புதுடில்லி, ஜன.21- மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நேற்று (19.1.2026) உத்தரவிட்டது.
ஆட்சேபனைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் இந்தச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது.
