியார்பற்றி ஒரு பாடல் எழுதுவோம் என்று எனக்குத் தோன்றியது. ஆ.இரா.வேங்கடாசலபதியும் அதை வலியுறுத்தினார். நாங்கள் ஒரு தயக்கத்தோடுதான் டி.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டோம், ‘‘கிருஷ்ணா நீங்கள் அம்பேத்கர் பற்றி பாடியிருக்கிறீர்கள்; பெரியார் பற்றிப் பாடுவீர்களா, எழுதிக் கொடுத்தால்?’’ என்று.
உடனே கிருஷ்ணா சொன்னார், ‘‘ஏன் பாட மாட்டேன்? நீங்கள் எழுதிக் கொடுங்கள், பாடுகிறேன்’’ என்று சொன்னார்.
உண்மையில் எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சி யும்தான். அவர் ஒரு பார்ப்பனர்; அந்தச் சமூகத்தில் பிறந்தவர். கருநாடக சங்கீத வித்வான். அவர் கருநாடக சங்கீதத்தில், பெரியாரைக் கொண்டு வரவேண்டும் என்பதற்கு உடனே ஒப்புதல் கொடுத்தார். நான் எழுது வதற்குத் தான் கொஞ்சம் ‘டைம்’ எடுத்துக் கொண்டேன்.
கருநாடக சங்கீத கீர்த்தனை அமைப்பில் பெரியாரை எப்படிச் சொல்வது?
பெரியாரைப் பற்றி நிறைய பாடல்கள் ஏற்கெனவே இருக்கின்றன. ‘‘பெரியார் ஒருவர்தான் பெரியார்’’ என்ற காசி ஆனந்தன் பாட்டு. இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன. புகழ் பெற்ற பாடல்கள் உண்டு. கருநாடக சங்கீதக் கீர்த்தனை அமைப்பில் பெரியாரை எப்படிச் சொல்வது? என்ன விதத்தில் அறிமுகப்படுத்துவது? என்று நான் கொஞ்சம் காலம் யோசித்தேன்.
பெரியார் பல உரைகளில், அந்த உரையைத் தொடங்கும் போதோ அல்லது முடிக்கும் போதோ என்ன சொல்லுவார் என்றால், ‘‘நான் சொல்றேன்னு, நீ அப்படியே எல்லாத்தையும் நம்பாதே, ஏத்துக்காதே! உன்னுடைய சொந்தப் புத்தியைக் கொண்டு யோசிச்சுப் பார்த்து, சரின்னு பட்டா ஏத்துக்கோ’’ என்று சொல்லுவார். அவருடைய பேச்சுக்களில் தொடர்ந்து இதுபோன்று சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு இது முக்கியமாகப்பட்டது.
‘‘சிந்திக்கச் சொன்னவர்
பெரியார்!’’
ஒவ்வொரு மனிதனுமே, தன்னுடைய சொந்த புத்தியைக் கொண்டு, ‘யோசித்து நீ முடிவெடு’ என்று ஒவ்வொருவரிடமும் முடிவை விடுகிறார் பாருங்கள்; அதுதான் பெரியார்! ஆக, அதனால்தான், ‘‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’’ என்ற ஒரு பல்லவியை நான் எழுதினேன். அந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணா பாடி னார். அந்தப் பாடலை நீங்கள் எல்லாம் கேட்டீர்கள். அந்தப்பாட்டை நாங்கள் வெளியிட்ட போது, அப்போது ஆசிரியர் அய்யா அவர்கள் சிதம்பரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார். இந்தப் பாட்டு வந்திருக்கிறது என்றவுடன், அங்கே அந்தத் திரையில் அந்தப் பாட்டு முழுவதையும் அந்தக் கூட்டத்திலேயே ஒளிபரப்பிப் போட்டுக் காட்டினார்கள். அந்தச் செய்தியையும் நாங்கள் பார்த்தோம். உண்மையிலேயே மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சியாக இருந்தது.
எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களையும் நாம் சக மனிதர்களாகதான் நினைப்போம்!
கருநாடக சங்கீதத்தில், பார்ப்பன சமூகத்தில் பிறந்த ஒரு பாடகர் முதல் முறையாக பாடினார் என்கிற சிறப்பும் அதற்கு உண்டு. அதற்குப் பிறகு, டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்குத் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் பாராட்டுச் செய்தது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கியது. ஆகவே, எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களையும் நாம் சக மனிதர்களாகதான் நினைப்போம். அவர்கள் எதிரி கிடையாது. அவர்கள் கொண்டிருக்கக்கூடிய கருத்து எப்படிப்பட்டது? அது பிரிவினையைத் தூண்டக் கூடி யதா? மேல் – கீழ் என்று பார்க்கக் கூடியதா? என்பதுதான் முக்கியம்.
ஆசிரியர் அவர்களுக்கும், அனைவருக்கும் நன்றி!
அந்த அடிப்படையில், இந்த நினைவுகள் எல்லாம், இந்த விருதையொட்டி எனக்கு வந்தன. உண்மையில், ‘‘சிந்திக்கச் சொன்னவர் பெரியார்’’ என்று நான் எழுதியதினால்தான் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
இந்த விருதினை எனக்கு வழங்கியமைக்காக, ஆசிரியர் அவர்களுக்கும், அனைவருக்கும் நன்றி தெரி வித்து விடைபெறுகிறேன்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு எழுத்தாளர் பெருமாள் முருகன் உரையாற்றினார்.
