ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பேன்’ : கனிமொழி!
மதம், மொழி, அடையாளங்களை கடந்து நிற்கும் ஒரு கலைஞனை திட்டமிட்டு குறி வைப்பதும், அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மவுனமும் வருத்தமளிப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் நாட்டின் இசையை உலகிற்கு கொண்டு சென்ற படைப்பாளி மட்டுமல்ல; இந்தியாவின் கலாச்சார விழுமியங்களின் முதன்மையான தூதர் என்று கூறியுள்ளார். தான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு துணையாக நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாதம் ரூ.2,000
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் தமிழ்நாடு அரசு ரூ.2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு வட்டார அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
ஒன்றிய அரசு ஊழியர்களின் ஊழல் வழக்கை
மாநில காவல் துறை விசாரிக்கலாம்
உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஜன.21 ஒன்றிய அரசின் பணியாளர்களுக்கு எதிரான ஊழல் வழக்கை மாநில காவல் துறை விசாரிக்க முடியும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு பதிவு செய்த வழக்கை எதிர்த்த ஒன்றிய அரசின் ஊழியர் நாவல் கிஷோர் மீனா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததுடன். ஒன்றிய அரசின் ஊழியர் நாவல் கிஷோர் மீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்யவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தேர்தல் எங்கே?
பா.ஜ.க. தேசியத் தலைவருக்கான தேர்தலை விமர்சித்த காங்கிரஸ்
புதுடில்லி, ஜன.21 பாஜக கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நேற்று மனுதாக்கல் நடைபெற்றது. நிதின் நபின் மட்டுமே மனுதாக்கல் செய்ததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று முறையாக முடிவு அறிவிக்கப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பாஜக-வின் புதிய தேசியத் தலைவர் அறிவிக்கப்பட்டதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கெர்ரா கூறியதாவது:- தேர்தல் எங்கே. நீங்கள் இதை தேர்தல் என்று ஏன் அழைக்கிறீர்கள்?. நீங்கள் முதலில் தலைவரை அறிவிக்கிறீர்கள். அதன்பின் தேர்தல் நடைபெறும் என சொல்கிறீர்கள். அதன்பின் தேர்தல் இல்லை. இந்த தேர்தலில் தனக்கு பங்கு இல்லை. தன்னால் ஆதிக்கம் செலுத்தக்கூட முடியவில்லை. எந்தவிமான முறைகேடும் செய்ய முடியவில்லை என்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக விரும்புகிறார். இவ்வாறு பவன் கெர்ரா தெரிவித்தார்.
