புதுடில்லி, ஜன.22- சுமார் 22,000 ரயில்வே குரூப்-டி பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 31 முதல் தொடங்கி மார்ச் 2 வரை நடைபெறும் என தேதிகள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயில் பணிபுரியக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி யுள்ளது. சுமார் 22,000 ‘லெவல்-1’ (குரூப்-டி) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பத் தேதிகளை ரயில்வே தேர்வு வாரியம் (RRB) தற்போது மாற்றியமைத்துள்ளது.
ஒன்றிய வேலைவாய்ப்பு அறிவிப்பு (CEN No. 09/2025) படி, இந்தத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 21ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள திருத்தப்பட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பப் பதிவு வரும் ஜனவரி 31, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 2, 2026 அன்று இரவு 11:59 மணி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு (Class 10) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட தொழில்நுட்பப் பணிகளுக்கு அய்டிஅய் (ITI) முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். வயது வரம்பைப் பொறுத்தவரை, ஜனவரி 1, 2026 அன்று விண்ணப்பதாரர்கள் 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசின் விதிமுறைப்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் களுக்கு 7ஆவது ஊதியக் குழுவின்படி ஆரம்ப அடிப்படைச் ஊதியமாக ரூ.18,000 மற்றும் இதர படிகளும் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்துப் பெண் விண்ணப்பதாரர்களுக்கும் சலுகையாக ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கான தகுதியானவர்கள் மூன்று நிலைகளில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதலில் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (CBT) நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு உடற்தகுதித் தேர்வு (PET) மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். மண்டல வாரியான விரிவான காலிப்பணியிட விவரங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் அடங்கிய முழுமையான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
