பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்கள்
கோவி.செழியனை தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை, ஜன.25 உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடந்த கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அத்துறையின் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்து ஆளுநருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு நியமனம் செய்தது.
அவர் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டின் கலாச்சாரம் – பண்பாடு, கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விமர்சனம் செய்வதும், கேளி செய்வதுமாக இருந்து வருகின்றார். மேலும் ஆட்சியை குறை கூறும் வகையில் பல்வேறு சர்ச்சையான பேச்சுகளை மேடைகளில் பேசி வருகிறார். இதற்கு அப்போதே தமிழ்நாடு அரசும், அமைச்சர்கள், அதிகாரிகள் பதில் அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடி, ஆளுநர் கூறும் கருத்துகளுக்கு நேரடியாக பதிலடி கொடுத்து வந்தார். மேலும், பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர் என்ற முறையில் அமைச்சர் க.பொன்முடி ஆளுநரின் பட்டமளிப்பு விழாக்களை தவிர்க்கத் தொடங்கினார். சட்டப்பேரவையில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இதனை எதிர்த்து ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்தவர்கள் தங்களின் பதவி காலம் முடிந்து அந்த பதவிகளில் இருந்து விடுபட்டனர். அதற்கு பிறகு புதிய துணை வேந்தர்களை நியமிப்பதில் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை நீடித்து வருவதால் இன்னும் அப்பதவிகள் காலியாக உள்ளன. இந்நிலையில் ஒரு சில பட்டமளிப்பு விழாக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வந்தார்.
அதேபோல், ஆளுநரும் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி வருகிறார். அண்மையில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தேசிய கீதம் தமிழ் மொழி வாழ்த்துக்கு முன்னதாக இசைக்கப்படவில்லை என கூறி, ஆளுநர் உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார். ஆளுநரின் அடாவடித்தனமும், அராஜக போக்கும் அதிகரித்த வண்ணமாக உள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (24.1.2026) சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று 307 மாணவிகளுக்கும், 392 மாணவர்களுக்கும் என மொத்தம் 699 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அசாம் மாநில கால்நடை மருத்துவக் கல்லூரி துணை வேந்தர் நிரஞ்சன் கலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார்.
ஏற்ெகனவே, தமிழ்நாட்டில் மிகப்பழமை வாய்ந்த பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தின் 167ஆவது பட்டமளிப்பு விழா ஜன.22ஆம் தேதி நடந்தது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை, புறக்கணிப்பதாகவும் மாணவர்களுக்கு ஆளுநர் பட்டமளிக்க தகுதி அற்றவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் கால்நடை மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
