சென்னை, ஜன. 24- அரசுப் பணிகளில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இனி தமிழ் வழியில் கல்வி படித்தமைக்கான முன்னுரிமை வழங்கும் திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (23.1.2026) கேள்வி நேரம் முடிந்ததும், அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் குறித்த திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார். அதன் நோக்க காரண உரையில் கூறியிருப்பதாவது: அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப் பணியிடங்களிலும் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் சட்டம், 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின்கீழ் முன்னுரிமை நியமனத்துக்கு தகுதியற்றவர்கள் என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தெளிவு படுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இனிவரும் காலங்களில் புதிதாக பணிக்கு சேருபவர்களுக்கு மட்டுமே தமிழ்வழியில் கல்வி பயில்வதற்கான முன்னுரிமை வழங்கப்படும். ஏற்கெனவே, அரசுப் பணியில் நியமிக்கப்பட்ட நபர்கள், மிகை ஊதியம் கொண்ட பதவிகளில் குறிப்பிட்ட காலிப் பணியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எனினும், 2010ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ் வழி முன்னுரிமையில் நடைபெற்ற பணிநியமனங்கள் செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவு இன்று (24.1.2026) ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
திருப்பரங்குன்றம் கோயில் தீபத்தூண் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜன.24- மதுரை திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ‘தூணில் தீபம் ஏற்ற அனுமதி உண்டு; ஆனால் பொதுமக்களுக்கு அங்கு அனுமதி கிடையாது’ எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
தற்போது இந்து தர்மா பரிஷித் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்த புதிய மனுவில், ‘திருப்பரங்குன்றம் முருகன் கோயில் முழுவதையும் ஒன்றிய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்; மலையுச்சியில் உள்ள தீபத்தூணில் 24 மணி நேரமும் விளக்கு எரிய வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் வி.எம்.பஞ்சோலி ஆகியோர் கொண்ட அமர்வு, இது தொடர்பாக ஒன்றிய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆகியவை பதிலளிக்க வேண்டும் என தாக்கீது பிறப்பித்து வழக்கினை ஒத்திவைத்தது. அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், ‘உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளோம்’ என விளக்கம் அளிக்கப்பட்டது.
