* ‘நீட்’ என்னும் பெயரில் சமூகநீதியை ஒழிக்கும் சூழ்ச்சி! n மருத்துவக் கல்லூரியில்
நீட் வந்தது போதாது என்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது சமூகநீதியை ஒழிப்பதே!
மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழிதோண்டியது போதாதென்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது முற்றிலும் சமூகநீதியை ஒழிப்பதே! இதனைக் கண்டித்து வரும் 31 ஆம் தேதி, தமிழ்நாடெங்கும் கழக மாவட்டங்களில் ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து, திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இது அப்பட்டமான முதலைப் பிடிவாதம்!
வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோ தெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பங்கேற்பதைக் கட்டாயமாக்கி தேசியத் துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளது.
‘நீட்’ (NEET) வந்தது முதலே
கல்வியாளர்கள் உள்படக் கடும் எதிர்ப்பு!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவக் கல்லூரி களில் படிப்பதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக, தனிச் சட்டத்தைக் கொண்டு வந்து, எல்லா மாநிலங்களிலும் நீட் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரி இடங்களை ஒதுக்க வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறது! இது மாநிலங்களின் உரிமையை நசுக்குவதாகும் என்று கல்வியாளர்களும், சட்ட நிபுணர்களும் தொடர்ச்சியாக பலமுறை எச்சரித்துள்ளனர்.
தமிழ்நாடு 4 முறை நீட் விலக்குச் சட்டங்களைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பியது.
கடந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2017 இல் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்கள் ஒன்றிய அரசால் குப்பைக் கூடையில் வீசப்பட்டன. அந்தச் சட்டங்களுக்கு என்ன ஆயிற்று என்றே தெரி யாமல், உண்மை மூடி மறைக்கப்பட்டு, பின்னர் வெகு காலம் கழித்து அச் சட்டங்கள் முன்பே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டன என்ற தகவல் வெளியானது.
தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து
நீட்டை எதிர்த்து மசோதா நிறைவேற்றம்!
அதன் பின்னர் ‘நீட்’ தேர்வு விலக்கிற்கு முழு ஆதரவு அளித்து, 2021 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்தனர். தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்தினை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய போது, அவர் அதீத காலதாமதம் செய்து அவர் திருப்பி அனுப்பிய போதும், அதே சட்டத்தை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பியது. பின்னர் சட்டப்படி அதனை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டம் நடத்திய போது, வேறு வழியில்லாமல் குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைத்தார். ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசின் சொல்படி நடக்கும் குடியரசுத் தலைவர், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட் விலக்கு மசோதாவை நிராகரித்தார்.
பாரா மெடிக்கல் சர்வீஸ் பிரிவுகளிலும்
‘நீட்’ தேர்வாம்!
இன்றும் ‘நீட்’ என்னும் மருத்துவக் கல்வித் தடையைத் தகர்க்கத் தமிழ்நாடு போராடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இத்தகைய நுழைவுத்தேர்வை வேளாண் கல்லூரிகளுக்கு கொண்டுவருவதற்கும் இந்திய ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு காரணமாக இணைய முடியாத சூழலில் இருந்தவர்கள், பாரா மெடிக்கல் சர்வீசஸ் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து மருத்துவத் துறைக்கு சேவையாற்றி வந்தனர்; தற்போது அதனையும் இல்லாதொழிக்க ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்கிறது.
தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகளும் அதன் காரணமாக உருவாகும் ஆயிரக்க ணக்கான மருத்துவர்களும், மருத்துவப் படிப்புகளுக்கான தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப் படிப்புகளில் பயிலும் மாணவர்களும் தான் தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புப் பலமாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம். கிராமப்புறங்களிலிருந்தும், ஏழை எளிய குடும்பங்களிலிருந்தும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும் ஏராளமானோர் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து படித்து, பயிற்சி பெற்று, உரிய தகுதியுடன் மருத்துவ பணிகளில் ஈடுபடுகின்றனர்.
தனியார் பயிற்சி மய்யங்களைக்
கொழுக்க வைக்கவே நீட் தேர்வு!
இலவசமாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கும் பள்ளிக் கல்வியை முக்கியமற்றதாக்கி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயில வேண்டிய – தனியார் பயிற்சி மய்யங்களுக்கு ஆள் பிடித்துவிடும் வேலையைத் தான் ‘நீட்’ தேர்வு செய்து கொண்டிருக்கிறது. இதன்மூலமாகப் பண முதலைகளுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் தொழிலாக தனியார் பயிற்சி மய்யங்கள் பெருகி இருக்கின்றன அவற்றை இன்னும் விரிவாக்கி இன்னும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், அந்தப் பண முதலைகளின் வாயில் போய் சேர வேண்டும் என்பதற்காகத்தான் துணை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வும் அறிவிக்கப்பட்டிருப்பது கொடுமை அல்லவா?
நீட் தேர்வைக் கொண்டு வரும்போது அதற்கான காரணங்கள் என்றும், நியாயங்கள் என்றும் ஒன்றிய பாஜக அரசு எவற்றையெல்லாம் சொன்னதோ, அவை யெல்லாம் பொய் என்பது அப்பட்டமாக அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மருத்துவ மேல் படிப்பிற்கு நீட் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கினாலும் சேர்க்கப்படுவது எப்படி?
- “ஏழை, எளிய மக்களுக்கான மருத்துவக் கல்வி வாய்ப்பை நீட் தேர்வு வழங்கும்” என்றார்கள். ஆனால் பல லட்சக் கணக்கில் பணம் கொடுத்து பல ஆண்டுகள் பயிற்சிப் பெற்று மட்டுமே நீட் தேர்வை எழுத முடியும் என்ற நிலை அவர்களின் பொய்யை அம்பலப்படுத்தியிருக்கிறது.
- “நீட் தேர்வு ஊழலை ஒழிக்கும். தனியார் கல்விக் கட்டணக் கொள்ளையைக் குறைக்கும்” என்றார்கள். நீட் தேர்வு நடைபெறும் மய்யங்களிலும், அதன் வினாத்தாள்களிலும், தேர்வு எழுத வரும் போலி நபர்களினாலும் ஏராளமான முறைகேடுகளும் ஊழல்களும் ஒவ்வோராண்டும் பெருகி வருகின்றன. தடுப்பதற்கு வழியின்றி தலைகுனிந்து நிற்கிறது ஒன்றிய அரசு.
தனியார் கல்வி நிறுவனங்கள் அது வரை வாங்கி வந்த பெரும் தொகையை, இப்போது சட்டபூர்வமாக வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
- “தகுதியை மேம்படுத்துவதுதான் நீட் தேர்வின் அடிப்படை நோக்கம்” என்று வாயளந்தார்கள். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண்ணுக்கும் குறைவாகப் பெற்றவர்களுக்கும்கூட (0 பெர்சண்டைல் என்பது 0 மதிப்பெண்ணுக்கும் குறைவானது) கூட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ மேல்படிப்பில் இடம் கிடைக்கிறது – இதுதான் அவர்கள் கூறும் தகுதி – திறமை போலும்!
மருத்துவக்கல்லூரி திறந்திருக்கிறது – கையில் பணப் பையோடு வாருங்கள் என்று இப்போது ஏலம் போட்டுத் திரிகிறார்கள்.
- அயலக இந்தியர்களுக்கான இடங்களைக் கோடிக்கணக்கில் உள்ளூர் இந்தியர்களுக்கு விற்கிறார்கள் தனியார் மருத்துவக் கல்லூரியினர்!
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில் (EWS) இட ஒதுக்கீடுக்குக் குழி பறிப்பு!
- பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்ற பெயரிலான அரியவகை உயர்ஜாதி ஏழைகளுக்கான(!) இடஒதுக்கீடு (EWS) என்ற பிரிவில் ஒன்றரைக் கோடி ரூபாய் (ரூ.1,50,00,000) கொடுத்து உயர்ஜாதி ஏழைகள் மருத்துவக்கல்லூரி இடத்தை வாங்குகிறார்கள் என்ற செய்தி ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டில் வெளிவந்துள்ளது.
இந்த லட்சணத்தில்தான் ‘நீட்’ தேர்வைத் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் கட்டாயமாக்குகிறது ஒன்றிய பாஜக அரசு! இதற்கான கடுமையான எதிர்ப்புகளை ஒன்றிய அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே நீட் தேர்வுக்கு எதிரான தொடர் போராட்டங்களை நடத்தி வரும் திராவிடர் கழகமும் தமிழ்நாட்டின் பல்வேறு அமைப்புகளும் இதைக் கண்டித்து தொடர் போராட்டத்திலும் பிரச்சாரத்திலும் இறங்க வேண்டிய கட்டாயத்தை இன்றைய பாஜக அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
ஜன. 31 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய அரசின் இத்தகைய போக்குகளைக் கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக வரும் ஜனவரி 31 சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவம், துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள், அரசியல், சமுதாய அமைப்பினர் ஆகியோரையும் இணைத்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று இதுகுறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இது தொடக்கத்தில் அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். இது அரசு ரீதியான அணுகுமுறை என்றாலும் இதன் நியாயத்தை உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்ளும் பக்குவம் ஒன்றிய பாஜக அரசுக்கும் அதன் பிரதமர் மோடிக்கும் இல்லை என்பதைக் கடந்த கால நிகழ்வுகள் காட்டுகின்றன.
இது தேர்தல் பிரச்சினையல்ல. மாணவர்களின் கல்வி, மக்களின் வாழ்வாதார, அன்றாட மருத்துவப் பிரச்சினை. இதில் அனைத்துக் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். தவறினால், அதன் விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கவே செய்யும்.
ஒன்றுபட்டு பேரெதிர்ப்பைக் காட்டி விரட்டுவோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.1.2026
