வயது: 52 பிறந்த நாடு: அர்ஜென்டினா
உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி அய்ன்ஸ்டீன், ஈர்ப்பு அலைகள் எனப்படும் Gravitational field waves, இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க வேண்டும் என்றார். நீளம், உயரம், அகலம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் (3 dimensions) கொண்டது வெளி (Space); இந்த முப்பரிமாண வெளியுடன், ஒற்றைப் பரிமாணம் கொண்ட காலத்தை (Time) பிணைத்து, நான்கு பரிமாணங்கள் கொண்ட தொடரகமாக (Continnum) இந்தப் பிரபஞ்சத்தில் கால வெளி (Space time) இருக்கிறது. இந்தக் கால வெளியில்தான், கோள்கள் சுழற்சி, நட்சத்திர வெடிப்பு, கருந்துளைகள் மோதல் போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. பொருட்கள் நகரும்போது, கால வெளி பரப்பு அதிர்ந்து, ஈர்ப்பு அலைகள் தோன்றும். இவை எல்லாம் அய்ன்ஸ்டீனின் தத்துவம் வழங்கிய படிப்பினைகள்.
இந்த ஈர்ப்பு அலைகள் உண்மை யிலேயே இருக்கின்றனவா என்பதை நிறுவ நூறாண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் திணறி வந்தார்கள். கடந்த 1993ஆம் ஆண்டில் இருந்து அலைகளை நிறுவ, தீவிர முயற்சிகள் நடந்து வந்தன. அப்போது கேப்ரியலா கொன்ஸாலே கல்லூரி மாணவி. அவர் அர்ஜென்டினாவின் கொர்டோபா பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் அங்கு, அய்ன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தைக் கரைத்துக் குடித்திருந்த பேராசிரியர்களும், ஆய்வாளர்களும் இருந்தார்கள்.
விளைவாக, அய்ன்ஸ்டீனின் கோட் பாட்டால் கவரப்பட்டார் கேப்ரியலா. அதே துறையில் ஆராய்ச்சியாளராக விளங்கிய ஜார்ஜ் புலின் (Jorge Pullin) என்பவரைத் திருமணம் செய்து கொண்டு, அவருடன் மேற்படிப்பு நிமித்தமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள சிராகூஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், கேப்ரியலா. அங்கு பீட்டர் சால்சன் (Peter Saulson) என்ற அவரது ஆசிரியர், ஈர்ப்பு அலைகளை அளக்கும் லைகோ (LIGO) என்ற கருவியை அமைக்கும் திட்டம் பற்றி அறிமுகப்படுத்தினார்.
தனது முயற்சி பற்றி: ‘அந்தக் கருவி, பல மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய ஒரு கருந்துளை, கால வெளியில் ஏற்படுத்தும் அதிர்வுகளின் விளைவாகத் தோன்றும் ஈர்ப்புக் கவர்ச்சி அலைகளை, பூமியில் உள்ள ஒரு கருவி பதிவு செய்யும் என்ற தகவல் என்னை ஆட்கொண்டது. அந்த முயற்சியில் நான் பங்குபெற வேண்டும் என்று அன்று முடிவெடுத்தேன்’, என்கிறார் கேப்ரியலா. கடந்த 2016ஆம் ஆண்டில், ஈர்ப்பு அலைகள் இருப்பதை உறுதி செய்த 1000 விஞ்ஞானிகள் கொண்ட குழுவின் தலைவர், இவர்.
