மதுரை, ஜன.23 தமிழர்களின் நாகரிகத்தை உலகுக்குத் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டில் மேலும் 6 இடங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
தொல்லியல் துறை சார்பில் ‘தமிழ்நாடு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்’ என்ற தலைப்பில் மூன்று நாட்கள் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கம் மதுரையில் நேற்று (22.1.2026) தொடங்கியது. கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
அறிவியல் முறையிலான ஆய்வுகள்
“தமிழர்களின் பாரம்பரியத்தை உறுதிப் படுத்தும் அதே நேரத்தில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான அறிவியல் அணுகுமுறையை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட நெல் மற்றும் சிறுதானியங்கள், 3,500 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு நன்செய் மற்றும் புன்செய் சாகுபடி முறைகள் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட 90 சதவீத குறியீடுகள் சிந்துவெளிக் குறியீடுகளுடன் ஒத்துப்போகின்றன. பண்டையகால சூழலைப் புரிந்துகொள்ள தாவரவியல் மற்றும் மண் சார்ந்த ஆய்வுகள் பல நிறுவனங்களுடன் இணைந்து நடைபெறுகின்றன.
அமையவுள்ள புதிய அருங்காட்சியகங்கள்
ஏற்கனவே நெல்லை மற்றும் கீழடி ஆகிய இடங்களில் 2 அருங்காட்சி யகங்களை அமைத்துள் ளோம். அதனைத் தொடர்ந்து தற்போது கீழ்க்கண்ட இடங்களில் புதிய அருங்காட்சியகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது:
அழகன்குளம்: நாவாய் அருங்காட் சியகம் தஞ்சாவூர் & கங்கைகொண்ட சோழபுரம்: சோழர் அருங்காட்சியகங்கள் தர்மபுரி: நடுகல் அருங்காட்சியகம் கொடுமணல்: நொய்யல் அருங்காட் சியகம் மாமல்லபுரம்: கலாச்சார அருங்காட்சியகம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்ட, கற்காலம் முதல் தற்காலம் வரை மனித நாகரிகம் வளர்ந்து வந்தது தொடர்பான அகழாய்வுப் பொருட்களின் கண்காட்சியை அமைச்சர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். பாறைகுளத்தில் உள்ள கற்கருவிகள் மற்றும் பழங்கற்கருவிகள் தயாரிக்கும் இடங்கள் குறித்த புத்தகங்கள் வெளி யிடப்பட்டன.
இந்நிகழ்வில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவர் பாலகிருஷ்ணன், துணை மேயர் நாகராஜன், தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வி மற்றும் ஆய்வு ஆலோசகர் ராஜன், தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.”
